மார்ச் 7ஆம் திகதி ஆரம்பமாகும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ள 15 பேர்கள் கொண்ட வீரர்கள் குழாத்தினை இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இத்தொடரில் விளையாட முடியாதுள்ள இலங்கை அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்சிற்குப் பதிலாக இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் இலங்கை அணிக்கு தலைமை தாங்கவுள்ளார். இலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் (SLC) இன்று மாலை வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை – பங்களாதேஷ் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் மார்ச் மாதத்தில் இலங்கையில்

ஹேரத், முன்னதாக  ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஜிம்பாப்வேயில் இடம்பெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு தலைமை தாங்கியிருந்தார்.

இத்தொடர் மூலம் தனது கன்னி சர்வதேச போட்டியொன்றில் விளையாடும்வாய்ப்பினை இடது கை சுழல் வீரர் மலிந்த புஷ்பகுமார பெற்றுள்ளார். அவர்இதுவரையில் மொத்தமாக 558 முதல்தர விக்கெட்டுகளை 19.85 என்கிற சராசரியுடன் சாய்த்துள்ளதுடன், கடைசியாக இங்கிலாந்து லயன்ஸ் அணியுடான போட்டியில் இலங்கை A அணி சார்பாக விளையாடி, 13 விக்கெட்டுகளைவீழ்த்தி அணியின் வெற்றிக்கும் காரணமாய் இருந்திருந்தார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கெளஷால் சில்வா, தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியிலும் அரைச் சதமேனும் பெறாத காரணத்தினால் குழாத்தில் உள்வாங்கப்படவில்லை. எனினும், அவருடன் ஆரம்ப வீரராக வரும் திமுத் கருணாரத்ன அண்மையில், இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் அதிரடி இரட்டைச் சதம் விளாசிய காரணத்தினால் இலங்கை குழாத்தில் தனது இடத்தினை இத்தொடரிலும் நீடித்துக் கொண்டுள்ளார்.

VISIT THE #SLvBAN HUB

அதுபோன்று, தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டித் தொடர்களில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்து, தனது சிறப்பான  துடுப்பாட்டம் மூலம் அனைவரையும் கவரும் வகையிலான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த நிரோஷன் திக்வெல்லவும் இத்தொடரில் இணைக்கப்பட்டுள்ளார்.

திக்வெல்ல, இறுதியாக 2014 ஆம் அண்டில் நியூசிலாந்து அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியொன்றிலேயே விளையாடினார். இதுவரை அவர் 7 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடி மொத்தமாக 144 ஓட்டங்களினைப் பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலிய அணியுடனான T-20 தொடரில் ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்ற அசேல குணரத்ன, இதற்கு முன்னதாக கடந்த வருடத்தில் ஜிம்பாப்வேயுடனான டெஸ்ட் தொடரில் விளையாடி சதம் குவித்திருந்தார். எனினும், அவருக்கு அந்த தொடரின் பின்னர் இலங்கை அணி விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவரும் இத்தொடர் மூலம் இலங்கை டெஸ்ட்  குழாத்தில் மீண்டும் உள்வாங்கப்பட்டுள்ளார்.

21 வயதேயான விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரர் சதீரசமரவிக்ரமவிற்கும் இத்தொடரின் மூலம் கன்னி சர்வதேச போட்டியில்விளையாடும் வாய்ப்பு கிட்டும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்தது எனினும் இத்தொடரில் அது அவரிற்கு கிடைக்கவில்லை. சமரவிக்ரம இங்கிலாந்து லயன்சுடனான போட்டியில், இலங்கை A அணிக்காக முதற்தடவையாக விளையாடி 185 ஓட்டங்களைவிளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அசேல குணரத்னவின் அதிரடி துடுப்பாட்டத்தினால் டி20 தொடரை கைப்பற்றியது இலங்கை

தினேஷ் சந்திமல் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர், தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் பெரிதாக சோபிக்காத நிலையிலும் அவர்களுக்கு இத்தொடரில், தமது ஆட்டத்தினை நிரூபிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இடது கை சுழல் பந்து வீச்சாளர் லக்ஷன் சந்தகன்னிற்கு குழாத்தில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதுடன், அவர் ரங்கன ஹேரத்துடன் இணைந்து செயற்படவுள்ளார். மலிந்த புஷ்பகுமார மற்றும் தில்ருவன் பெரேரா ஆகியோரும் அணிக்குள் உள்வாங்கப்பட்டு சுழல் துறையினை விஸ்தரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சை முன்னெடுக்க சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளதோடு, இளம் வீரர் லஹிரு குமார, அனுபவம் மிக்க நுவான் பிரதீப் மற்றும் விக்கும் சன்ஞய ஆகியோரும் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

 இலங்கை டெஸ்ட் குழாம் 

ரங்கன ஹேரத் (தலைவர்), உபுல் தரங்க, தினேஷ் சந்திமல், திமுத் கருணாரத்ன, நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, அசேல குணரத்ன, தில்ருவன் பெரேரா, லக்ஷன் சந்தகன், மலிந்த புஷ்பகுமார, சுரங்க லக்மால், நுவான் பிரதீப், லஹிரு குமார, விக்கும் சன்ஞய

அணித் தேர்வாளர்கள், இத்தொடரில் குசல் ஜனித் பெரேரா, ரொஷேன் சில்வா, சந்துன் வீரக்கொடி மற்றும் கித்ருவான் விதானகே ஆகியோரை மேலதிக வீரர்களாக தேர்வு செய்துள்ளனர்.