நாளைய தினம் இரு அணிகளுக்கும் தீர்க்கமானது – டிம் சௌத்தி

197

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் நான்காவது நாள் ஆட்டம் இரு அணிகளுக்கும் தீர்க்கமாக அமையப்போவதாக நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌத்தி குறிப்பிட்டார். 

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இரு தினங்களின் பெரும்பாலான நேரம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று (24) நடைபெற்ற மூன்றாவது நாள் ஆட்டத்தில் இலங்கை அணி நெருக்கடியில் இருந்து மீண்டபோதும் நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சுக்காக சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருகிறது. 

கொழும்பு, பி. சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வாவின் சதத்துடன் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 244 ஓட்டங்களை பெற்றது. எனினும் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 196 ஓட்டங்களை பெற்றுள்ளது. டொம் லேதம் ஆட்டமிழக்காது 111 ஓட்டங்களுடன் துடுப்பாடி வருகிறார். 

தனன்ஜயவின் சதத்தையும் தாண்டி ஆதிக்கம் செலுத்தும் நியூசிலாந்து

கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் நியூசிலாந்து…

“மழை சற்று ஏமாற்றத்தை தந்தது. அதனை எம்மால் கட்டுப்படுத்த முடியாது. இன்று டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லதொரு நாளாக இருந்தது. போட்டியில் எஞ்சி இருக்கும் இரண்டு தினங்களும் சுவாரஷ்யமான ஆட்டமாக மாறியுள்ளது. 

நாளை முக்கியமான நாளாகும். களத்தில் துடுப்பெடுத்தாடி வரும் இருவரும் நல்ல நிலையில் துடுப்பாடி வருகின்றனர். தொடர்ந்து சிறப்பாக துடுப்பாடி ஓட்டங்களை அதிகரிக்க எதிர்பார்க்கிறோம். 

இலங்கை அணியும் நாளை விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை திசை திருப்ப எதிர்பார்க்கும். இது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சிறந்த நாட்களாக அமையும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சௌத்தி குறிப்பிட்டார்.

30 வயதான டிம் சௌத்தி முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் நியூசிலாந்து அணிக்காக 250 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது பந்து வீச்சாளர் என்ற மைல்கல்லை எட்டுவதற்கு அவருக்கு இன்னும் ஒரு விக்கெட்டே தேவையாக உள்ளது. எனினும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் 500 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

“நீண்ட காலமாக விளையாடி வரும் நிலையில் மைல்கற்களை எட்டுவது சிறந்த உணர்வை ஏற்படுத்துகிறது. பந்துவீச்சாளர்களின் பணி விக்கெட்டுகளை வீழ்த்துவதாகும். அதிக விக்கெட்டுகளை எடுக்கும்போதும் அதிக மைல்கற்களை எட்ட முடியும். எந்த நேரமும் விக்கெட்டுகள் வீழ்த்துவது முக்கிய தருணங்களாகவே உள்ளன”’ என்று குறிப்பிட்டார்.

ஒரு தினத்திற்கு முன்னரே நியூசிலாந்து அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான டிரென்ட் போல்ட் 250 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டியமை குறிப்பிடத்தக்கது. 

“நாம் இருவரும் நீண்ட காலமாக ஒன்றாக விளையாடுகிறோம். நாடு திரும்பியதும் முதல் தரப் போட்டிகளிலும் விளையாடுகிறோம். அவர் ஒரு சிறந்த நண்பராக உள்ளார். எமது நட்பு ஆடுகளத்தில் உதவுகிறது” என்று டிரென்ட் போல்ட் பற்றி சௌத்தி குறிப்பிட்டார்.   

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<