ஆட்டநிர்ணய விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் ஒப்படைப்பு

145

2011 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை சட்ட ஆலோசனைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விளையாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த கருத்து தொடர்பில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்கக்கார, அரவிந்த டி சில்வா மற்றும் உபுல் தரங்க ஆகியோரிடம் விளையாட்டில் மோசடிகளைத் தவிர்க்கும் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவினால் கடந்த வாரம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது. 

உலகக் கிண்ண ஆட்டநிர்ணய விசாரணைகள் நிறைவு

இதனிடையே, வாக்குமூலம் வழங்குவதற்காக 2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சதமடித்த முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன கடந்த 3ஆம் திகதி விசேட விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும், வேறொரு நடவடிக்கை காரணமாக மஹேலவிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கையை பிற்போடுவதாக விசேட விசாரணைப் பிரிவு அவருக்கு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இன்மையினால் 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக கடந்த 3ஆம் திகதி மாலை பொலிஸ் ஊடகப் பிரிவினால் அறிவிக்கப்பட்டது

இதேநேரம், விளையாட்டில் மோசடிகளைத் தடுக்கும் விசேட பொலிஸ் பிரிவினால் கையளிக்கப்பட்ட விசாரணை அறிக்கை தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்வதற்காக அந்த அறிக்கையை நேற்றுமுன்தினம் (08) சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்க விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்

எனவே, ஆட்டநிர்ணயம் தொடர்பில் சமர்பிக்கப்பட்ட குறித்த அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபரினால் வழங்கப்படுகின்ற ஆலோசனைகளைத்தான் விளையாட்டுத்துறை அமைச்சு நடைமுறைப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

எதுஎவ்வாறாயினும், பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணைகள் முற்றிலும் தவறானது என தெரிவித்த முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, உரிய ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்தால் விசாரணைகளை முடிவுக்குக் கொண்டு வர முடியாது எனவும், இது தொடர்பில் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிக்கும் படி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 122

இதேவேளை, இதுதொடர்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜூன ரணதுங்க அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கையில்,

”2011 உலகக் கிண்ணத்தில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றது தொடர்பில் குற்றச்சாட்டுகள் இருந்தால் நிரூபித்துக் காட்ட வேண்டும். அப்போது தான் விசாரணை நடத்த முடியும் என்பதை நான் பகிரங்கமாகவே கூறினேன். கட்டாயமாக விசாரணை நடத்துங்கள். வீரர்களுக்கு தொடர்பில்லை என்றே முன்னாள் அமைச்சர் கூறினார்.” 

”ஆனால், விசாரணைகளுக்கு முதலாவதாக வீரர்களையே அழைத்தனர். மூன்று நாட்களுக்குள் இந்த விசாரணைகளை முடித்து வீரர்களை விடுவித்துள்ளனர். மஹிந்தானந்த அளுத்கமகே தம்மிடம் இருக்கும் ஆதாரங்களை இந்த நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தவறுதலாக அப்படி ஒன்றைக் கூறிவிட்டேன், மன்னித்துக்கொள்ளுங்கள் என்று அவர் தெரிவிக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டார்

சங்கா, மஹேலவை விசாரணை செய்ய நான் கூறவில்லை – மஹிந்தானந்த அளுத்கமகே

இதுஇவ்வாறிருக்க, விளையாட்டில் மோசடிகளைத் தவிர்க்கும் சட்டத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்து அதை நிறைவேற்றுவதில் மிகப் பெரிய போராட்டம் நடத்திய முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான ஹரீன் பெர்னான்டோ, இந்த விசாரணை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,  

”2019 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட விளையாட்டில் மோசடிகளைத் தவிர்க்கும் சட்டமானது 2011ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒரு சம்பவத்திற்கு பொருந்தாது. ஆனால் 2020ஆம் ஆண்டில் அதுதொடர்பில் செய்யப்பட்ட தவறான முறைப்பாட்டுக்காக தண்டணை வழங்குவதற்கான விதிமுறைகள் அதில் உள்ளன.”

”எனவே, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பொய் என சட்டமா அதிபரினால் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு குறித்த சட்டத்தின் கீழ் 3 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.” என அவர் தெரிவித்தார்.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க