இக்கட்டான நிலையிலிருந்து தென் ஆபிரிக்க பதினொருவர் அணியை மீட்ட லியஸ் டு ப்லோய்

3586
Sl vs SA

தென் ஆபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, தென் ஆபிரிக்க பதினொருவர் அணிக்கெதிரான 3 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் விளையாடிவருகிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று இக்கட்டான நிலையிலிருந்த தென் ஆபிரிக்க பதினொருவர் அணியை லியஸ் டு ப்லோய் தனது சிறப்பான துடுப்பாட்டத்தினால் வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றார்.

தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணிக்கு புதிய அணித் தலைவர் நியமனம்

முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது 328 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இன்று ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி முதல் இன்னிங்சுக்காக 98.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 373 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இன்றைய தினம் களமிறங்கிய உபுல் தரங்க மேலதிகமாக ஓட்டம் எதுவும் பெறாமல் 20 ஓட்டங்களுடனும், அவருடன் மறுமுனையில் துடுப்பாடிக்கொண்டிருந்த தனஞ்சய டி சில்வா 62 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அதனையடுத்து துடுப்பாட களமிறங்கிய ஏனைய வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். தென் ஆபிரிக்க பதினொருவர் அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய டுவனோ ஒலிவியர் 54 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் தமது முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய தென் ஆபிரிக்க பதினொருவர் அணி ஆட்ட நேர முடிவின்போது 67 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 285 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தென் ஆபிரிக்க பதினொருவர் அணி சார்பாக லியஸ் டு ப்லோய் 25 பவுண்டரிகள் அடங்கலாக 142 ஓட்டங்களையும், காயா சொண்டோ மற்றும் ஜோர்ஜ் லிண்டே ஆகியோர் தலா 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி சார்பாக கடந்த ஜிம்பாப்வே டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகிய லஹிரு குமார 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், எஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் தில்ருவன் பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றினர்.

அதே நேரம் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரின் போது உடலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அணியிலிருந்து விலகிய துஸ்மந்த சமீர 6 மாதங்களுக்குப் பின் மீண்டும் இலங்கை அணியுடன் இணைந்த போதிலும் இந்தப் போட்டியில் அவரால் எவ்விதமான விக்கெட்டுகளையும் கைப்பற்ற முடியவில்லை. மேலும் சுழல் பந்து ஜாம்பவான் ரங்கன ஹேரத்தினாலும் இன்றைய நாள் எவ்விதமான விக்கெட்டுகளையும் கைப்பற்ற முடியவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை அணி (முதல் இன்னிங்ஸ்) : 328/8 (87) – திமுத் கருணாரத்ன 71, கௌஷால் சில்வா 80, குசல் மென்டிஸ் 51, தனஞ்சய டி சில்வா 62, குசல் ஜனித் பெரேரா 25, உபுல் தரங்க 20, டுவனோ ஒலிவியர் 54/4, ஜோர்ஜ் லின்டே 85/3, ஜேசன் ஸ்மித் 37/1

தென் ஆபிரிக்க பதினொருவர் அணி (முதல் இன்னிங்ஸ்) : 285/8 (67) – லியஸ் டு ப்லோய் 142, கயா சொண்டோ 25, ஜேசன் ஸ்மித் 22, மார்கஸ் அக்கேர்மன் 19, மங்கலிசோ மொசெஹலா 18, எய்டன் மர்க்ரம் 16, ஜோர்ஜ் லின்டே 25*, லஹிறு குமார 36/3, தில்ருவன் பெரேரா 22/2, எஞ்சேலோ மெத்திவ்ஸ் 15/2, நுவன் பிரதீப் 37/1