கொழும்பு கிரிக்கெட் கழகம் மற்றும் தமிழ் யூனியன் அணிகள் வலுவான நிலையில்

203

கழகங்களுக்கு இடையிலான பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்ட அணிகளுக்கான இரண்டாம் சுற்று போட்டிகள் இன்று இடம்பெற்றன. சுப்பர் 8 சுற்றிற்கு தகுதி பெற்ற அணிகளுக்கிடையில் நான்கு போட்டிகள் இன்று ஆரம்பமானதுடன், தட்டு (Plate) பிரிவிற்கான மூன்று போட்டிகள் இரண்டாவது நாளாக இடம்பெற்றன.

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம் (சுப்பர் 8)

பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ராகம கிரிக்கெட் கழகம் எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

அதன்படி களமிறங்கிய தமிழ் யூனியன் அணியின் சிரேஷ்ட வீரர் தரங்க பரணவிதான மற்றும் இளம் வீரர் தினித் திமோத்ய ஆகியோர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதங்கள் குவித்தனர். தினித் 113 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்ததுடன், பரணவிதான ஆட்டமிழக்காது 104 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.

இவ்விருவரும் 3ஆவது விக்கெட்டிற்காக 214 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதன்படி தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 269 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ராகம் அணி சார்பில் நிலங்க பிரேமரத்ன 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 269/3 (82)தினித் திமோத்ய 113, தரங்க பரணவிதான 104*, நிலங்க பிரேமரத்ன 2/63

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.


NCC கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம் (சுப்பர் 8)

இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான போட்டி P. சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு கிரிக்கெட் கழகம் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது.

NCC அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான ஆரம்பத்தினை பெற்றுக் கொடுத்த போதிலும், தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்தனர். வேகப்பந்து வீச்சாளர் லஹிரு கமகே 4 விக்கெட்டுகளை சாய்க்க, NCC கழகம் 200 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் தொடக்க வீரர் லஹிரு உதார 40 ஓட்டங்களையும் அனுக் பெர்னாண்டோ 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

அடுத்து ஆடுகளம் பிரவேசித்த கொழும்பு கிரிக்கெட் கழகம் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 3 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களை பெற்று இன்றைய தினத்திற்கான ஆட்டத்தை நிறைவு செய்து கொண்டது. இப்பருவகாலத்தில் தொடர்ந்து அசத்தி வரும் இளம் வீரர் ரொன் சந்திரகுப்த மற்றுமொரு அரைச் சத்தினை பதிவு செய்தார்.

இவர் ஆட்டமிழக்காது 74 ஓட்டங்களை பெற்று களத்தில் இருந்தார். பந்து வீச்சில் NCC அணியின் லசித் எம்புல்தெனிய 2 விக்கெட்டுகளை பெற்றுக் கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

NCC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 200 (49) – அனுக் பெர்னாண்டோ 43, லஹிரு உதார 40, லஹிரு கமகே 4/52

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 154/3 (40) – ரொன் சந்திரகுப்த 74*, லசித் எம்புல்தெனிய 2/55

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.


SSC கழகம் எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம் (சுப்பர் 8)

மற்றுமொரு சுப்பர் 8 போட்டி SSC மற்றும் இராணுவ அணிகளுக்கிடையில் கோல்ட்ஸ் கழக மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற SSC கழகம் எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

சச்சித்ர சேனநாயக்க (4/43) மற்றும் கசுன் மதுஷங்க (3/29) சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை வீழ்த்த, இராணுவ விளையாட்டுக் கழகம் 228 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. டில்ஷான் டி சொய்சா சிறப்பாக துடுப்பெடுத்தாடி 74 ஓட்டங்கள் குவித்ததுடன், அணித் தலைவர் சீக்குகே பிரசன்ன 40 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்

எதிரணியின் 228 ஓட்டங்களுக்கு பதிலளிக்கும் முகமாக களமிறங்கிய SSC  அணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 58 ஓட்டங்களை பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 228 (67.3) – டில்ஷான் டி சொய்சா 74, சீக்குகே பிரசன்ன 40, சச்சித்ர சேனநாயக்க 4/43, கசுன் மதுஷங்க 3/29

SSC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 58/3 (20)

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (சுப்பர் 8)

இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான போட்டி கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம், கோல்ட்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது.

அபாரமாக பந்து வீசி கோல்ட்ஸ் கழகத்தை திணறடித்த அரோஷ் ஜனோத 7 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். எனவே அவ்வணி 150 ஓட்டங்களுக்கே சுருண்டது. தொடக்க வீரர் சதீர சமரவிக்ரம அதிகபட்சமாக 29 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் முன்னிலை பெறும் எதிர்பார்ப்புடன் சிலாபம் மேரியன்ஸ் அணி துடுப்பெடுத்தாடியது. எனினும் விட்டுக்கொடுக்காது போராடிய கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 96 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது. பந்து வீச்சில் அசத்திய அகில தனஞ்சய 5 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 150 (46.5)சதீர சமரவிக்ரம 29, அரோஷ் ஜனோத 7/38

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 96/5 (31) – மஹேல உடவத்த 27, அகில தனஞ்சய 3/05

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.


காலி கிரிக்கெட் கழகம் எதிர் BRC கழகம் (தட்டு பிரிவு)

இப்போட்டியின் முதல் நாள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களை பெற்றிருந்த காலி கிரிக்கெட் கழகம் இன்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடியது. நேற்று ஆட்டமிழக்காது களத்திலிருந்து யசோத லங்கா, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 12 பௌண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 167 ஓட்டங்கள் விளாசினார்.

பிரீமியர் லீக் போட்டிகளுக்கு மழையினால் இடையூறு

பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்ட அணிகளுக்கான தட்டு (Plate) பிரிவுக்கான மூன்று போட்டிகள் இன்று இடம்பெறவிருந்தன.

அவருக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய டில்ஹான் குரே 82 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்படி காலி கிரிக்கெட் கழகம் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 407 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் அசத்திய தினுக ஹெட்டியாராச்சி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து ஆடுகளம் பிரவேசித்த BRC கழகம் இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 11௦ ஓட்டங்களை குவித்திருந்தது. பானுக ராஜபக்ஷ 48 ஓட்டங்களுடனும், லசித் லக்ஷான் 36 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

போட்டியின் சுருக்கம்

காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 407 (126.5)யசோத லங்கா 167, டில்ஹான் குரே 82, தினுக ஹெட்டியாரச்சி 7/158

BRC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 110/1 (27)பானுக ராஜபக்ஷ 48*, லசித் லக்ஷான் 36*

நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.


புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம் (தட்டு பிரிவு)

முதல் தினம் 13.1 ஓவர்களே வீசப்பட்டிருந்த நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்து 43 ஓட்டங்களை பெற்றிருந்த புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம், இன்று 152 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அவ்வணியின் டிரான் தனபால அதிகபட்சமாக 30 ஓட்டங்கள் குவித்தார்.

பந்து வீச்சில் சோனகர் விளையாட்டுக் கழகத்தின் அனைத்து பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். பிரமோத் மதுவந்த 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அடுத்து தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய சோனகர் விளையாட்டுக் கழகம் பபசர வடுகே (72) மற்றும் ஷானுக துலாஜின் (56) அரைச் சதங்களின் உதவியுடன் எதிரணியின் ஓட்ட எண்ணிக்கையை கடந்தது.

இன்றைய ஆட்ட நேர முடிவின் போது அவ்வணி 4 விக்கெட்டுகளை இழந்து 250 ஓட்டங்களை பெற்று முன்னிலையில் இருந்தது. பந்து வீச்சில் புளூம்பீல்ட் அணியின் மலித் டி சில்வா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 152 (49.3)டிரான் தனபால 30, பிரமோத் மதுவந்த 3/05

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 250/4 (64)பபசர வடுகே 72, ஷானுக துலாஜ் 56, மலித் டி சில்வா 2/88

நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.


பதுரேலிய விளையாட்டுக் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (தட்டு பிரிவு)

நேற்றைய தினம் மழையின் காரணமாக ஒரு ஓவரேனும் வீசப்படாத நிலையில், இப்போட்டி இன்று ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது.

தனியொருவராக பதுரேலிய அணியை வழிநடத்திய தொடக்க வீரர் பெதும் மதுஷங்க ஆட்டமிழக்காது 110 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். எனினும் மறுமுனையில் அனைத்து வீரர்களும் ஆட்டமிழக்க, பதுரேலிய விளையாட்டுக் கழகம் 302 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பந்து வீச்சில் கசுன் ராஜித மற்றும் சுராஜ் ரந்திவ் ஆகியோர் 3 விக்கெட்டுகள் வீதம் சாய்த்தனர்.

4 ஓவர்களே எஞ்சியிருந்த நிலையில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் விக்கெட் இழப்பேதுமின்றி 9 ஓட்டங்களை குவித்து இன்றைய தினத்தை நிறைவு செய்து கொண்டது.

போட்டியின் சுருக்கம்

பதுரேலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 302 (91.4 )பெதும் மதுஷங்க 110*, ஷெஹான் பெர்னாண்டோ 39, கசுன் ராஜித 3/78, சுராஜ் ரந்திவ் 3/107

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 9/0 (4)

நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.