ரொனால்டோவின் கோலின்றி ரியல் மெட்ரிட் முதல்கட்ட அரையிறுதியில் வெற்றி

358
Image courtesy - Getty Image

பயென் முனிச் அணியுடனான ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கின் முதல்கட்ட அரையிறுதியில் நடப்புச் சம்பியன் ரியெல் மெட்ரிட் பெரும் போராட்டத்துடன் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது.

இதில் இந்த ஐரோப்பிய பருவத்தில் போர்த்துக்கல் முன்கள வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் முறை ஒரு கோல் கூட போட தவறியுள்ளார்.

ஜெர்மனி கழகமான பயென் முனிச்சின் சொந்த மைதானமான அல்லியன்ஸ் அரேனாவில் இலங்கை நேரப்படி இன்று (26) அதிகாலை நடைபெற்ற இந்த போட்டியில் அந்த அணியினால் ஆதிக்கம் செலுத்த முடிந்தபோதும் அதனை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியாமல் போனது.  

சலாஹ்வின் அபாரத்தால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை அதிகரித்த லிவர்பூல்

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கின் இந்த பருவகால…

தொடர்ச்சியாக மூன்றாவது முறை சம்பியன்ஸ் கிண்ணத்தை வெல்ல எதிர்பார்க்கும் ரியல் மெட்ரிட் இந்த போட்டியில் பந்தை பெறுவது, தக்கவைத்துக் கொள்வது மற்றும் தற்காப்பு என்பவற்றில் சோபிக்காதபோதும் மார்செலோ மற்றும் மார்கோ அசென்சியோ கோல்களை புகுத்தியது அந்த அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது.  

போட்டி ஆரம்பித்து முதல் நிமிடத்தில் ரியல் மெட்ரிட் முன்கள வீரர் இஸ்கோவுக்கு பிரீ கிக் வாய்ப்பு தவறிப்போனபோதும் பயென் முனிச் அணி வீரர்கள் அதிக நேரம் பந்தை தன்வசம் வைத்துக் கொண்டனர். இதன் விளைவாக 28ஆவது நிமிடத்தில் அந்த அணிக்கு பலன் கிடைத்தது.

எதிரணி கோல் கம்பத்தை நோக்கி பந்தை வேகமாக கடத்தி வந்த பயென் முனிச் பின்கள வீரர் ஜோசுவா கிம்மிச், கோல் கம்பத்தில் வலது முனையில் இருந்து தனது வலது காலால் உதைத்து பந்தை வலைக்குள் புகுத்தினார். இதன்மூலம் 70,000 ரசிகர்கள் கூடிய தனது சொந்த மைதானத்தில் பயென் முனிச் அணியினால் 1-0 என முன்னிலை பெற முடிந்தது.   

இதனைத் தொடர்ந்து பதில் கோல் புகுத்தும் வேகத்தில் இருந்த ரியெல் மெட்ரிட் இரண்டு நிமிடங்கள் கழித்து எதிரணி கோல் கம்பத்தை ஆக்கிரமிக்க முயன்றபோது ரொனால்டோ ஓப் சைட் சென்று தவறிழைத்தார்.

அதிர்ச்சித் தோல்விக்கு மத்தியில் அரையிறுதிக்குள் நுழைந்த ரியல் மெட்ரிட்

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் இரண்டாம்…

எனினும் முதல் பாதி நேரம் முடிவதற்கு ஒருசில நிமிடங்கள் இருக்கும்போது டானியல் கர்வாஜால் முனிச் பெனால்டி எல்லைக்குள் இருந்து தலையால் முட்டிய பந்து உயரச் சென்ற மார்செலோ பக்கம் வந்தபோது, அதனை அவர் வேகமாக உதைத்து ரியல் மெட்ரிட் அணிக்காக பதில் கோல் போட்டார். 44ஆவது நிமிடத்தில் வந்த அந்த கோல் மூலம் ரியல் மெட்ரிட் அணி முதல் பாதி ஆட்டத்தை 1-1 என்ற சமநிலை செய்யதது.   

முதல் பாதி: ரியல் மெட்ரிட் 1 – 1 பயென் முனிச்

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் காலிறுதியில் ஜுவான்டஸ் அணியை வென்று அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மெட்ரிட் அணி இறுதிக் கட்ட போட்டிகளில் தனது வெற்றிகளை குவிக்கும் திறமையை தொடர்ந்தும் வெளிக்காட்டி வருகிறது. செவில்லாவுடனான முதல் கட்ட காலிறுதியில் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வென்று இரண்டாவது கட்டத்தில் கோலின்று சமநிலை செய்தே முனிச் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்நிலையில் இந்தப் போட்டியின் இரண்டாவது பாதி ஆரம்பித்து 57ஆவது நிடத்தில் லுகாஸ் வெஸ்குவஸ் பரிமாற்றிய பந்தை முனிச் கோல்கம்பத்திற்கு அருகில் வைத்து பெற்ற மார்கோ அசென்சியோ, அதனை கோலாக மாற்றி ரியல் மெட்ரிட் அணியை 2-1 என முன்னிலை பெறச் செய்தார். குறிப்பாக இரண்டாவது பாதியில் இஸ்கோவுக்கு பதில் அசென்சியோவை அனுப்பிய ரியல் மெட்ரிட் முகாமையாளர் சிடனின் சிடேனின் திட்டம் பலித்தது.   

ரியெல் மெட்ரிட்டின் நட்சத்திர வீரர் ரொனால்டோ வழமைக்கு மாறாக இந்த போட்டியில் கோல்பெறும் வாய்ப்புகளைக் கூட நெருங்கவில்லை. எனினும், போட்டியின் 71ஆவது நிமிடத்தில் அவர் வலைக்குள் பந்தை புகுத்தியபோதும் கைகலால் பந்தை பெற்று தவறிழைத்ததால் அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.

இந்த போட்டி முழுவதிலும் அவர் இலக்கிற்கு பந்தை உதைக்க தவறிவிட்டார். 2017 சம்பியன்ஸ் லீக் தொடர் தொடக்கம் அவர் இவ்வாறு பின்தங்கியது இது முதல் முறையாகும். இதன்படி இந்த ஆண்டில் ஒவ்வொரு போட்டியிலும் கோல் புகுத்திய ரொனால்டோவின் சாதனை முடிவுக்கு வந்தது.  

முனிச் அணியின் கோல் புகுத்தும் கடைசி நேர முயற்சிகள் தவறிப்போன நிலையில் இந்த போட்டியில் ரியல் மெட்ரிட் அணி 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி விசில் ஊதப்பட்டதை அடுத்து அரங்கில் இருந்த சில ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து முனிச் வீரர்களுடன் மோதலில் ஈடுபட்டதை காண முடிந்தது.

முனிச் கழகம் சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் ரியல் மெட்ரிட்டிடம் தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. மறுபுறம் இது ரியல் மெட்ரிட்டின் 150ஆவது சம்பியன்ஸ் லீக் வெற்றியாகும். இந்த மைல்கல்லை எட்டிய ஒரே அணியும் ரியல் மெட்ரிட்டாகும்.

ரியல் மெட்ரிட் மற்றும் பயென் முனிச் அணிகளுக்கு இடையிலான இரண்டாம் கட்ட அரையிறுதிப் போட்டி வரும் மே இரண்டாம் திகதி ரியல் மெட்ரிட்டின் சொந்த மைதானமான சென்டியாகோ பெர்னாபியோவில் நடைபெறவுள்ளது. ரியல் மெட்ரிட் கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைவதை தடுக்க வேண்டுமானால் பயென் முனிச் அணி குறைந்தது இரண்டு கோல்களையாவது மேலதிகமாகப் பெற வேண்டும்.   

எனது தந்தையின் கனவு நனவாகியிருக்கின்றது – மொஹமட் முஸ்தாக்

ஒரு விளையாட்டில் வீரர் ஒருவர் தனது தாய்நாட்டு அணியில்..

எனினும் ரியல் மெட்ரிட் அணி இறுதிப் போட்டிக்கு நுழைவதற்கு அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த இரு சம்பியன்ஸ் லீக் பருவத்தை போன்று இம்முறை அந்த அணி அதிகம் ஆதிக்கம் செலுத்தாதபோதும் 1976இல் பயென் அணிக்கு பின்னர் தொடர்ச்சியாக மூன்று முறை ஐரோப்பிய கிண்ணத்தை வென்ற அணியாக சாதனை படைக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.     

முழு நேரம்: ரியல் மெட்ரிட் 2 – 1 பயென் முனிச்

கோல் பெற்றவர்கள்

ரியல் மெட்ரிட் மார்செலோ 44′, மர்கோ அசென்சியோ 57′

பயென் முனிச் ஜோசுவா கிம்மிச் 28′

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<