இலங்கையின் வெற்றியோட்டம் பங்களாதேஷுடனான T-20 போட்டிகளிலும் தொடருமா?

1713
Sri Lanka v Bangladesh

தாகத்தில் இருந்த ஒருவருக்கு நீர் ஊற்று ஒன்றினைக் கண்டால் எந்தளவுக்கு மகிழ்ச்சி கிடைக்குமோ, அதேபோன்று தொடர் தோல்விகள், வீரர்களின் உபாதைகள் என்பவற்றை அடிக்கடி கண்டு பழக்கப்பட்டிருந்த இலங்கை இரசிகர்களுக்கு இலங்கை  அணி பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மூலம் பெற்றுக்கொண்டுள்ள ஒரு நாள், டெஸ்ட் தொடர்களின் வெற்றி மிகுந்த மகிழ்ச்சியினையும், உற்சாகத்தினையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

[rev_slider LOLC]

இப்படியாக அதிரடியான முறையில் இந்த ஆண்டினை ஆரம்பித்திருக்கும் இலங்கை அணிக்கு, அடுத்த சவாலாக பங்களாதேஷுடன் வியாழக்கிழமை (15) டாக்காவில் ஆரம்பமாகும் இரண்டு போட்டிகள் கொண்ட T-20 தொடர் அமையவுள்ளது.

இலங்கை – பங்களாதேஷ் T-20 போட்டிகள் வரலாறு

இரண்டு அணிகளுக்குமிடையிலான T-20 போட்டிகளின் கடந்த கால பதிவுகள் குறைவாகவே காணப்படினும் கடந்த கால போட்டி முடிவுகள் இலங்கை அணியின் ஆதிக்கத்தினையே காட்டி நிற்கின்றது.

மாலிங்க ஓய்வு பற்றி சூசகம்

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து நட்சத்திரம் லசித்…

2007 ஆம் ஆண்டிற்கான T-20 உலக கிண்ணத்தின் மூலம் இரு அணிகளும் முதல் தடவையாக T-20 போட்டியொன்றில் சந்தித்திருந்தன. இப்போட்டியில் மஹேல ஜயவர்தன தலைமையிலான இலங்கை அணி பங்களாதேஷை 64 ஓட்டங்களால் தோற்கடித்து இரண்டு அணிகளுக்குமிடையிலான T-20 போட்டியில் முதல் வெற்றியினையும் பதிவு செய்திருந்தது.

இதனையடுத்து இதுவரை இரண்டு அணிகளும் மொத்தமாக 7  T-20 போட்டிகளில் விளையாடியிருக்கின்றன. அவற்றில் ஐந்தில் இலங்கை அணி வெற்றி பெற்றிருப்பதுடன், பங்களாதேஷ் அணியினால் இரண்டு வெற்றிகளினை மாத்திரமே பெற முடிந்திருக்கின்றது.

பங்களாதேஷ் அணி T-20 போட்டிகளில் இலங்கைக்கு எதிரான முதல் வெற்றியினை 2016ஆம் ஆண்டு டாக்காவில் நடைபெற்றிருந்த போட்டி மூலம் பெற்றிருந்தது.

இரண்டு அணிகளும் இறுதியாக இருதரப்பு T-20  தொடரொன்றில் கடந்த ஆண்டின் மார்ச் மாதம் விளையாடியிருந்தன. இலங்கையில் இடம்பெற்ற இரண்டு போட்டிகளைக் கொண்டதாக அமைந்திருந்த அத்தொடர் 1-1 என சமநிலை அடைந்திருந்தது.  

இலங்கை அணி

மூன்று தடவைகள்  T-20 உலக கிண்ணத் தொடரின்  (2009,2012,2014) இறுதிப் போட்டிக்குள் நுழைந்து, ஒரு தடவை (2014)  உலகக் கிண்ண சம்பியனாக நாமம் சூடி ஒரு காலத்தில் T-20 ஜாம்பவனான திகழ்ந்த  இலங்கை அணியினர், தாம் இறுதியாக விளையாடிய எட்டு T-20 போட்டிகளிலும் தோல்வியினையே சந்தித்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டு (2017) இலங்கை அணிக்கு மோசமாக மாறியிருந்தமைக்கு, மிகக்குறைவான ஓவர்கள் கொண்ட இவ்வகைப் போட்டிகளின் தோல்விகளும் காரணமாக அமைந்திருந்ததை மறுக்க முடியாது. இப்படியான தோல்விகளினால் T-20 தரவரிசையில் 88 புள்ளிகளுடன்  தற்போது எட்டாம் இடத்தில் இலங்கை காணப்படுகின்றது.

பங்களாதேஷுடனான T-20 தொடரில் குசலுக்குப் பதிலாக குசல்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு எதிரான T-20…

இலங்கை அணி பங்களாதேஷ் அணியுடன் நடைபெறவிருக்கும் இத்தொடரை இழக்குமெனின், T-20 தரவரிசையில் ஐ.சி.சி இன் அங்கத்துவ நாடாக இருந்து அண்மையில் முழு உறுப்பினராக மாறியிருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு பின்னால் செல்ல வேண்டிய நிலை ஒன்று உருவாகும். எனினும், புதிய பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்கவின் வருகைக்கு பின்னர் படிப்படியாக வழமையான ஆட்டத்திற்கு திரும்பி வரும் இலங்கை அணி இந்த தொடரிலும் நல்ல முடிவுகளையே காட்டி T-20 போட்டிகளிலும் தமது தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அஞ்செலோ மெதிவ்ஸின் காயம் அவருக்கு தொடர்ந்தும் இன்னல்களினை தரும் காரணத்தினால் இலங்கை அணியினை இந்த T-20 தொடரிலும் ஏனைய ஒரு நாள், டெஸ்ட் தொடர்கள் போன்று தினேஷ் சந்திமால் வழிநடாத்துகின்றார். மெதிவ்ஸோடு பங்களாதேஷ் அணியுடனான தொடருக்கு பெயரிடப்பட்டிருந்த குசல் பெரேராவும் தற்போது காயம் காரணமாக அணியிலிருந்து விலகியிருக்கின்றார். பெரேரா தற்போது இருக்கின்ற இலங்கை வீரர்களில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக T-20 போட்டிகளில் சிறந்த சராசரியுடன் (46) அதிக ஓட்டங்கள் (230) குவித்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இவரின் இழப்பு இலங்கை அணிக்கு பாரிய பின்னடைவாகும்.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான பெரேரா இல்லாத காரணத்தினால் இலங்கை அணி இந்த T-20 தொடரில் உபுல் தரங்கவுடன், விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான நிரோஷன் திக்வெல்ல அல்லது தனுஷ்க குணத்திலக்க ஆகிய இருவரில் ஒருவரினை களமிறக்கலாம். இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்க பங்களாதேஷில் கடந்த ஆண்டில் இடம்பெற்ற பி.பி.எல் (BPL) கிரிக்கெட் தொடரில் சில்லெட் சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார். த்தொடரில் ஆறு போட்டிகளில் பங்கேற்றிருந்த உபுல் தரங்க 41.60 என்கிற துடுப்பாட்ட சராசரியோடு மொத்தமாக 207 ஓட்டங்களினை குவித்திருந்தார். தரங்கவின் இந்த அனுபவம் பங்களாதேஷ் ஆடுகளங்களில் அவருக்கு சிறப்பாக செயற்பட உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உபுல் தரங்க தவிர, இலங்கை அணியின் துடுப்பாட்டத்தினை அணித் தலைவர்  தினேஷ் சந்திமால், அதிரடி வீரர் அசேல குணரத்ன, தசுன் சானக்க, (குசல் பெரேராவுக்கு பதிலாக அணியில் இணைக்கப்பட்ட) குசல் மெண்டிஸ் ஆகியோர் வலுப்படுத்த எதிர்பார்க்க முடியும். இதில், அசேல குணரத்ன அவுஸ்திரேலிய அணியுடன் கடந்த ஆண்டில் இடம்பெற்ற T-20 தொடரினை இலங்கை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்த வீரர் என்பதோடு, தசுன் சானக்க இறுதியாக இலங்கை அணி விளையாடிய இந்திய, பாகிஸ்தான் அணிகளுடனான T-20 தொடர்களில் துடுப்பாட்டத்தில் ஜொலித்த ஒருவர்.  

பங்களாதேஷ் அணிக்கெதிரான இலங்கை T-20 குழாம் அறிவிப்பு

பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 போட்டிகளைக் கொண்ட..

இவர்கள் தவிர இலங்கை அணி இரண்டு சகலதுறை வீரர்களின் பங்களிப்பினையும் இத்தொடரில் எதிர்பார்க்கின்றது. அதில் ஒருவரான திசர பெரேரா, பங்களாதேஷ் அணிக்கெதிராக 55.50 என்கிற துடுப்பாட்ட சராசரியினைக் கொண்டிருப்பதோடு இதுவரை அவ்வணியுடன் மொத்தமாக 5 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருக்கின்றார். மற்றைய சகலதுறை வீரராக இலங்கையின் உள்ளூர் போட்டிகளில் அசத்தி வந்த ஜீவன் மெண்டிஸ் அமைகின்றார். கிட்டத்தட்ட நான்கு வருடங்களின் பின்னர் ஜீவன் T-20 போட்டிகளில் தேசிய அணிக்காக விளையாட வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

இத்தொடருக்கான இலங்கை அணியின் பந்துவீச்சுத்துறையினை எடுத்து நோக்கும் போது அனுபவமிக்க லசித் மாலிங்க அணியில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. இலங்கை அணி சார்பாக T-20 போட்டிகளில் அதிக விக்கெட்டுக்கள் (90) கைப்பற்றிய மாலிங்கவின் பொறுப்பினை இத்தொடரில் இளம் வேகப்பந்து வீச்சாளர்களான ஷெஹான் மதுசங்க, அசித்த பெர்னாந்து ஆகியோர் எடுப்பர். அறிமுக வீரர்களான இவர்களுக்கு T-20 போட்டிகளின் சிறப்பு நிபுணர்களில் ஒருவரான இசுரு உதான கைகொடுக்கவுள்ளார்.

இத்தொடருக்கான இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சாளர்களாக அகில தனன்ஜய, ஜெப்ரி வென்டர்செய் மற்றும் அமில அபொன்சோ ஆகியோர் செயற்படவுள்ளனர். இதில் உள்ளூர் T-20 போட்டிகளில் 13.58 என்கிற மிகச்சிறந்த பந்துவீச்சு சராசரியினைக் கொண்டிருக்கும் அபொன்சோவுக்கும் இது கன்னி T-20 தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இலங்கை அணி

“தினேஷ் சந்திமால் (அணித் தலைவர்), உபுல் தரங்க, தனுஷ்க குணத்திலக்க, குசல் மெண்டிஸ், திசர பெரேரா, அசேல குணரத்ன, நிரோஷன் திக்வெல்ல, தசுன் சானக்க, இசுரு உதான, ஷெஹான் மதுசங்க, ஜெப்ரி வென்டர்செய், அகில தனன்ஜய, அமில அபொன்சோ, ஜீவன் மெண்டிஸ், அசித்த பெர்னாந்து”

பங்களாதேஷ் அணி

கடந்த இரண்டு ஆண்டுகளிலும் 23 T-20 போட்டிகளில் விளையாடியிருக்கும் பங்களாதேஷ் அணி அதில் 7 வெற்றிகளை மாத்திரமே சுவைத்திருக்கின்றது. இது பங்களாதேஷ் அண்மைய காலங்களில் T-20 போட்டிகளில் சிறந்த பதிவினை காட்டியிருக்கவில்லை என்பதை காட்டுகின்றது.

எனினும், இலங்கை அணியினர் அவர்களை எளிதானவர்கள் என எடை போட்டுவிடக்கூடாது. ஏனெனில், கத்துக்குட்டி என்ற அந்தஸ்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் பங்களாதேஷ் அணியினர் உள்ளூரில் நடாத்தப்படும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடர் மூலம் T-20 போட்டிகளில்  அதிக அனுபவத்தினை பெற்றிருக்கின்றனர்.

இலங்கையுடனான T-20 தொடரில் இருந்து விலகும் சகிப் அல் ஹசன்

இலங்கை மற்றும் பங்களாதேஷ்..

பங்களாதேஷ் அணிக்கும் இத்தொடரில் நட்சத்திர சகலதுறை வீரர் சகீப் அல் ஹசன் இல்லாதது பேரிழப்பாகும். கடந்த மாதம் இலங்கை அணியுடன் இடம்பெற்ற முக்கோண ஒரு நாள் தொடரின் போட்டியில் காயமுற்ற சகீப், இலங்கையுடனான இந்த T-20 தொடரில் பங்களாதேஷ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த போதிலும், காயம் பூரணமாக குணமாகாத நிலையில் அணியில் இருந்து விலகியிருக்கின்றார். சகீப்புக்குப் பதிலாக இதுவரையில் T-20 போட்டிகள் எதிலும் விளையாடாத இடதுகை சுழல் வீரர் நஷ்முல் இஸ்லாமினை பங்களாதேஷ் உள்வாங்கியிருக்கின்றது. இதோடு சகீபின் அணித்தலைவர் பதவியினை மஹ்மதுல்லா எடுத்துக் கொள்வார் எனவும் நம்பப்படுகிறது.  

இலங்கை அணியுடனான இந்த தொடருக்காக பங்களாதேஷ் அணி, தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்ற அவர்களது இறுதி T-20 சுற்றுப்பயணத்தில் விளையாடியிருந்த குழாத்தில் இருந்து தற்போது எட்டு மாற்றங்களை செய்திருக்கின்றது. பி.பி.எல் தொடரில் சிறப்பாக செயற்பட்ட ஆறு புதுமுக வீரர்களோடு  (அபு ஜாயேத், ஆரிபுல் ஹக், மஹெதி ஹசன், சாகிர் ஹுசைன், அடிப் ஹொசைன், நஸ்முல் இஸ்லாம்) சிரேஷ்ட வீரர்களான தமிம் இக்பால், முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோரும் இலங்கையுடனான மோதலில் பங்கேற்கின்றனர்.

பங்களாதேஷ் அறிமுகப்படுத்தும் வீரர்களுக்குள் ஆரிபுல் ஹக் பி.பி.எல் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை மற்றுமொரு அறிமுக வீரரான வேகப்பந்து வீச்சாளர் அபு ஜாயேத் 2017ஆம் ஆண்டிற்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றியவர்களில் இரண்டாம் இடத்தினைப் பெற்றிருந்தார்.  

இவர்கள் தவிர பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் அனுபவமிக்க தமிம் இக்பால், முஷ்பிகுர் ரஹீம், மஹ்மதுல்லா, சப்பீர் ரஹ்மான் ஆகியோரில் தங்கியிருக்கின்றது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தமிம் இக்பால் T-20 போட்டிகளில் 1,250 இற்கு மேலான ஓட்டங்கள் குவித்த அனுபவத்தினைக் கொண்டிருக்கின்றார். மறுமுனையில் சப்பீர் ரஹ்மான்  இலங்கை அணிக்கெதிராக அதிக ஓட்டங்கள் (141) பெற்ற வீரராக காணப்படுகின்றார்.

தனஞ்சயவின் மாய சுழலோடு பங்களாதேஷுடனான டெஸ்ட் தொடர் இலங்கை வசம்

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய…

பெரும்பாலும் அறிமுக வீரர்களினையே கொண்டிருக்கும் பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சுக்கு முஸ்தபிசுர் ரஹ்மான் இருப்பது பெரும் பலமாகும். பல்வேறு நாடுகளின் உள்ளூர் T-20 தொடர்களில் விளையாடிய அனுபவத்தோடு, பங்களாதேஷ் அணிக்காக இதுவரையில் 17 T-20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருக்கும் முஸ்தபிசுர் ரஹ்மான் 27 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றார். முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு ருபெல் ஹொசைன், மொஹமட் சயீபுத்தின் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக இலங்கை அணியின் விக்கெட்டுக்களை சாய்க்க உதவுவர்.

பங்களாதேஷ் அணி இத்தொடரில் நிச்சயமாக புதுமுகங்களான மெஹெதி ஹசன் அல்லது நஸ்முல் இஸ்லாம் ஆகியவர்களை சுழல் வீரர்களாக அறிமுகம் செய்யும்.

பங்களாதேஷ் அணி

“மஹ்மதுல்லா (அணித் தலைவர்), தமிம் இக்பால், செளம்யா சர்க்கார், முஷ்பிகுர் ரஹீம், சப்பீர் ரஹ்மான், முஸ்தபிசுர் ரஹ்மான், ருபெல் ஹொசைன், மொஹமட் சயீபுத்தின், அபு ஹைதர், அபு ஜாயேத், அரிபுல் ஹக், மஹெதி ஹசன்”  

T-20 தொடர் அட்டவணை

முதல் T-20 போட்டி – டாக்கா – இலங்கை நேரப்படி மாலை 4.30 மணி
இரண்டாவது T-20 போட்டி – சில்லெட் – இலங்கை நேரப்படி மாலை 4.30 மணி