சுழல் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்துடன் அயர்லாந்தை வீழ்த்திய ஆப்கான்

176
Image Courtesy - ICC

3 டி-20 சர்வதேச போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக அயர்லாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் 29 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான டி-20 தொடரில் மூன்றாவது போட்டி மழை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டிருந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 2 – 0 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆப்கான் சுழலில் சுருண்டது அயர்லாந்து

இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரின் முதலாவது போட்டி இன்று (27) அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் ஆரம்பமானது. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணித்தலைவர் வில்லியம் போர்டபீல்ட் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார். ஆப்கானிஸ்தான் அணி சார்பாக டி-20 போட்டிகளில் இரண்டு போட்டிகளிலும் அரைச்சதம் கடந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஹசரதுல்லாஹ் ஷசாய் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அறிமுக வீரராக இணைக்கப்பட்டிருந்தார். மேலும் அவ்வணியின் அனுபவம் மிக்க அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மொஹமட் ஷஸாட் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ஓட்டங்களை பெற்று தமது இன்னிங்ஸை நிறைவு செய்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்கத் தவறிய நிலையில் 25 ஓட்டங்களுக்கு முதலிரண்டு விக்கெட்டுகளையும் இழந்தது. அறிமுக வீரர் ஹசரதுல்லாஹ் ஷசாய் மற்றும் இஹ்ஷானுல்லாஹ் ஆகியோர் முறையே 14 மற்றும் 9 என்ற குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து விளையாடிய மத்தியவரிசை வீரர்களின் நிதானமான மற்றும் சிறப்பான இணைப்பாட்டங்கள் ஆப்கானிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வழுச்சேர்ததன. இறுதியில் அவ்வணி 9 விக்கெட்டுகளை இழந்து 227 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஆப்கானிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் குல்படின் நைப் (Gulbadin Naib) 64 ஓட்டங்களையும் ஹஷ்மதுல்லாஹ் ஷாஹிதி 54 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் அயர்லாந்து அணி சார்பாக டிம் முர்டாக் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் போய்ட் ரன்கின் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

228 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 48.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்களை மட்டுமே பெற்று 29 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. இலகுவான வெற்றி இலக்காக இருந்த போதிலும் அயர்லாந்து அணி சிறந்த இணைப்பாட்டங்களைப் பெறத் தவறியதன் காரணமாக வெற்றி இலக்கை அடைவதற்கான வாய்பபை இழந்தது. மேலும் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சு மிகச் சிறப்பாகவே இருந்தது என்றால் அது மிகையாகாது.

தோல்வியுறாத அணியாக T20 லீக்கில் முன்னேறும் கொழும்பு அணி

துடுப்பாட்டத்தில் அயர்லாந்து அணி சார்பாக அன்டி பல்பரேனி 55 ஓட்டங்களையும் கேரி வில்சன் 38 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் ஆப்கான் அணி சார்பாக அஃப்டாப் அலாம், ராஷித் கான் மற்றும் மொஹமட் நபி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் வீழ்ததியிருந்தனர். இவ்வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1 – 0 என்ற அடிப்படையில் ஆப்கானிஸ்தான் அணி முன்னிலை வகிக்கின்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

ஆப்கானிஸ்தான் – 227/9 (50) – குல்படின் நைப் 64, ஹஷ்மதுல்லாஹ் ஷாஹிதி 54, டிம் முர்டாக் 31/4, போய்ட் ரன்கின் 44/3

அயர்லாந்து – 198 (48.3) – அன்டி பல்பரேனி 55, கேரி வில்சன் 38, அஃப்டாப் அலாம் 34/2, ராஷித் கான் 41/2, மொஹமட் நபி 42/2

போட்டி முடிவு – ஆப்கானிஸ்தான் அணி 29 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<