சுற்றுலா இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 3 டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில், இரண்டாவது டி20 போட்டி இன்று கீலொங் சிமண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

அவுஸ்திரேலிய அணியில் இன்றைய போட்டிக்காக இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. சுழல் பந்து வீச்சாளர் அடம் சம்பா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பில்லி சடன்லேக் ஆகியோருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் எவ்வோன் ரிச்சர்ட்சன் அறிமுக வீரராகவும் மற்றும் பென் டன்க் இந்த போட்டிக்காக இணைக்கப்பட்டிருந்தனர்.

அதே நேரம் கடந்த போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. லக்ஷான் சந்தகனுக்கு பதிலாக அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் அணியில் இணைக்கப்பட்டிருந்தார்.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணித் தலைவர் உபுல் தரங்க அவுஸ்திரேலிய அணியை முதலில் துடுப்பாடுமாறு பணித்தார். அந்த வகையில் முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

Photo Album: Sri Lanka v Australia| 2nd T20I

கடந்த போட்டியில் பிரகாசித்த 36 வயதுடைய மைக்கல் கிளின்கர் இந்த போட்டியிலும் 43 ஓட்டங்களுடன் பங்களிப்பு செய்தார். அதேநேரம், முதலாவது டி20 போட்டியில் வாய்ப்பு கிடைத்திராத நிலையில் இந்த போட்டியில் கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட துடுப்பாட்ட வீரர் பென் டன்க் வெறும் 14 பந்துகளுக்கு 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 32 ஓட்டங்களை விளாசி அதிரடி காட்டினார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய மொய்சஸ் ஹென்றிக்ஸ் ஆட்டமிழக்காமல் 37 பந்துகளுக்கு 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 56 ஓட்டங்களை பெற்று அணியை வலுவான நிலைக்கு வழி நடத்தினார்.

இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் அதிரடி காட்டிய நுவன் குலசேகர 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அதேநேரம் லசித் மலிங்க இன்றைய போட்டியில் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் 174 ஓட்டங்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இலங்கை அணி தனது முதல் 5 விக்கெட்டுகளை 40 ஓட்டங்களுக்குள் இழந்து மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.

எனினும் 5ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய அசேல குணரத்ன மீண்டுமொரு முறை அதிரடி காட்டி இலங்கை அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார்.

ஒரு கட்டத்தில் 18 பந்துகளுக்கு 48 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் 17ஆவது ஓவரில் 12 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட இலங்கை அணி இறுதி 12 பந்துகளுக்கு மேலும் 36 ஒட்டங்களைப் பெற வேண்டிய நிலை காணப்பட்டது.

மொய்சஸ் ஹென்றிக்ஸ் வீசிய 19ஆவது ஓவரில் அசேல குணரத்ன தொடர்ச்சியாக 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசி வெற்றியீட்டுவதற்கு 6 பந்துகளுக்கு 14 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையை ஏற்படுத்தினார்.

இறுதி ஓவரின் முதல் பந்தில் நுவன் குலசேகர ஆட்டமிழக்க போட்டி மேலும் விறுவிறுப்பானது. எனினும், மீண்டும் துடுப்பாடும் வாய்ப்பை பெற்ற அசேல குணரத்ன இரண்டாவது பந்தில் பவுண்டரி ஒன்றையும் தொடர்ந்து சிக்ஸர் ஒன்றையும் விளாசினார். இறுதியில் 2 பந்துகளுக்கு 3 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் லசித் மாலிங்க ஒரு ஓட்டத்தை பெற்றுகொடுக்க இறுதிப் பந்தில் அசேல குணரத்ன பவுண்டரி ஒன்றினை விளாசி 2 விக்கெட்டுகளால் இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இலங்கை அணி சார்பாக அசேல குணரத்ன 46 பந்துகளுக்கு 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 84 ஓட்டங்களையும் சாமர கபுகெதர 32 பந்துகளுக்கு 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக அண்ட்ரிவ் டை 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் போல்க்னர் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக அசேல குணரத்ன தெரிவு செய்யப்பட்டார்.

3 போட்டிகளை கொண்ட டி20 போட்டித் தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியுள்ள நிலையில் 3ஆவது டி20 போட்டி பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி அடிலெய்டில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலியா: 173 (20) – மைக்கல் கிளின்கர் 43(37), பென் டன்க் 32(14), மொய்சஸ் ஹென்றிக்ஸ் 56(37), லசித் மலிங்க 31/2, நுவன் குலசேகர 31/4, விக்கும் சஞ்சய 32/2 அசேல குணரத்ன 26/1, சீகுகே பிரசன்ன 26/1

இலங்கை: 176/8 (20) – அசேல குணரத்ன 84(46), சாமர கபுகெதர 32(32), நிரோஷன் திக்வெல்ல 14(8), டில்ஷான் முனவீர 10(4), நுவன் குலசேகர 12(8), அண்ட்ரிவ் டை 31/3,ஜேம்ஸ் போல்க்னர் 32/2