இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில், சிலோன் பிஸ்கட் லிமிடெட் நிறுவனத்தின் பிரசித்திபெற்ற வர்த்தக நாமமான மஞ்சியின் அனுசரணையில், தொடர்ந்து 11 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வருடத்துக்கான தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டிக்கு இலங்கை மின்சார சபை அணியும், துறைமுக அதிகார சபையும் தெரிவாகின.

இது இவ்வாறிருக்க, நேற்று (09) இரவு நடைபெற்ற 3 ஆவது இடத்துக்கான போட்டியின் ஆண்கள் பிரிவில் மாஸ் கெஷுவலைன் (MAS Casualline) அணியை 3 – 0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இலங்கை இராணுவ அணியும், பெண்கள் பிரிவில் இலங்கை கடற்படை அணியை 3 – 0 என்ற செட் கணக்கில் வீழ்த்திய மாஸ் கெஷுவலைன் பெண்கள் அணியும் வெற்றிகளைப் பதிவு செய்தன.

பங்களாதேஷ் இளையோர் அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இலங்கை

நாடளாவிய ரீதியில் இருந்து சிறந்த கரப்பந்தாட்ட வீரர்களை உருவாக்கும் நோக்கில் இடம்பெற்றுவரும் இம்முறைப் போட்டித் தொடரில் 2000 இற்கும் அதிகமான கழகங்கள் பங்குபற்றியிருந்தன.

அதுமாத்திரமின்றி, ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவுகளுக்குமாக நடைபெற்ற இந்த போட்டித் தொடரின் காலிறுதிப் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள் மற்றும் 3 ஆவது இடத்துக்கான போட்டிகள் கடந்த 3 தினங்களாக மஹரகம தேசிய இளைஞர் மன்ற உள்ளக அரங்கில் நடைபெற்றது.

ஆண்களுக்காக A மற்றும் B என இரு பிரிவுகளாக நடைபெற்ற இம்முறை போட்டித் தொடரில் A பிரிவிற்கான இறுதிப் போட்டியில் கடற்படை அணியை வீழ்த்தி இலங்கை மின்சார சபை சம்பியனாகத் தெரிவாகியதுடன், B பிரிவிற்காக நடைபெற்ற இறுதிப் போட்டியில் மாஸ் லெஷர் லைன் அணியை வீழ்த்தி இலங்கை இராணுவ அணியும் சம்பியனாகத் தெரிவாகியது. இதன்படி, குறித்த நான்கு அணிகளும் அரையிறுதிச் சுற்றுக் தகுதியைப் பெற்றுக்கொண்டன.

இலங்கை மின்சார சபை எதிர் மாஸ் லெஷர் லைன் அணி (முதலாவது அரையிறுதி)

நேற்று (9) காலை நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை மின்சார சபை அணியும், மாஸ் லெஷர் லைன் அணியும் பலப்பரீட்சை நடாத்தின.

போட்டியின் ஆரம்பத்திலிருந்து முன்னிலை பெற்ற மின்சார சபை அணி, 25-17 என்ற புள்ளிகள் அடிப்படையில் முதல் செட்டை இலகுவாக வெற்றி கொண்டது. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய மின்சார சபை அணி, 25-16 என்ற புள்ளிகள் அடிப்படையில் எதிரணியை வீழ்த்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டில் அனுபவமிக்க வீரர்களைக் கொண்ட மின்சார சபை அணிக்கு எதிராக மாஸ் லெஷர் லைன் வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்த செட்டில் மாஸ் லெஷர் லைன் அணி 20-21 என நான்கு புள்ளிகளால் முன்னேற போட்டி சூடுபிடித்தது. இறுதியில் இரண்டு அணிகளும் 24-24, 25-25, 26-26, 27-27 என நான்கு தடவைகளில் புள்ளிகள் சமனிலைப்பெற, மாஸ் லெஷர் லைன் அணி தொடர்ந்து இரண்டு புள்ளிகளை பெற்று, 27-29 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டி அந்த செட்டை கைப்பற்றியது.

தேசிய ஸ்னூகர் சம்பியனாக மகுடம் சூடிய மொஹமட் பாஹிம்

இந்த நிலையில் மின்சார சபை அணியின் வெற்றியை தீர்மானிக்கும் நான்காவது செட் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றது. செட்டின் முதல் திட்டமிடல் இடைவேளையில் மாஸ் லெஷர் லைன் அணி, 1-5 என முன்னிலைபெற, இரண்டாவது இடைவேளையின் போது, அந்த அணி 11-16 என நான்கு புள்ளிகளால் முன்னேற போட்டி சூடுபிடித்தது. இறுதியில் 25-18 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டிய மாஸ் லெஷர் லைன் அணி போட்டியை 2-2 என சமப்படுத்தியது.

இதனால் இரண்டு அணிகளும் கட்டாய வெற்றியை நோக்கிய இறுதிச் செட்டில் போட்டியிட்டன. 15 புள்ளிகளாக நிர்ணயிக்கப்படும் இறுதி செட்டின் முதல் பகுதியில் மின்சார சபை அணி 3-0 என முன்னிலை பெற்றது. எனினும், அடுத்த பாதியில் மாஸ் லெஷர் லைன் அணி சிறப்பாக விளையாடி 10-05 என புள்ளிகளை உயர்த்திக்கொண்டது. எனினும், 15-09 என்ற புள்ளிகள் அடிப்படையில் அந்த செட்டையும் மாஸ் வீரர்கள் கைப்பற்றினர்.

இதனடிப்படையில் 25-16, 25-17, 27-29, 25-18 மற்றும் 15-09 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்ற மாஸ் லெஷர் லைன் அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

இலங்கை துறைமுக அதிகார சபை எதிர் இலங்கை இராணுவ அணி (இரண்டாவது அரையிறுதி)

முதல் செட்டின் முதல் பகுதியில் இரண்டு அணிகளும் சம புள்ளிகளுடன் விளையாடின. எனினும், போட்டியின் முதலாவது உத்தியோகபூர்வ இடைவேளையில், 18-17 என்ற புள்ளிகளைப் பெற்று துறைமுக அதிகார சபை அணி முன்னிலை பெற்றது. தொடர்ந்து எதிரணிக்கு பலத்த போட்டியைக் கொடுத்த துறைமுக அதிகார சபை அணி 25-23 என்ற புள்ளிகள் அடிப்படையில் முதல் செட்டை கைப்பற்றியது.

பின்னர் தொடங்கிய இரண்டாவது செட்டில் 12-08 என துறைமுக அணி, முன்னிலை பெற்றது. எனினும், புதிய யுக்திகளுடன் போட்டியை தங்கள் பக்கம் திருப்பிய இராணுவ அணி, இரண்டாவது செட்டின் முதல் இடைவேளையில் 15-14 என்ற புள்ளிகளைப் பெற்றது. எனினும், போட்டியின் இறுதிப் பாதியில் இரண்டு அணி வீரர்களும் சவால்மிக்க போட்டியை வெளிப்படுத்திய காரணத்தால் 24-24, 25-25, 26-26 என மூன்று தடவைகள் புள்ளிகள் சமனிலை அடைந்தது. இறுதியில் 28-26 என்ற புள்ளிகள் கணக்கில் துறைமுக அதிகார சபை அணி அந்த செட்டை கைப்பற்றியது.

தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டிலும் துறைமுக அணிக்கு நெருக்கடி கொடுத்த இராணுவ அணி, 25-23 என்ற புள்ளிகள் கணக்கில் அந்த செட்டை கைப்பற்றியது.

எனினும், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து நடைபெற்ற நான்காவது செட்டை 25-19 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றிய துறைமுக அதிகார சபை அணி, 3-1 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது

இலங்கை இராணுவ அணி எதிர் மாஸ் லெஷர் லைன் அணி (3ஆவது இடத்துக்கான போட்டி – ஆண்கள்)

முதல் செட்டிலிருந்து தங்களது முழுமையான ஆதிக்கத்தை செலுத்திய இலங்கை இராணுவ அணி, 25-16 என 9 புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் செட்டை கைப்பற்றியது.

இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சந்திமால் பங்கேற்பது சந்தேகம்

பின்னர், போட்டியில் 1-0 என்ற முன்னிலையுடன் இரண்டாவது செட்டை எதிர்கொண்ட இராணுவ அணிக்கு, எதிரணியினர் பலத்த போட்டியைக் கொடுத்திருந்தனர். எனினும், மீண்டும் தங்களது பலத்தை நிரூபித்த இராணுவ வீரர்கள், 26-24 என்ற புள்ளிகள் கணக்கில் இரண்டாவது செட்டையும் வெற்றி கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீர்மானமிக்க மூன்றாவது செட்டில் 25-19 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவான வெற்றியைப் பெற்றுக்கொண்ட இலஙகை இராணுவ, அணி  2018 ஆம் ஆண்டுக்கான தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் மூன்றாவது இடத்தை பெற்றுக்கொண்டது.

இலங்கை கடற்படை அணி எதிர் மாஸ் கெஷுவலைன் அணி (3ஆவது இடத்துக்கான போட்டி – பெண்கள்)

மாஸ் கெஷுவலைன் அணிக்கு போட்டியின் ஆரம்பத்திலிருந்து கடும் நெருக்கடியை கொடுத்த கடற்படை அணி, முதல் செட்டின் முதலாவது உத்தியோகபூர்வ இடைவேளையில், 17-6 என்ற புள்ளிகள் முன்னிலையில் ஆட்டத்தை நகர்த்தியது. எனினும், புதிய யுக்திகளுடன் ஆட்டத்தின் முன்னிலையை தங்கள் பக்கம் திருப்பிய கெஷுவலைன் அணி, 15-17 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் எதிரணியை நெருங்கியது. இறுதியில் முதலாவது செட்டை 25-23 என கெஷுவலைன் அணி கைப்பற்றியது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் கடற்படை அணிக்கு நெருக்கடி கொடுத்த கெஷுவலைன் அணி 25-22 என்ற புள்ளிகள் கணக்கில் அந்த செட்டை கைப்பற்றி, போட்டியில் 2-0 என முன்னிலையைப் பெற்றது.

இந்த நிலையில் கெஷுவலைன் அணியின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றது. இந்த செட்டிலும் அபாரமாக விளையாடிய கெஷுவலைன் வீராங்கனைகள், 25-22 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டி இவ்வருடத்துக்கான தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் 3 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<