SAG கௌரவிப்பில் பிரதமரால் மலையக வீரர்களுக்காக விசேட யோசனை

88

மலையகத்தின் விளையாட்டுத்துறை முன்னேற்றத்தில் தமது அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும் என தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அங்குள்ள வீரர்களை விளையாட்டில் இணைத்துக் கொள்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் மிக விரைவில் முன்னெடுப்பார் என தான் நம்புவதாக குறிப்பிட்டார். 

நேபாளத்தின் கத்மண்டு மற்றும் பொக்கராவில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமையை தேடிக் கொடுத்த வீர, வீராங்கனைகளுக்கு பணப்பரிசில் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (14) மாலை கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் மிக விமர்சையாக இடம்பெற்றது.

SAGஇல் பதக்கம் வென்றவர்களுக்கு 400 இலட்சம் ரூபா பணப்பரிசு

நேபாளத்தின் கத்மண்டு மற்றும் பொக்கராவில் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 10ஆம்…

இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக 500 இற்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் பங்குபற்றியிருந்ததுடன், இதில் 40 தங்கம், 83 வெள்ளி மற்றும் 128 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 251 பதக்கங்களை இலங்கை அணி சுவீகரித்தது

இதன்படி, தெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் அதிகளவு பதக்கங்களை இம்முறை எமது வீரர்கள் பெற்றுக் கொண்டதுடன், இதற்காக 414 இலட்சம் ரூபா பணப்பரிசுத் தொகையை வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்தது.

எனவே, விளையாட்டுத்துறை நிதியத்தில் இருந்து தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாவும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா 3 இலட்சம் ரூபாவும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, “இலங்கையில் அதிகளவு சர்வதேசப் போட்டிகளை நடாத்துவதற்கு திட்டங்களை வகுத்து விளையாட்டுத்துறைக்கான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும” என தெரிவித்தார்.

மேலும்,சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு பெருமையைத் தேடிக் கொடுக்கின்ற வீரர்களுக்காக விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பது அவசியமாகும்.  

எதிர்காலத்தில் இந்த நாட்டின் விளையாட்டுத்துறை செழிப்பாக இருக்க வேண்டுமாயின் நாங்கள் அந்த வீரர்களை பாதுகாக்க வேண்டும். இந்த விடயத்தில் எமது அரசாங்கம் நிச்சயம் அவதானம் செலுத்தும்.

தனது பிள்ளை வெற்றியொன்றைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்பும்வரை ஒரு அப்பா காத்துக் கொண்டிருப்பார். எனவே நான் உங்கள் அனைவரதும் அப்பா.  

எனவே, ஒரு அப்பாவாக நீங்கள் தெற்காசியாவை வென்று நாடு திரும்பும் வரை நானும் காத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் பெற்றுக்கொண்ட இந்த வெற்றியானது இலங்கைக்கு மிகப் பெரிய கௌரவத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளத” எனவும் பிரதமர் அங்கு தெரிவித்தார்

இந்த நிலையில், 2018இல் பொதுநலவாய விளையாட்டு விழாவை இலங்கையின் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுத்த போதிலும், ஒருசில காரணங்களினால் அதை நடத்த முடியாமல் போனதாக சுட்டிக்காட்டிய பிரதமர், அந்த விளையாட்டு விழா நடத்திருந்தால் இலங்கையின் விளையாட்டுத்துறையில் நல்லதொரு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம் என கூறினார்

இதேநேரம், “மலையகத்தின் விளையாட்டுத்துறை முன்னேற்றத்தில் எமது அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும். அங்குள்ள வீரர்களை விளையாட்டில் இணைத்துக் கொள்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் மிக விரைவில் முன்னெடுப்பார் என நம்புகிறேன்

அதேபோல, அங்குள்ள வீரர்களை எம்மை தேடி வராமல் நாங்கள் அவர்களை தேடிச் சென்று அவர்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்

உங்களைப் போன்ற திறமையான வீரர்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை. அதனால் தான் ஒரு அரசாங்கமாக நாங்கள் போதுமானளவு வசதிகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.  

நல்ல குணாதிசயங்களைக் கொண்ட மக்களைக் கொண்ட நாடாக இலங்கையை உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்கு விளையாட்டில் இருந்து கிடைக்கின்ற ஒழுக்கம், அனுபவம், பொறுமை என்பன முக்கிய சான்றாக இருக்கின்றன. எனவே, எமது அரசின் வேலைத்திட்டங்களின் விளையாட்டுத்துறைக்கும் முக்கிய இடம் கொடுத்துள்ளதாக பிரமதர் மேலும் குறிப்பிட்டார்.

>>Photos: SAG 2019 Medalists Felicitation Ceremony<<

இந்த நிலையில், இலங்கையில் விளையாட்டு பல்கலைக்கழமொன்றை ஸ்தாபிப்பது  தொடர்பில் பேசிய பிரதமர், சர்வதேச தரத்திலான விளையாட்டு பல்கலைக்கழகமொன்றை தியகமவில் ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது

எனவே, இங்கு வந்து படிக்கின்ற நமது வீரர்கள் ஆசியாவையும், முழு உலகையும் வெற்றி கொள்வார்கள் என தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.  

விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் அதிகாரிகள், விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<