ஆசிய 7’s ரக்பி கிண்ண முதலாம் கட்ட போட்டிகளில், பிலிப்பைன்ஸ் அணியை 32-19 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்றதன் மூலம் இலங்கை அணி பிளேட் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

கப் காலிறுதிப் போட்டிஇலங்கை எதிர் சீனா

முதல் நாளில், குழுவில் 3ஆம் இடத்தை பிடித்துக்கொண்ட இலங்கை அணி, இரண்டாம் நாளில் காலிறுதிப் போட்டியில் சீன அணியிடம் 36-12 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியுற்று அரையிறுதி வாய்ப்பை தவறிவிட்டது.

பலம் மிக்க சீன அணியானது ஆரம்பம் முதலே இலங்கை வீரர்களுக்கு சவால் கொடுத்தது. அவ்வகையில் காவோ பிங் 2ஆவது நிமிடத்தில் சீன அணிக்காக முதலாவது ட்ரை வைத்தார். (சீனா 07-00 இலங்கை)

பலம் மிக்க சீன வீரர்களை தாக்குப்பிடிக்க முடியாத நிலையில், ஸ்க்ரம் நிலையில் பந்தை தவறவிட்ட இலங்கை வீரர்கள் பெனால்டி வாய்ப்பொன்றை சீன அணிக்கு வழங்கினர். இதனைப் பயன்படுத்தி உடனடியாக பந்தை பெற்றுக்கொண்டு ஷான் ஷாங் சீன அணி சார்பாக இரண்டாவது ட்ரை வைத்தார். (சீனா 14-00 இலங்கை)

SL vs China

மறுபடியும் தனது 22மீட்டர் எல்லைக்குள் தவறிழைத்த இலங்கை அணி பெனால்டி வாய்ப்பை சீன அணிக்கு வழங்கியது. இம்முறை சென் யோங் சீன அணி சார்பாக ட்ரை கோட்டை கடந்து புள்ளிகளை 21 ஆக அதிகரித்தார். (சீனா 21-00 இலங்கை)

முதல் பாதி நிறைவடைய முன்னர் இலங்கை அணி ட்ரை ஒன்றை பெற்றுக்கொண்டது. ரத்வத்த மற்றும் தலைவர் முததந்திரி இலங்கை அணி சார்பாக பந்தை நகர்த்தி சென்று ட்ரை வைத்து இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர்.

முதல் பாதி: சீனா 21- 05 இலங்கை

இரண்டாம் பாதியில் முதலில் இலங்கை அணி சீன அணிக்கு சவால் கொடுத்தது. இலங்கை அணியின் பலம் கொண்ட வீரரான ஓமல்க இலங்கை அணிக்கு ட்ரை வைத்து போட்டியை நாம் இன்னும் கைவிடவில்லை என சீன வீரர்களுக்கு உணர்த்தினார்.( சீனா 21-12 இலங்கை)

போட்டியை வெற்றிகொள்வதற்கு தனது திறமையை வெளிக்காட்ட வேண்டிய நிலையில் இலங்கை அணி காணப்பட்டாலும், அதனை சரிவர பூர்த்தி செய்ய தவறியது. ஷான் ஷெங் மீண்டும் ஒரு ட்ரை வைத்து இலங்கை அணியின் அரையிறுதி கனவுகளை தகர்த்தார். (சீனா 26-12 இலங்கை)

போட்டி நிறைவடைய முன்னர் மேலும் இரண்டு ட்ரைகளை வைத்த சீன அணியானது அரையிறுதியில் தமது இடத்தை உறுதி செய்துகொண்டது.

முழு நேரம்: சீனா 36 – 12 இலங்கை

அரையிறுதிப் போட்டிஇலங்கை எதிர் மலேசியா

SL v Malaysia

கப் காலிறுதிப் போட்டியில் சீன அணியிடம் தோல்வியுற்ற இலங்கை அணியானது, இப்போட்டியில் மலேசிய அணியை 45-00 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்று தமது திறமையை உலகிற்கு வெளிக்காட்டியது.

போட்டி ஆரம்பித்ததிலிருந்து மலேசிய அணிக்கு அழுத்தம் கொடுத்த இலங்கை அணி, தனது முதல் ட்ரையை கெவின் டிக்சன் மூலமாக பெற்றுக்கொண்டது. தொடர்ந்து ஜயவர்தனகேவும் இலங்கை அணி சார்பாக ட்ரை வைக்க, இலங்கை அணி 12 புள்ளிகள் பெற்று முன்னிலையடைந்தது.

ஆசிய ரக்பி தொடரின் முதலாவது நாளில் இலங்கைக்கு 3ஆவது இடம்

ஹொங்கொங்கில் நடைபெறும் ஆசிய அணிக்கு 7 பேர் கொண்ட ரக்பி போட்டிகளில், முதலாம்..

இலங்கை அணிக்கு 3ஆவது ட்ரையை தனுஷ் தயான் வைத்ததோடு, தொடர்ந்து நான்காவது ட்ரையையும் டிக்சனின் உதவியுடன் தயான் வைத்தார். முதல் பாதி நிறைவடைய சிறிது நேரம் இருக்கையில், இளம் வீரர் நவீன் ட்ரை கோட்டை கடந்தது இலங்கை அணியின் புள்ளிகளை மேலும் அதிகரித்தார்.

முதல் பாதி: இலங்கை 26 – 00 மலேசியா

இரண்டாம் பாதியிலும் தனது திறமையை வெளிக்காட்டிய இலங்கை அணி, களைப்படைந்த மலேசிய அணியை இலகுவாக முறியடித்தது. தரிந்த ரத்வத்த இரண்டாம் பாதியில் ட்ரை வைத்து புள்ளிகளை ஆரம்பித்து வைக்க, மீண்டும் ஒரு முறை ஜெயவர்தனகே ட்ரை வைத்து இலங்கை அணிக்கு பலம் சேர்த்தார்.

தொடர்ந்து பலம் மிக்க ஜேசன் திஸாநாயக்க இலங்கை சார்பாக ட்ரை கோட்டை கடக்க இலங்கை அணி பலமான நிலையை அடைந்தது.13ஆவது நிமிடத்தில் இலங்கையின் 22 மீட்டர் எல்லைக்குள் நுழைந்து மலேசிய அணி இலங்கைக்கு அழுத்தம் கொடுத்த போதிலும், அதனை சிறப்பாக எதிர்கொண்ட இலங்கை அணி, தமக்கெதிராய் எந்த ஒரு புள்ளிகளையும் பெற்றுக்கொள்ளவிடவில்லை.

முழு நேரம்: இலங்கை 45 – 00 மலேசியா

பிளேட் கிண்ண இறுதிப்போட்டிஇலங்கை எதிர் பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ் அணியானது முதல் சில நிமிடங்களிலேயே முதல் ட்ரை வைத்து இலங்கை அணிக்கு அழுத்தம் கொடுத்தது. பிலிப்பைன்ஸ் அணியின் டொம்மி கில்பர்ட் ட்ரை வைத்து பிலிப்பைன்ஸ் அணிக்கு முன்னிலையை பெற்றுக்கொடுத்தார். (இலங்கை 00-07 பிலிப்பைன்ஸ்)

தொடர்ந்து இலங்கை அணி ஒரு சிறப்பான ட்ரையின் மூலம் பதிலடி கொடுத்தது. சிறப்பாக திறமையை வெளிக்காட்டிய இலங்கை அணி, பந்தை பரிமாறி இறுதியில் தரிந்த ரத்வத்த மூலமாக முதலாவது ட்ரை வைத்தது. (இலங்கை 05-07 பிலிப்பைன்ஸ்)

விறுவிறுப்பாக நடந்த முதல் பாதியில், இலங்கை அணித் தலைவர் சுதர்ஷன முததந்திரிக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டு அவர் வெளியேற்றப்பட, இதனைப் பயன்படுத்தி பிலிப்பைன்ஸ் அணியின் வின்சென்ட் யங் இரண்டாவது ட்ரை வைத்து போட்டியை தமது அணியின் பக்கம் திருப்பினார். (இலங்கை 05-12 பிலிப்பைன்ஸ்)

முதல் பாதி நிறைவடைய சில செக்கன்களுக்கு முன்னர், இலங்கை அணியின் இளம் நட்சத்திர வீரரான நவீன் மற்றும் ஸ்ரீநாத் சூரியபண்டாரவின் உதவியுடன் கெவின் டிக்சன் ட்ரை வைத்தார். கெவின் டிக்சனை தாமதித்து தடுத்த குற்றத்தின் காரணமாக, டொம்மி கில்பர்ட்டுக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.

முதல் பாதி: இலங்கை 10 – 12 பிலிப்பைன்ஸ்

2 புள்ளிகள் பின் தங்கிய நிலையில் இரண்டாம் பாதியை இலங்கை அணி ஆரம்பித்தாலும், இரண்டாம் பாதியில் பலம் மிக்க பிலிப்பைன்ஸ் அணியை இலங்கை அணி சிறப்பாக முகம் கொடுத்தது. முதல் நிமிடத்திலேயே எதிரணியின் தடையை தகர்த்து தலைவர் முததந்திரி ட்ரை வைத்து இலங்கை அணியின் புள்ளியை ஆரம்பித்து வைத்தார். (இலங்கை 15-12 பிலிப்பைன்ஸ்)

தொடர்ந்து பிலிப்பைன்ஸ் அணிக்கு அழுத்தம் கொடுத்த இலங்கை அணி நவீன் மற்றும் சூரியாராச்சி மூலமாக மற்றுமொரு ட்ரை வைத்தது. (இலங்கை 20-12 பிலிப்பைன்ஸ்)

இளம் வீரர் நவீன் மற்றும், புத்திம பிரியரத்ன ஆகியோர் தனது வேகத்தை பயன்படுத்தி ட்ரை வைக்க இலங்கை அணி பிலிப்பைன்ஸ் அணிக்கு கடும் சவால் விடுத்தது. (இலங்கை 27-12 பிலிப்பைன்ஸ்)

இலங்கை அணி தனது இறுதி ட்ரையை கெவின் டிக்சன் மூலம் பெற்றுக்கொண்டது. போட்டி நிறைவடைய முன்னர் பிலிப்பைன்ஸ் அணியானது டானியல் மத்தியூ மூலமாக ஆறுதல் ட்ரை ஒன்றை வைத்தது.

முழு நேரம்: இலங்கை 32 – 10 பிலிப்பைன்ஸ்

இவ்வெற்றியின் மூலம் ஆசிய 7’s முதலாம் கட்ட போட்டிகளில் இலங்கை அணியானது 5ஆம் இடத்தை பிடித்துக்கொண்டது. இன்னும் 3 வாரத்தில் இரண்டாம் கட்ட போட்டிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, இத்தொடரில் வெற்றிபெறுவதன் மூலம் உலக கிண்ண போட்டிகளில் விளையாடும் தகுதியை இலங்கை அணி பெற்றுக்கொள்ளும்.