T20 உலகக் கிண்ணத்திலிருந்து விலகும் பேபியன் அலென்

ICC T20 World Cup – 2021

131
Getty

கணுக்கால் காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி சகலதுறை வீரர்களில் ஒருவரான பேபியன் அலென், T20 உலகக் கிண்ணத்திலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவருக்குப் பதிலாக மாற்று வீரராக இளம் சகலதுறை வீரரான அகீல் ஹொசைனை அணியில் இணைத்துக்கொள்ள அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இன்று நடைபெறவுள்ள இரண்டாவது பயிற்சிப் போட்டிக்கான வலைப் பயிற்சியின் போது பேபியன் அலென் காயமடைந்துள்ளார்.

பேபியன் அலெனின் பந்துவீச்சு சராசரி 27.05 ஆக உள்ளதுடன், துடுப்பாட்டத்தில் 138.88 ஓட்ட வேகத்தையும், 17.85 என்ற துடுப்பாட்ட சராசரியையும் கொண்டுள்ளார். அதே நேரத்தில் உலகின் தலைசிறந்த களத்தடுப்பாளர்களில் ஒருவராகவும் அவர் விளங்குகிறார்.

எனவே, இம்முறை T20 உலகக் கிண்ணத்திலிருந்து பேபியன் அலென் விலகியது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவைக் கொடுக்கவுள்ளது.

இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணியில் மேலதிக வீரராக இடம்பெற்றிருந்த சகலதுறை வீரர் அகீல் ஹொசைனை, மாற்றீடு வீரராக 15 பேர் கொண்ட அணியில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியையும் ஐசிசி இன் தொழில்நுட்பக் குழு வழங்கியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 வயதான இடதுகை சுழல்பந்துவீச்சாளரான அகீல் ஹொசைன், பேபியன் அலெனைப் போல பந்துவீசக்கூடியவர். இவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 6 T20 போட்டிகளிலும், 9 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

அத்துடன், ஆப்கானிஸ்தான் அணியுடன் இன்று நடைபெறவுள்ள பயிற்சிப் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்குவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் சுப்பர் 12 சுற்றில் A குழுவில் இடம்பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 23ஆம் திகதி டுபாயில் நடைபெறவுள்ள முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை சந்திக்கவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<