பிரீமியர் லீக் போட்டிகளுக்கு மழையினால் இடையூறு

527
Premier League

பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்ட அணிகளுக்கான தட்டு (Plate) பிரிவுக்கான மூன்று போட்டிகள் இன்று இடம்பெறவிருந்தன. எனினும் மழையின் குறுக்கீட்டின் காரணமாக இரண்டு போட்டிகளே இடம்பெற்ற நிலையில், அப்போட்டிகளிலும் குறைந்தளவு ஓவர்களே வீசப்பட்டன.

காலி கிரிக்கெட் கழகம் எதிர் BRC கழகம்

இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான போட்டி புளூம்பீல்ட் மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற காலி கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிவரும் யசோத லங்கா மற்றும் டில்ஹான் குரே முறையே 56 மற்றும் 44 ஓட்டங்களை பெற்று களத்தில் உள்ளனர். அதன்படி காலி கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டதுடன், போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. பந்து வீச்சில் BRC அணியின் தினுக ஹெட்டியாரச்சி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 208/5 (63) – யசோத லங்கா 56*, டில்ஹான் குரே 44*, தினுக ஹெட்டியாரச்சி 3/85


புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

சர்ரே விலேஜ் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டி, நேற்று இரவு மற்றும் இன்று காலை பெய்த அடைமழையின் காரணமாக தாமதமாகியே ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

எனினும் 13.1 ஓவர்களே வீசப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதனால் இன்றைய தினத்திற்கான ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

போட்டியின் சுருக்கம்

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 43/3 (13.1) – லஹிரு ஜயகொடி 20, பிரமோத் மதுவந்த 1/00


பதுரேலிய விளையாட்டுக் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

BRC மைதானத்தில் இடம்பெறவிருந்த இப்போட்டியில் மழையின் காரணமாக ஒரு ஓவரேனும் வீசப்படாத நிலையில் இன்றைய தினம் நிறைவடைந்தது.

நாளை போட்டிகளின் இரண்டாவது நாளாகும்.