முரளியின் கருத்துக்கு இலங்கை கிரிக்கெட் பதிலடி

2095

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், நட்சத்திர சுழல் பந்துவீச்சாளருமான முத்தையா முரளிதரன், கடந்த கால சம்பவங்களையெல்லாம் மறந்துவிட்டு தவறான நபர்களின் ஆலோசனைப்படி ஊடகங்கள் வாயிலாக வதந்திகளை பரப்பி வருவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உபதலைவர் மொஹான் டி சில்வா தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டானது அரசியல்வாதிகளின் தலையீடுகளால் அழிவடைந்து வருவதாக இந்தியாவின் சஞ்சிகையொன்றுக்கு முத்தையா முரளிதரன் அண்மையில் வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்ததாக சுட்டிக்காட்டி ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

தேர்தல் ஒன்று நெருங்கி வருகின்ற போது இவ்வாறான நாடகங்களை நாங்கள் நிறையவே பார்த்துள்ளோம். இது ஒரு சாதாரண விடயம். ஆனாலும், முரளிதரன் போன்ற உலகப் புகழ் பெற்ற நட்சத்திர வீரரொருவர் இவ்வாறான சூழ்ச்சிகளுக்கு ஆளாகியிருப்பது தொடர்பில் உண்மையில் நாம் கவலையடைகிறோம்.

இலங்கை கிரிக்கெட்டின் அழிவுக்கு அரசியல்வாதிகளே காரணம் – முரளிதரன்

அதிலும் குறிப்பாக முரளிரதன் கடந்த கால சம்பவங்களை மறந்துவிட்டு இவ்வாறு பேசுகின்றார் என நான் நினைக்கிறேன். 1995ஆம் ஆண்டு முரளிதரனின் பந்துவீச்சு தொடர்பில் முதற்தடவையாக சர்ச்சை எழுந்தது. அப்போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக இருந்த திலங்க சுமதிபால மற்றும் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி திஸாநாயக்கவின் முயற்சியினால் அவருக்கு உதவி செய்தோம்.

அதேபோன்று 2004இல் நான் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக இருந்த போது தூஸ்ரா பந்துவீச்சு தொடர்பாக ஏற்பட்ட குற்றச்சாட்டிலிருந்தும் அவரை நாம் மீட்டிருந்தோம். இதற்காக நாம் அவரை அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைத்து உதவியிருந்தோம்.

இது இவ்வாறிருக்க, உலகம் அறிந்த நட்சத்திர கிரிக்கெட் வீரரொருவர் இவ்வாறு குற்றம் சுமத்துவது தொடர்பில் உண்மையில் நாம் கவலையடைகிறோம். எனவே ஒரு சிலரின் தூண்டுதல் காரணமாக எந்தவொரு உத்தரவாதமுமின்றி தெரிவிக்கப்பட்ட கருத்துக்களாகவே நான் அவருடைய கூற்றை கருதுகிறேன் எனவும் தெரிவித்தார்.

இந்தியாவின் த எகொனமிக்ஸ் டைம்ஸ் (The Economic Times) சஞ்சிகைக்கு முத்தையா முரளிதரன் வழங்கிய விசேட நேர்காணலின் போது இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டானது அரசியல்வாதிகளின் தலையீடுகளால் அழிவடைந்து வருவதாக குற்றம் சுமத்தியிருந்தார்.

அதிலும் குறிப்பாக, கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் எந்தவொரு அனுபவமும், அறிவும் இல்லாதவர்கள் நிர்வாகத்தில் இருப்பதென்பது இலங்கையின் கிரிக்கெட்டை நாளுக்கு நாள் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருப்பதை உணர்த்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

எது எவ்வாறியினும், முரளிதரனுக்கும், தற்போதுள்ள திலங்க சுமதிபால தலைமையிலான இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் இடையில் இதற்கு முன் பல தடவைகள் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் மற்றும் காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றிருந்தன.

முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு ஜுலை மாதம் அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதன்போது 10 நாட்களுக்கு அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகராக முத்தையா முரளிதரன் செயற்பட்டார்.

இவ்வாறு முரளிதரன் அவுஸ்திரேலிய அணிக்கு பயிற்சியளித்தமைக்கு பல தரப்பிலும் கடுமையான எதிர்ப்புகள் வெளியாகியிருந்ததுடன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, முரளிதரனை துரோகி என பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தார்.

இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல் திகதி அறிவிப்பு

இதற்கு முரளிதரன் பதிலளிக்கையில், ”அவுஸ்திரேலிய அணிக்கு போட்டிகள் ஆரம்பமாக முன் வெறும் 10 நாட்களுக்கு பயிற்சியளிக்கவே விருப்பம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் முழு தொடருக்கும் என்னை பணிபுரிய வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். ஏனெனில் இலங்கை அணி வெற்றிக்காக விளையாடும் போது அதை எவ்வாறு அவுஸ்திரேலிய அணியின் உடைமாற்றும் அறையிலிருந்து பார்த்து ரசிக்க முடியும். இலங்கை கிரிக்கெட் எனக்கு நிறைய செய்துள்ளது. அதற்கு நான் ஒரு போதும் துரோகம் இழைக்க மாட்டேன். ஆனாலும், வீரராக மாத்திரமல்லாது, ஓய்வு பெற்ற பிறகும் இந்த நாட்டுக்காக நான் பல சேவைகளை ஆற்றியுள்ளேன். என்னை இலங்கை கிரிக்கெட் துரோகி என குற்றம் சுமத்தினால் மறுபுறத்தில் அவர்கள் தான் மிகப் பெரிய துரோகி என்று சொல்வேன். அவுஸ்திரேலியா என்னை அழைப்பதற்கு முன் இலங்கை எனது சேவையைப் பெற்றுக்கொள்ள விரும்பினால் நாட்டுக்காக அதைச் செய்திருப்பேன” எனவும் தெரிவித்திருந்தார்.

எனவே குறித்த காலப்பகுதியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த விடயத்தில் முரளிதரனுக்கு ஆதரவாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன உள்ளிட்டோர் பேசியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.