அண்மையில் இடம்பெற்று முடிந்த தேசிய கனிஷ்ட நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகளின் நிறைவில் ஒட்டுமொத்த விளையாட்டு ரசிகர்களின் கவனத்தையும் ஒரு இளம் வீரர் தன்பக்கம் ஈர்த்திருந்தார். 19 வயதிற்குட்பட்ட பிரிவில் கலந்து கொண்ட 15 வயது வீரரான இவர், தன்னை விட வயதிலும் அனுபவத்திலும் மூத்த வீரர்களை தோற்கடித்து போட்டித் தொடரின் மிக முக்கிய விருதினை சுவீகரித்திருந்தார்.

சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் குழுமியிருந்த ரசிகர்கள் அனைவரையும் வியப்பிற்குள்ளாக்கிய பவலச்சந்திரன் அருக்ஷன், தேசிய கனிஷ்ட நீச்சல் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் மூன்று தங்கப் பதக்கங்கள், இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று தொடரின் மிகச் சிறந்த நீச்சல் வீரருக்கான விருதினையும் தட்டிச் சென்றார்.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் சீருடையை அணிவதே சாருஜனின் இலக்கு

கடந்த சில காலமாக குட்டி சங்கக்கார என பல்வேறு ஊடகங்களில்..

விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைத்த வீரர்களின் வாழ்க்கைப் பயணத்தை நோக்கும்போது, அவர்களது வளர்ச்சிக்கு கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் மிக முக்கிய காரணிகளாக அமைவதை காணலாம். இவ்விளம் வீரரின் விளையாட்டு வாழ்க்கையும் அதற்கு மாற்றமானதல்ல. தனது உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் திறமையை வளர்த்துக் கொண்ட அருக்ஷன் தன் வெற்றிப்பாதையின் முதல் படியினை தாண்டியுள்ளார் எனலாம்.

தேசிய மட்ட நீச்சல் போட்டிகளின் போது 15 வயது வீரர்கள் போட்டியிடுவதனை காண்பதே அரிதான விடயம். இந்நிலையில், அம்மட்டத்தில் மூத்த வீர்ரகளை தோற்கடித்து பதக்கங்களை வென்ற பவலச்சந்திரன் அருக்ஷனை ThePapare.com ஆகிய நாம் சந்திக்க முடிவு செய்தோம்.

தனது 9ஆவது வயதில் நீச்சல் விளையாட்டிற்குள் பிரவேசித்த அருக்ஷன், தன் பாடசாலையான கொழும்பு புனித தோமியர் கல்லூரியில் பயிற்சிகளை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து நீச்சல் விளையாட்டில் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்து கொண்ட அருக்ஷன், கடும் முயற்சியின் மூலம் தன் திறமையை வளர்த்துக் கொண்டார்.

இது குறித்து எம்மிடம் கருத்து தெரிவித்த அவர், எனது முதல் நீச்சல் போட்டியாக பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற வயது மட்ட நீச்சல் சம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டேன். 15 வயதின் கீழ் தனிநபர் மெட்லி போட்டியில் நான் கலந்து கொண்டதுடன் எனது முதல் போட்டியிலேயே வெள்ளிப் பதக்கத்தை வென்றேன்

அவுஸ்திரேலிய முன்னணி தொடரில் இலங்கையின் வலைப்பந்து நட்சத்திரம் தர்ஜினி

இலங்கையின் வலைப்பந்தாட்ட நட்சத்திரம் சிவலிங்கம் தர்ஜினி, அவுஸ்திரேலியாவின்..

இளம் வயதில் தனது முதல் வெற்றியை சுவைத்த அருக்ஷன், மேலும் முனைப்புடன் பயிற்சிகளில் ஈடுபட்டார். அதன்படி 2014ஆம் ஆண்டு அவரது தற்போதைய கழகமான கில்லர் வேல் நீச்சல் கழகத்தில் இணைந்து கொண்டார். இதுவே அவரது நீச்சல் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது எனலாம்.

நான் மூன்று வருடங்களுக்கு முன்னர் கில்லர் வேல் நீச்சல் கழகத்தில் இணைந்து கொண்டேன். நீச்சல் விளையாட்டை அடிமட்டத்தில் இருந்து ஆரம்பித்த நான் தற்போது சிரேஷ்ட பிரிவில் என்னை விட வயதில் மூத்த வீரர்களுடன் போட்டியிடுகின்றேன்.”

புதிய கழகத்தில் புதிய பயிற்சியாளர்களின் வழிகாட்டலின் கீழ் வெறும் மூன்று வருடங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்த வீரராக அருக்ஷன் வளர்ச்சியடைந்துள்ளார். இலங்கையின் எதிர்பார்ப்புக்களை தோள்களில் சுமக்கக் கூடிய நீச்சல் வீரர்களில் ஒருவராக அருக்ஷன் முன்னேற்றம் அடைந்ததில் அவரது கழகத்தின் சேவை அளப்பரியது.

கடந்த வருடம் இடம்பெற்ற தெற்காசிய நீர்சார் விளையாட்டு சம்பியன்ஷிப் தொடரின்போது முன்னணி சர்வதேச வீரர்களான இந்திய வீரர்களுடன் போட்டியிடும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. அப்போட்டித் தொடரின்போது தனக்கு கிடைத்த அனுபவம் பற்றி அருக்ஷன் கருது தெரிவிக்கையில்,

முன்னணி வீரர்களுடன் அவர்களுக்கு நிகராக போட்டிகளில் ஈடுபட்டமை ஒரு சிறந்த அனுபவமாக காணப்பட்டது. இத்தொடரில் நான் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் வென்றிருந்தேன்

தனி நபர் மெட்லி போட்டிகளில் அதிக விருப்பம் காட்டி வரும் அருக்ஷன், தெற்காசிய நீர்சார் விளையாட்டு சம்பியன்ஷிப்பின்போது 400m தனிநபர் மெட்லி போட்டி மற்றும் 1500m ப்ரீஸ்டைல் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களையும், 400m ப்ரீஸ்டைல் மற்றும் 400m தனிநபர் மெட்லி போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களையும் சுவீகரித்திருந்தார்.

சில தினங்களுக்கு முன்னர் நிறைவடைந்த தேசிய கனிஷ்ட நீச்சல் சம்பியன்ஷிப் தொடரில் பெற்ற வெற்றிகளை அவர் நினைவுகூறுகையில்,

இவ்வருடம் இடம்பெற்ற தேசிய கனிஷ்ட நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகள் மறக்க முடியாதவையாகும். பல மூத்த, முன்னணி வீரர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றமை மிகவும் மகிழ்ச்சிக்குரியது. தொடர்ந்தும் எனது திறமையை சிறந்த முறையில் வெளிக்காட்ட எதிர்பார்த்துள்ளேன்.”

வரலாற்று சாதனைகளை கடந்து வந்துள்ள பாடும் மீனின் இலட்சியம் என்ன?

வளர்ந்து வரும் இளம் வீரர்களைக் கொண்டுள்ள ஒரு படையாகத் திகழும்..

பலரும் எதிர்பார்த்துள்ள, வளர்ந்துவரும் வீரரான அருக்ஷன், இலங்கையின் முன்னணி நீச்சல் வீரர்களில் ஒருவராக சர்வதேச மட்டத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதையே தனது இலக்காக கொண்டுள்ளார்.

இலங்கை நாட்டினை சர்வதேச அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்துவதே எனது நோக்கமாகும். எனது லட்சியம் கடினமானதொன்று என்ற போதிலும் நான் இதற்காக முழுமூச்சுடன் முயற்சிப்பேன். 2020ஆம் ஆண்டு இடம்பெறும் ஒலிம்பிக் போட்டிகளும் எனது இலக்குகளில் ஒன்றாகும். எனது கடின உழைப்பினை நான் தொடர்ந்தால், அவ்விலக்கினை அடையக்கூடியதாக இருக்கும் என நினைக்கின்றேன்.”

இளம் வீரர் அருக்ஷனின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் தொடர்பாக அவரது பயிற்றுவிப்பாளர்களும் புகழாரம் சூட்டியுள்ளனர். கில்லர் வேல் கழகத்தின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் மனோஜ் அபேசிங்க இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில்,

அருக்ஷன் உறுதியான மனப்பான்மையையும் கடின உழைப்பினையும் வெளிக்காட்டும் வீரராவார். சிறுவர்களுக்கான அடிமட்ட பயிற்சிகள் முதற் கொண்டு சிறந்த முன்னேற்றத்தை வெளிக்காட்டி தற்போதைய நிலையை அடைந்துள்ளார். எதிர்காலத்திலும் சிறந்த வீரர் ஒருவராக பெயர்பதிக்கக் கூடியவராவார்.”

இவ்வருடம் தேசிய நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் ஆசிய வயது மட்ட நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகள் என பல போட்டித் தொடர்கள் இடம்பெறவுள்ள நிலையில், இலங்கைக்கு பதக்கம் பெற்றுத்தரக்கூடிய நம்பிக்கை நட்சத்திரமாக பவலச்சந்திரன் அருக்ஷன் திகழ்கின்றார் என்பது தேசத்திற்கு பெருமை சேர்க்கும் ஒரு விடயமாக உள்ளது.