கிழக்கு மாகாண ஸ்பீட் T-20 தொடரின் இறுதிப் போட்டி நாளை

2086

கிழக்கு மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூர் கிரிக்கெட் கழக அணிகள் பங்குபற்றிய ஸ்பீட் T-20 தொடரின் இறுதிப் போட்டியானது வெள்ளிக்கிழமை (14) சாய்ந்தமருது வொலிவேரியன் பொது மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

கிரிக்கெட் மூலம் ஒற்றுமைஎன்ற தொனிப்பொருளில் இடம்பெறும் இந்த கிரிக்கெட் தொடரானது, இந்தியாவின் முன்னணி விளையாட்டு உபகரணங்களின் தயாரிப்பாளரா ஸ்பீட் நிறுவனத்தின் அனுசரனையோடு, கடந்த மார்ச் மாதம் சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமாகியிருந்தது. இத்தொடரில் கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த 32 கழக அணிகள் வரையில் பங்குபெற்றிருந்தன.

தொடரின் முதற்கட்டமாக  குழு நிலை ஆட்டங்கள் நடைபெற்றிருந்தன. இப்போட்டிகள் முடிவடைந்ததன் பின்னர் நொக் அவுட் சுற்றுக்கள் மூலம் அரையிறுதிப் போட்டிகளிற்குரிய அணிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தன.

முதலாவது  அரையிறுதியில், நிந்தவூர் இம்ரான் விளையாட்டுக் கழகத்தினை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்திய ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகமும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் கல்முனை கிம்ஹானா விளையாட்டுக் கழகத்தினை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்திய  சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகமும் நாளை (14) இடம்பெறவுள்ள இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளன.  

இறுதிப் போட்டியிற்கு, பிரதான அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் திரு. A.M. ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார். அதோடு, கெளரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான KMA. ரஸ்ஸாக் மற்றும் ILM. மாஹிர் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஏனைய அதிதிகளாக இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தரங்க பரணவிதான மற்றும் ஸ்பீட் நிறுவனத்தின் விளையாட்டு உபகரணங்களை இலங்கைத் தீவு முழுவதும் விநியோகம் செய்யும் கஸானா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி M. அஸ்கர் அலி ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.  

இத்தொடரில், வெற்றியாளராகும் அணிக்கு பரிசாக 100,000 ரூபாவும் (ரூபா. 50,000 ரொக்கம் மற்றும் ரூபா. 50,000 பெறுமதியான ஸ்பீட் கிரிக்கெட் உபகரணங்கள்), இரண்டாம் இடத்தினைப் பெறும் அணிக்கு 50,000 ரூபாவும் (ரூபா. 2,5000 ரொக்கம் மற்றும் ரூபா. 25,000 பெறுமதியான ஸ்பீட் கிரிக்கெட் உபகரணங்கள்) பரிசாக வழங்கப்படவுள்ளன.

அதோடு, தொடரில் சிறப்பாக செயற்பட்ட ஒவ்வொரு வீரருக்குமான விசேட விருதுகளும் வழங்கப்படவுள்ளன.