நூலிழையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ரியெல் மெட்ரிட்

179
Real Madrid vs Bayern Munich 2nd leg
@Reuters

பயென் முனிச் அணியுடனான பரபரப்பான இரண்டாம் கட்ட அரையிறுதியை 2-2 என்ற கோல் வித்தியாசத்தில் சமநிலையில் முடித்த நடப்பச் சம்பியன் ரியெல் மெட்ரிட் அணி ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ரொனால்டோவின் கோலின்றி ரியல் மெட்ரிட் முதல்கட்ட அரையிறுதியில் வெற்றி

பயென் முனிச் அணியுடனான ஐரோப்பிய சம்பியன்ஸ்..

ஜெர்மனியின் பயென் முனிச் இரண்டு கட்ட அரையிறுதிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும் கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டது. மற்றும் எதிரணிக்கு வாய்ப்புகளை வழங்கியமை அந்த அணி மீண்டும் ஒருமுறை அரையிறுதியுடன் வெளியேற காரணமாகியுள்ளது. இதில் இரண்டு கட்ட அரையிறுதிகளிலும் 4-3 என்ற மொத்த கோல் வித்தியாசத்திலேயே ரியெல் மெட்ரிட் நூலிழையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதன்போது முனிச் கோல்காப்பாளர் ஸ்வேன் உல்ரீச் செய்த பாரிய தவறு இரண்டாவது கட்ட அரையிறுதியை ரியெல் மெட்ரிட்டுக்கு சமநிலையில் முடிக்க உதவியமை குறிப்பிடத்தக்கது.  

ரியெட் மெட்ரிட்டின் சொந்த மைதானமான சான்டியாகோ பெர்பியோ அரங்கில் இலங்கை நேரப்படி இன்று (02) அதிகாலையே இரண்டாம் கட்ட அரையிறுதியில் இவ்விரு அணிகளும் மோதின. ரியெல் மெட்ரிட் முதல் கட்ட அரையிறுதியில் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோதும் முனிச் அணி இரண்டாவது கட்ட அரையிறுதியில் ஒரு கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை இருந்தது.

இதற்கு ஏற்ப 3ஆவது நிமிடத்தில் வைத்து பயென் முனிச், மெட்ரிட் தலைவர் சேர்ஜியோ ராமோஸ் செய்த சிறிய தவறை பயன்படுத்தி கோல் புகுத்தியது. கொரன்டின் டுலிசோ வலது மூலையில் இருந்து கோலை நோக்கி அடித்த பந்தை ராமோஸ் தடுத்தபோதும் அது சரியாக அருகில் இருந்த ஜோசுவா கிம்மிச்சின் கால்களின் அருகே செல்ல, அவர் அதனை கோலாக மாற்றினார்.

எனினும் ரியெல் மெட்ரிட் விரைவாகவே அதற்கு பதில் கோல் புகுத்தி சமாளித்தது. இம்முறை ரொனால்டோ அன்றி கரிம் பென்செமாவே ரியல் மெட்ரிட் அணியின் கோல் இயந்திரமாக மாறினார். 11 ஆவது நிமிடத்தில் மார்செலொ பரிமாற்றிய பந்தை எதிரணி கோல் கம்பத்தின் மிக நெருங்கிய தூரத்தில் வைத்து பெற்ற பென்செமா அதனை தலையால் முட்டி கோலாக மாற்றினார். இதன்மூலம் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையானது.  

முதல் பாதி: ரியெல் மெட்ரிட் 1 – 1 பயென் முனிச்

இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்த விரைவிலேயே முனிச் அணி கோல் காப்பாளர் செய்த தவறு ஒன்று ரியெல் மெட்ரிட் அணிக்கு சாதகமாக அமைந்தது. 46ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லைக்கு சற்று வெளியே இருந்து முனிச் பின்கள வீரர் கோல் காப்பாளருக்கு பந்தை தட்டிவிட்டபோது அதனை தடுப்பதற்கு முனிச் கோல் காப்பாளர் ஸ்வேன் உல்ரீச்சுக்கு போதிய அவகாசம் இருந்தது. ஆனால் அளவுக்கு அதிகமாக முன்னால் வந்த அவர் பந்தை தட்டிவிட முயன்றபோது அது தவறி அவரையும் தாண்டிச் சென்றுவிட்டது.

இதனால் அங்கே முன்னேறிச் சென்றிருந்த பென்செமா எந்த எதிர்ப்பும் இன்றி வலைக்கு பந்தை தட்டிவிட்டு ரியெல் மெட்ரிட் அணியை முன்னிலை பெறச் செய்தார்.

அதன் பின்னர் பதில்கோல் புகுத்துவதற்கு ஆக்கிரமிப்பு ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்திய பயென் முனிச் அணி 63ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றை போட்டது. ஜேம்ஸ் ரொட்ரிகஸ் எதிரணி கோல் கம்பத்திற்கு மிக நெருங்கிய தூரத்தில் இடது கோணர் திசையில் இருந்து லாவகமாக பந்தை வலைக்குள் புகுத்தினார்.

>> சலாஹ்வின் அபாரத்தால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை அதிகரித்த லிவர்பூல்

முன்னாள் ரியெல் மெட்ரிட் வீரரான ரொட்ரிகஸ் சம்பியன்ஸ் லீக் வரலாற்றில் மெட்ரிட் அணிக்காகவும் அதற்கு எதிராகவும் கோல் புகுத்திய ஏழாவது வீரராக பதிவாகியுள்ளார். இதற்கு முன்னர் இவ்வாறான ஒரு சாதனையை படைத்த வீரர்களில் டேவிட் பெகம் மற்றும் அல்வாரோ மொராட்டா ஆகியோரும் உள்ளனர்.   

போட்டி கடைசி கட்டத்தை நெருங்கும்போது மேலும் பரபரப்பு எட்டியது. முனிச் அணி கோல் ஒன்றை புகுத்தினால் அதற்கு இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் அவ்வணி வேகத்தை அதிகரித்தது.

இதன்போது பயென் முனிச் அணிக்கு வெற்றி தேடித்தரும் கொரென்டின் டொல்லிசா மற்றும் தோமஸ் முல்லரின் முயற்சிகளை ரியெல் மெட்ரிட் கோல்காப்பாளர் கெய்லோர் நாவாஸ் மற்றும் மட்ஸ் ஹம்மல் அருமையாக தடுத்தனர். இதன்மூலம் இறுதி விசில் ஊதப்படும்போது போட்டி 2-2 என்ற கோல் வித்தியாசத்தில் சமநிலையுற்றது.

சினேடின் சிடேன் முகாமையின் கீழான ரியெல் மெட்ரிட் கடும் அழுத்தங்களை எதிர்கொண்டபோதும் அந்த அணி 1998இல் ஜுவான்டஸ் அணிக்கு பின்னர் தொடர்ச்சியாக மூன்று முறை ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணியாக சாதனை படைத்தது.

>> தோல்வியுறாத அணியாக லா லிகா பட்டத்தை வென்றது பார்சிலோனா

அத்துடன் எந்த ஒரு அணியை விடவும் ரியல் மெட்ரிட் 16 தடவைகள் ஐரோப்பிய கிண்ணம் அல்லது சம்பியன்ஸ் லீக் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் 2013ஆம் ஆண்டு ஐரோப்பிய சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற பயென் முனிச் கடந்த ஐந்து பருவங்களில் நான்கு தடவைகள் அரையிறுதியுடன் பரிதாபமாக வெளியேறியுள்ளது.  

ரியல் மெட்ரிட் அணி அடுத்து, மே 26ஆம் திகதி உக்ரைனின் கீவ் நகரில் நடைபெறவிருக்கும் சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் தம்மை எதிர்த்து ஆடும் அணிக்காக காத்துள்ளது.

லிவர்பூல் மற்றும் ரோமா அணிகளுக்கு இடையிலான இரண்டாம் கட்ட அரையிறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. ஏற்கனவே முதல் கட்ட அரையிறுதியில் லிவர்பூல் அணி 5-2 என்ற கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருக்கும் நிலையில் அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

அதேபோன்று, 42 ஆண்டுகளில் சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை தொடர்ச்சியாக மூன்று முறை கைப்பற்றும் அணியாக சாதனை படைக்க ரியெல் மெட்ரிட் அணிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 1976ஆம் ஆண்டு பயென் அணி இவ்வாறான சாதனை ஒன்றை படைத்தமை குறிப்பிடத்தக்கது.   

முழு நேரம்: ரியெல் மெட்ரிட் 1 – 1 பயென் முனிச்   

கோல் பெற்றவர்கள்

பயென் முனிச் ஜோசுவா கிம்மிச் 3′, ஜேம்ஸ் ரொட்ரிகஸ் 62′

ரியெல் மெட்ரிட் – கரிம் பென்செமா 10′, 45′

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<