இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் சிறந்த ஆரம்பத்தை வெளிக்காட்டிய இந்திய கனிஷ்ட அணி

115

இலங்கை கனிஷ்ட அணி மற்றும் இந்திய கனிஷ்ட அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட முதலாவது இளையோர் டெஸ்ட் போட்டி இன்று (17) ஆரம்பமாகியிருந்தது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கனிஷ்ட கிரிக்கெட் அணி இரண்டு இளையோர் டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஐந்து இளையோர் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.

அந்த வகையில் இந்திய கனிஷ்ட கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப் பயணத்தில் முதற்கட்டமாக நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட இளையோர்  டெஸ்ட் தொடரின் முதல் போட்டியே இன்று ஆரம்பமாகியிருந்தது.

பங்களாதேஷ் A அணியிடம் போராடித் தோற்ற இலங்கை A அணி

கொழும்பு NCC மைதானத்தில் தொடங்கிய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை கனிஷ்ட அணியின் தலைவர் நிப்புன் தனஞ்சய முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தனது தரப்புக்காக தேர்வு செய்திருந்தார்.

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளின் படி, இலங்கையின் இளம் வீரர்கள் சவால்மிக்க இந்திய அணியை எதிர்த்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தனர்.

துடுப்பாட்டத்தை தொடங்கிய இலங்கை இளையோர் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்திருந்த கமில் மிஷாரவின் விக்கெட்டினை வெறும் 09 ஓட்டங்களுடன் கைப்பற்றி இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜூன் டெண்டுல்கர் அதிர்ச்சி தந்தார்.

இதனையடுத்து களத்தில் நின்ற ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நிஷான் மதுஷ்கவுடன், புதிய துடுப்பாட்ட வீரராக வந்த அணித்தலைவர் நிப்புன் தனஞ்சய இலங்கைத் தரப்புக்காக கைகோர்த்தார். இவர்கள் இருவரும் இரண்டாம் விக்கெட்டுக்காக அரைச்சத இணைப்பாட்டம் (53) ஓன்றை வழங்கி ஆளுக்கு 39 ஓட்டங்கள் வீதம் பெற்று அணிக்கு பெறுமதி சேர்த்திருந்தனர்.

இவர்கள் இருவரினதும் விக்கெட்டுக்களை அடுத்து இலங்கை கனிஷ்ட அணி இந்தியாவின் இளம் இடதுகை சுழல் வீரரான ஹர்ஷ் தியாகியின் பந்துவீச்சுக்கு சிறிது தடுமாற்றத்தை எதிர்கொண்டிருந்தது.

எனினும், மத்திய வரிசையில் துடுப்பாடிய றோயல் கல்லூரி வீரரான பசிந்து சூரியபண்டார இந்திய கனிஷ்ட அணியின் பந்துவீச்சாளர்களை சிறப்பான முறையில் முகம் கொடுத்து அரைச்சதம் ஒன்றை பெற்றிருந்தார். சூரியபண்டாரவுடன் ஜோடி சேர்ந்த ஏனைய மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான சந்துன் மெண்டிஸ் பெறுமதியான 39 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இருவரினதும் பொறுமையான ஆட்டத்தினால் இலங்கை கனிஷ்ட அணியின் ஐந்தாம் விக்கெட்டுக்காக 78 ஓட்டங்கள் வரையில் இணைப்பாட்டமாகவும் பகிரப்பட்டிருந்தது.

பின்னர் பசிந்து சூரியபண்டாரவின் விக்கெட்டை அடுத்து துடுப்பாட்டத்தில் மீண்டும் சரிவை சந்தித்த இலங்கை கனிஷ்ட அணி 70.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 244 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சுக்காக குவித்துக் கொண்டது.

இலங்கை கனிஷ்ட அணியின் துடுப்பாட்டத்தில் பசிந்து சூரியபண்டார 3 இமலாய சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 69 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இந்திய கனிஷ்ட அணியின் பந்துவீச்சு சார்பாக சுழல் வீரர்களான ஹர்ஷ் தியாகி மற்றும் அயுஷ் படோனி ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீதமும், அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் மொஹிட் ஜங்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்தனர்.

இதன் பின்னர் இந்திய கனிஷ்ட அணி, அவர்களது அணித்தலைவர் அனுஜ் ராவட் மற்றும் அதர்வா டைட் ஆகியோருடன் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது.

இலங்கை இளையோர் அணிக்காக பந்துவீச்சில் சோபித்த யாழ் வீரர் வியாஸ்காந்த்

இந்திய கனிஷ்ட அணியின் தலைவர் அனுஜ் ராவட் அதிரடியான முறையில் துடுப்பாடி 42 பந்துகளுக்கு அரைச்சதம் விளாசினார். தொடர்ந்தும் சிறப்பாக ஆடிய அவர் கல்ஹார சேனாரத்னவின் சுழலில் விழ, முதல் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது.

இதன்படி, போட்டியின் முதல் நாள் நிறைவில் இந்திய கனிஷ்ட அணி ராவட்டின் அதிரடி அரைச்சதத்துடன் 16.4 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 92 ஓட்டங்களுடன் சிறப்பான நிலையில் காணப்படுகின்றது.

இந்திய கனிஷ்ட அணியில் முதல் விக்கெட்டாக பறிபோயிருந்த அனுஜ் ராவட் 8 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 59 பந்துகளுக்கு 63 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

அதேநேரம் களத்தில் ஆட்டமிழக்காத நிலையில் அதர்வா டைட் 26 ஓட்டங்களுடன் காணப்படுவதோடு, இந்திய கனிஷ்ட அணி இலங்கையை விட முதல் இன்னிங்ஸில் 152 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது.

ஸ்கோர் சுருக்கம்

போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நாளை தொடரும்.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க