செல்சியின் சம்பின்ஸ் லீக் எதிர்பார்ப்பில் பின்னடைவு: நபோலியை சமன் செய்த பார்சிலோனா

65

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் 16 அணிகள் சுற்றின் இரு முதல் கட்டப் போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (26) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,

பார்சிலோனா எதிர் நபோலி

அன்டோனியோ கிரீஸ்மன் எதிரணி மைதானத்தில் பெற்ற தீர்க்கமான கோல் மூலம் இத்தாலி கழகமான நபோலிக்கு எதிரான போட்டியை பார்சிலோனா  1-1 என சமன் செய்தது. 

வெஸ்ட் ஹாமை வென்று கிண்ணத்தை நெருங்கும் லிவர்பூல்

நீண்ட காலத்திற்குப் பின் ப்ரீமியர் லீக் பட்டத்தை வெல்ல காத்திருக்கும் லிவர்பூல்…

பார்சிலோனா அணிக்கு நெருக்கடி மிக்க போட்டியாக அமைந்த இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் பொனால்டி பெட்டிக்கு வெளியில் இருந்து டெரீஸ் மெர்டன்ஸ் அபாரமாக உதைத்த பந்து மார்க் அன்ட்ரே டெர் ஸ்டெஜனை கடந்து கோலாக மாறியது. 

இதன்மூலம் நபோலி அணிக்காக அதிக கோல் பெற்ற மரெக் ஹசிக்கின் சாதனையை பெல்ஜியம் வீரர் மெர்டன்ஸ் சமன் செய்தார். இருவரும் தலா 121 கோல்களை பெற்றுள்ளனர்.  

சொந்த மைதானமான ஸ்டாடியோ சான் பவோலோவில் சிறப்பாக ஆடிய நபோலி ஆரம்பத்தில் பார்சிலோனாவுக்கு நெருக்கடி கொடுத்தது. எனினும் 57 ஆவது நிமிடத்தில் பார்சிலோனாவால் பதில் கோல் திருப்ப முடிந்தது. நெல்சன் செமெடோ வழங்கிய பந்தை கிரீஸ்மன் சிறப்பாக நகர்த்தி கோலாக மாற்றினார்.   

எனினும் போட்டியின் கடைசி நிமிடத்தில் வைத்து ஆர்டோ விடால் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று வெளியேற்றப்பட்டதால் பர்சிலோனா 10 வீரர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

89 ஆவது நிமிடத்தில் வைத்து பபியோ ருயிஸ் மீது தவறிழைத்த விடாலுக்கு எதிராக நபோலி அணி வீரர் எதிர்ப்பை வெளியிட விடால் தனது தலையால் அவரின் முகத்தை தாக்கினார். இதனால் அவர் அடுத்தடுத்து இரண்டு மஞ்சள் அட்டைகளை பெற்றார். 

அதேபோன்று கணுக்கால் காயத்தால் கெரார்ட் பிக்குவுக்கு பதில் வீரர் அழைக்கப்பட்டமை பார்சிலோனா அணிக்கு மற்றொரு பின்னடைவாக இருந்தது. 

ஸாஹிரா – புனித பேதுரு கல்லூரிகளின் இறுதிப் போட்டி நாளை

ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் மூன்றாம்…

பார்சிலோனா அணி லா லிகா தொடரில் வரும் ஞாயிற்றுக்கிழமை ரியல் மெட்ரிட்டுக்கு எதிரான கிளாசிக்கோ போட்டியில் ஆடவிருக்கும் நிலையிலேயே பிக்கு உபாதைக்கு உள்ளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் போட்டியில் களமிறங்கிய லியோனல் மெஸ்ஸி தனது 141 ஆவது சம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் ஆடினார். இதன்மூலம் இந்தத் தொடரில் அதிக போட்டிகளில் ஆடிய வீரர்கள் பட்டியலில் மன்செஸ்டர் யுனைடட்டின் ரியான் கிகிஸ் உடன் ஐந்தாவது இடத்தை பகிர்ந்துகொண்டார். இதில் 177 போட்டிகளில் ஆடியிருக்கும் ஸ்பெயின் வீரர் இகார் கசிலாஸ் முதலிடத்தில் உள்ளார். 

காலிறுதிக்கு முன்னேறும் அணியை தீர்மானிக்கும் 16 அணிகள் சுற்றின் இரண்டாம் கட்டப் போட்டியில் பார்சிலோனா தனது சொந்த மைதானமான நூ கேம்பில் வரும் மார்ச் 18 ஆம் திகதி நபோலி அணியை எதிர்கொள்ளவுள்ளது. 

செல்சி எதிர் பெயர்ன் முனிச்

தனது சொந்த மைதானமான ஸ்டாம்போர்ட் பிரிட்ஜில் ஜெர்மனி கழகமான பெயர்ன் முனிச்சிடம் 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த செல்சி அணியின் சம்பியன்ஸ் லீக் எதிர்பார்ப்பு மங்கியுள்ளது. 

ஆட்டத்தின் முதல் பாதியில் பெரும்பாலான நேரம் பெயர்ன் வீரர்களிடமே பந்து சுழன்றது. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் சம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்கு திரும்பி இருக்கும் செல்சி கோல்காப்பாளர் வில்லி கபலரோ எதிரணியின் பல கோல் முயற்சிகளையும் தடுத்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது. 

1000ஆவது போட்டியில் விளையாடிய ரொனால்டோ: அடுத்தடுத்து 4 கோல்கள் பெற்ற மெஸ்ஸி

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா மற்றும் இத்தாலி சீரி A தொடர்களின் முக்கிய…

எனினும், இரண்டாவது பாதியில் பெயர்ன் தனது கோல் வாய்ப்புகளை தவறவிடவில்லை. குறிப்பாக பெயர்ன் முன்கள வீரர் ரொபர்ட் லெவன்டோஸ்கியின் மீதே அனைவரினதும் பார்வை இருந்தது. அவர், சேர்ஜ் கினப்ரி இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை பெற உதவினார்.      

51 ஆவது நிமிடத்தில் செல்சி பின்கள வீரர் கெசர் அஸ்பிவிகுடா வழுக்கியதைப் பயன்படுத்தி லெவன்டோஸ்கி பந்தை கோல் கம்பத்திற்கு அருகில் இருந்த கினப்ரியிடம் வழங்க அவர் கோலாக மாற்றினார்.  

3 நிமிடங்களின் பின் இந்த ஜோடி செல்சியின் எதிர்பார்ப்பை முழுமையாக சிதறடித்தது. லெவன்டோஸ்கி வழங்கிய பந்தை பெனால்டி பெட்டியின் இடது பக்கம் இருந்து கினப்ரி கோலாக மாற்றினார்.    

இந்நிலையில் 76 ஆவது நிமிடத்தில் லெவன்டோஸ்கி சொந்தமாக ஒரு கோலை திருப்ப பெயர்ன் அணி 3-0 என முன்னிலை பெற முடிந்தது. 

இந்நிலையில் லெவன்டோஸ்கியுடன் மோதலில் ஈடுபட்ட செல்சி பின்கள வீரர் மார்கோஸ் அலொன்சோ 83 ஆவது நிமிடத்தில் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டது அந்த அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.   

செல்சி தனது சொந்த மைதானத்தில் 3 கோல்களை விட்டுக் கொடுத்திருக்கும் நிலையில் 16 அணிகள் சுற்றின் இரண்டாவது கட்டத்தில் மார்ச் 18 ஆம் திகதி பெயர்ன் முனிச்சின் கோட்டையான அலியன்ஸ் அரங்கில் அந்த அணியை எதிர்கொள்ளவுள்ளது.  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<