Road to Barcelona சம்பியன் கிண்ணம் அல்-அக்ஸா கல்லூரிக்கு

481

நெஸ்லே லங்காவின் மைலோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் “பார்சிலோனாவை நோக்கிய பயணம்” (Road to Barcelona) என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கால்பந்தாட்ட போட்டித் தொடரின் ஆண்கள் பிரிவின் தேசிய மட்ட சம்பியன்களாக திருகோணமலை கிண்ணி அல்-அக்ஸா தேசிய பாடசாலை தெரிவாகியுள்ளது.

இலங்கை பாடசாலை கால்பந்தில் சிறந்து விளங்கும் மற்றொரு கல்லூரியான யாழ்ப்பாணம் இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரி அணி தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை வீரர்களுக்கு பார்சிலோனாவில் பயிற்சி பெறும் வாய்ப்பு

உலகின் பிரபல கால்பந்து கழகமான பார்சிலோனாவின் …

அகில இலங்கை ரீதியில் 800 அணிகளின் பங்கேற்ப்பில் நடைபெற்ற இந்த போட்டித் தொடரின், ஆரம்ப சுற்றுப்போட்டிகள் மாகாண ரீதியில் நடைபெற்றன. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகள் அகில இலங்கை ரீதியில் 8 (A,B,C,D,E,F,G) குழுக்களாக பிரிக்கப்பட்டு, இறுதி சுற்றுப் போட்டிகளில் மோதின.

இதில் F குழுவில் இடம்பிடித்திருந்த அல்-அக்ஸா தேசிய பாடசாலை குழுநிலையில் எந்தவொரு தோல்வியையும் சந்திக்காமல், தமது குழுவில் முதலிடத்தை பெற்றுக்கொண்டது. அடுத்து நடைபெற்ற, காலிறுதியில் பொலன்னறுவை பதிவெவ மகா வித்தியாலயத்தை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்தது.

சம்பியன் அணி – அல் அக்ஸா தே.பா – கிண்ணியா

தொடர்ந்து தங்களது வெற்றிப்பாதையை நீடித்துக்கொண்ட அல்-அக்ஸா தேசிய பாடசாலை அணியின் இளம் வீரர்கள், அரையிறுதியில் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியை எதிர்கொண்டு விளையாடியது.  இந்தப் போட்டியில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல்-அக்ஸா தேசிய பாடசாலை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டியில் காலடி வைத்தது.

தடுமாற்றம் கண்ட புனித பேதுரு கல்லூரியை வென்றது கிண்ணியா அல் அக்ஸா

கொழும்பு, புனித பேதுரு கல்லூரி மைதானத்தில் …

மறுபக்கம், தங்களுடைய இறுதிப் போட்டிக்கான பயணத்தை ஆரம்பித்த யாழ். புனித ஹென்ரியரசர் கல்லூரி, சம்பியன் அணியான அல் அக்ஸா இடம்பெற்ற அதே F  குழுவில் இரண்டாவது இடத்துடன் தங்களது ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து நடைபெற்ற காலிறுதியில் கம்பளை பென்ஹில் சர்வதேசப் பாடசாலை அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதுடன், அடுத்து நடைபெற்ற அறையிறுதியில் மட்டக்களப்பு பதூலியா வித்தியாலயத்தை 2-0 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

தொடரில் இரண்டாம் இடம் பெற்ற புனித ஹென்ரியரசர் கல்லூரி அணி

இந்த நிலையில் அல்-அக்ஸா தேசிய பாடசாலை மற்றும் புனித ஹென்ரியரசர் கல்லூரி ஆகிய இரண்டு பாடசாலைகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டி நேற்று (09) பதுளை வின்சன் டயஸ் மைதானத்தில் நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இறுதிவரை போராடிய இரண்டு அணிகளாலும் தலா ஒவ்வொரு கோல்களையே அடிக்க முடிந்தது. இதனால் போட்டியில் பெனால்டி ஷுட் அவுட்  வாய்ப்பு வழங்கப்பட அல்-அக்ஸா தேசிய பாடசாலை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று, சம்பியன் கிண்ணத்த சுவீகரித்தது.

போட்டித் தொடரின் மூன்றாவது இடத்தினை யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி பிடித்துக்கொண்டது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மட்டக்களப்பு பதூலியா வித்தியாலயத்தை எதிர்கொண்ட யாழ். புனித ஜோசப் கல்லூரி 2-0 என வெற்றிபெற்று மூன்றாவது இடத்தை பெற்றதுடன், நான்காவது இடத்தை பதூலியா வித்தியாலயம் பிடித்துக்கொண்டது.

புகைப்படங்களைப் பார்வையிட

இதேவேளை, பெண்களுக்கான போட்டிகளில் 250 அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், இறுதிப்போட்டியில் நீர்கொழும்பு வித்தியாலங்கார மகா வித்தியாலத்தை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய குருணாகல் கவிசிகமுவ காமினி மாக வித்தியாலயம் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டது. கவிசிகமுவ காமினி மாக வித்தியாலயம் காலிறுதியில் கெஸ்பேவ விஜேவர்தன மகா வித்தியாலத்தை 3-1 என வீழ்த்தியிருந்ததுடன், அரையிறுதியில் கேகாலை பல்லேகனுகல மகா வித்தியாலயத்தை 2-0 என வீழ்த்தியிருந்தது.

தொடரில் மூன்றாம் இடம் பெற்ற சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி

பார்சிலோனாவை நோக்கிய பயணம் என்ற தொனிப்பொருளுடன் நடத்தப்பட்ட இந்த கால்பந்தாட்ட தொடரின் அதி சிறந்த வீரர்கள் அல்லது வீராங்கனைகள் உட்பட மைலோ நிறுவனத்தால் நடத்தப்படும் விசேட பயிற்சி முகாமில் தெரிவுசெய்யப்படும் அறுவர் பார்சிலோனா சென்று, நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி முகாமில் பங்கேற்க முடியும்.

பார்சிலோனாவுக்கு செல்லவுள்ள வீரர்களுக்கான தெரிவு எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் அநுராதபுரம் பொது மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக அழைக்கப்பட்டுள்ள வீரர்கள் எதிர்வரும் 12ஆம் திகதி மாலை 4 மணிக்கு முன்னர் குறித்த மைதானத்திற்கு வர வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…