நஷீம் ஷாவின் அபார பந்துவீச்சுடன் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

106
©PCB Twitter

சுற்றுலா இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி, 263 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரை 1-0 என கைப்பற்றியுள்ளது.  

ஓசத பெர்னாண்டோ கன்னி சதமடித்தும் போராடுகிறது இலங்கை!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் …………

நேற்றைய ஆட்டநேர நிறைவில், 212 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் களமிறங்கிய இலங்கை அணி, இன்றைய ஐந்தாவது நாள் ஆட்டத்தில் ஒரு ஓட்டத்தையேனும் பெறமுடியாமல் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. குறிப்பாக இலங்கை அணி தங்களுடைய இறுதி நான்கு விக்கெட்டுகளையும், எந்தவொரு ஓட்டமும் இன்றி இழந்திருந்தது. 

இன்றைய ஆட்டநேரத்தின் முதல் பந்தில் லசித் எம்புல்தெனிய நஷீம் ஷாவின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரில் சதம் பெற்றிருந்த ஓசத பெர்னாண்டோ (102) யசீர் ஷாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, நஷீம் ஷாவின் அடுத்த ஓவரில் விஷ்வ பெர்னாண்டோ LBW முறையில் ஆட்டமிழக்க இலங்கை அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஓசத பெர்னாண்டோ 102 ஓட்டங்களையும், நிரோஷன் டிக்வெல்ல 65 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் அணியை பொருத்தவரை, அபாரமாக பந்துவீசிய இளம் வீரர் நஷீம் ஷா டெஸ்ட் போட்டிகளில் தனது கன்னி ஐந்து விக்கெட் பிரதியை கைப்பற்றியதுடன், குறைந்த வயதில் டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார். இவருக்கு அடுத்தப்படியாக யசீர் ஷா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இந்த டெஸ்ட் போட்டியை பொருத்தவரை, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 191 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணி 555/3 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியிருந்தது. இலங்கை அணியானது முதல் இன்னிங்ஸில் 271 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 212 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.

அதேநேரம், இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சமனிலையாகியிருந்ததுடன், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று, தொடரை 1-0 என கைப்பற்றியுள்ளது.

ஆபித், மசூட்டின் சதங்களினால் ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தான்

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் …..

இதன்படி, ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிப்பட்டியலில் இந்த வெற்றிக்காக பாகிஸ்தான் அணி 60 புள்ளிகளை பெற்றுள்ளதுடன், புள்ளிப்பட்டியலில் 80 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்துள்ளது. இலங்கை அணியும் 80 புள்ளிகளை பெற்று, புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளதுடன், இந்திய  அணி 360 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<