வடக்கில் நிர்மானிக்கப்படவுள்ள முதலாவது சர்வதேச கிரிக்கெட் மைதானம்

2384

இலங்கையின் பெயரை உலக அளவில் பிரபல்யமடையச் செய்த விளையாட்டாக கிரிக்கெட் விளங்குகின்றது.1996 உலகக்கிண்ண கிரிக்கெட் சம்பியன்களாக இலங்கை அணி முடிசூடிக் கொண்டதையடுத்து உலகம் பூராகவும் இலங்கையின் நாமம் பேசப்பட்டதுடன், கிரிக்கெட்டில் புதிய பரிணாமமும், வளர்ச்சியும் ஏற்பட்டது. இதன் காரணமாக கிரிக்கெட்டில் மறுமலர்ச்சி ஏற்பட்டதையடுத்து சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானங்களும் உருவாகியது.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் சபை பொலன்னறுவை மற்றும் யாழ்ப்பாணத்தில் 2 சர்வதேச கிரிக்கெட் மைதானங்களை நிர்மானிப்பதற்கான நடவடிக்கைகளை கடந்த வருடம் மேற்கொண்டிருந்தது. இதன் முதல் கட்டமாக உள்ளுர் போட்டிகளை நடத்துகின்ற தேசிய மைதானமாகவும், 2ஆவது கட்டமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துகின்ற மைதானங்களாகவும் இவை நிர்மானிக்கப்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதன்படி யாழ் மாவட்டத்தில் மண்டைதீவுப்பகுதியிலும், பொலன்னறுவை, ஹிங்குராங்கொடை பிரதேசத்திலும் தலா 100 மில்லியன் ரூபா செலவில் இவ்விளையாட்டு மைதானங்கள் நிர்மானிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டன.

ஒழுக்க விதிமுறைகளை மீறிய இலங்கை வீரருக்கு கடும் எச்சரிக்கை

உலகின் தலைசிறந்த கிரிக்கெட் நாடாக விளங்கும் இலங்கையில் கடந்த 30 வருட காலமாக நிலவிய யுத்த சூழ்நிலையினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிரிக்கெட் வளர்ச்சியை ஏற்படுத்த முடியாமல் போனதுடன், திறமையான வீரர்களையும் இனங்கண்டு கொள்ளமுடியாமல் போனமை இந்நாட்டின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இலங்கை பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகரான திலங்க சுமதிபால, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமைத்துவத்தை கடந்த 2015ஆம் ஆண்டு பொறுப்பேற்றது முதல் பல வருடங்களாக தடைப்பட்டிருந்த இந்நாட்டின் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்தியும், அவற்றை முன்னெடுத்து வருகின்றமையும் அனைவராலும் பேசப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைப்பது தொடர்பில் பல வருடங்களாக ஆராயப்பட்டு வந்தது. ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதி, பொன்னாலைச் சந்திக்கு அண்மையாக உள்ள திடல் உள்ளிட்ட இடங்கள் இதற்காக முன்மொழியப்பட்டிருந்தன. எனினும் அவை ஆராயப்பட்டு சில காரணிகளால் கைவிடப்பட்டன. இந்த நிலையில் மண்டைதீவில் பெரும் திடல் முன்மொழியப்பட்டது.

இதனையடுத்து திலங்க சுமதிபால தலைமையிலான இலங்கை கிரிக்கெட் நிறுவனம், நீண்டகால முயற்சிகளின் பிரதிபலானாக யுத்தத்தினால் மோசமாக பாதிக்கப்பட்ட யாழ். குடா நாட்டில் கிரிக்கெட் வசந்தத்தை கொண்டு வருவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையினை கடந்த வருடம் யாழ். மண்டை தீவுப் பகுதியில் ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அந்த இடத்தை நேரில் பார்வையிடுவதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தலைமையிலான குழுவினர் கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்ததுடன், மண்டைதீவுக்குச் சென்று கிரிக்கெட் மைதானம் அமைக்கும் இடத்தைப் பார்வையிட்டனர்.

இம்முறையும் ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக ஸ்டோக்ஸ்

இதுதொடர்பில் திலங்க சுமதிபால கருத்து தெரிவிக்கையில், மண்டைதீவில் வடக்கின் விளையாட்டு நகரம் அமைக்கப்படவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் உடற்பயிற்சி மையம், நீச்சல் தடாகம் உள்ளிட்டவையும் அமைக்கப்படும். இங்கு கால்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், ரக்பி உள்ளிட்ட போட்டிகளையும் நடத்துவதற்கான வசதிகள் செய்யப்படும். வெளிநாட்டு வீரர்கள் தங்கக் கூடிய ஹோட்டல் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. எனவே இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்குள் பூர்த்திசெய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நல்ல தரமான கிரிக்கெட் வீரர்களை வட பகுதி கண்டுள்ளது. அது மீண்டும் வரவேண்டும் என்பதையும் சுமதிபால வலியுறுத்திக் கூறினார். எனவே 2022 இல் கட்டி முடிக்கப்படும் நோக்கில் 100 மில்லியன் ரூபா பணத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதற்காக ஒதுக்கியுள்ளது என்று தெரிவித்தார்.

இந்தக் குழுவினருடன் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடமாகாண ஆளுநரின் செயலாளர் சட்டத்தரணி எல்.இளங்கோவன் ஆகியோரும் மண்டைதீவுக்கு வருகை தந்தனர்.

எனவே, யுத்த சூழ்நிலையினால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இதுவரை காலமும் விளையாட்டுத்துறையில் தன்னிறைவு பெறாத வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இவ்வாறான சர்வதேச தரத்திலான மைதானங்கள் நிர்மானிக்கப்படுவது உண்மையில் வரவேற்கத்தக்க விடயமாகும். அதிலும் குறிப்பாக, அப்பகுதிகளில் இலை மறை காயாக உள்ள இளம் வீரர்களை இனங்கண்டு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்துக்கு கொண்டு வருவதற்கான மிக முக்கிய தேவையாகவுள்ள கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் போட்டிகளுக்கான விளையாட்டு மைதானங்களை ஆட்சியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் மிக விரைவில் பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவையும் காணப்படுகின்றது.