பெயார் என்ட் லவ்லி மென்ஸ் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெறும் பிரிவு – B வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இன்றைய நாளில் இரண்டு போட்டிகள் முடிவுக்கு வந்தன.

யுனிலிவர் லங்கா எதிர் மொபிடல் நிறுவனம்

சோனகர் மைதானத்தில் இடம்பெற்று முடிந்த இப்போட்டியில் யுனிலிவர் லங்காவினை 7 விக்கெட்டுக்களால் மொபிடல் அணி வீழ்த்தியது.

ரெவான் கெல்லியின் சதத்துடன் புனித ஜோசப் கல்லூரி வலுவான நிலையில்

சிங்கர் நிறுவன அனுசரணையில்…

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யுனிலிவர் லங்கா அணியினர்  சவாலான இலக்கொன்றை வைக்கும் நோக்கோடு முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தனர். எனினும் எதிரணிப் பந்துவீச்சினால் மிகவும் தடுமாற்றத்தினை உணர்ந்த யுனிலிவர்  லங்கா 29 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

அபாரப் பந்து வீச்சினை வெளிக்காட்டிய மொபிடல் அணியில் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான லஹிரு சமரக்கோன் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை பதம்பார்த்திருந்தோடு லக்ஷன் ஜயசிங்க மற்றும் கோஷான் தனுஷ்க ஆகியோரும் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர்.

தொடர்ந்து இலகு வெற்றி இலக்கான 106 ஓட்டங்களை பெற பதிலுக்கு ஆடிய மொபிடல் அணியினர் சுபேஷால ஜயத்திலக்க (35) மற்றும் எரங்க ரத்னாயக்க (33) ஆகியோர் வலுச்சேர்க்க மூன்று விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியின் வெற்றியாளர்களாக ஆகினர்.

போட்டியின் சுருக்கம்

யுனிலிவர் லங்கா – 105 (29) லஹிரு சமரக்கோன் 3/28, லக்ஷான் ஜயசிங்க 2/10, கோஷான் தனுஷ்க 2/18

மொபிடல் – 106/3 (14) சுபேஷ ஜயத்திலக்க 35*, எரங்க ரத்னாயக்க 33*, யோமேஷ் ரணசிங்க 2/26


ஜோன் கீல்ஸ் ஹொல்டிங் (B) எதிர் கொமர்ஷல் கிரடிட் (B)

BRC மைதானத்தில் நடைபெற்று முடிந்த இப்போட்டியில் 31 ஓட்டங்களால் கொமர்ஷல் கிரடிட் அணியினை ஜோன் கீல்ஸ் ஹொல்டிங் நிறுவனம் வீழ்த்தியது.

முன்னதாக இத்தொடரில் தமது இறுதிப் போட்டியில் தோல்வியினை தழுவிய கொமர்ஷல் கிரடிட் அணியின் தலைவர் ப்ரனீத் விஜேயசேன இந்தப் போட்டியின் நாணய சுழற்சியினை கைப்பற்றி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை ஜோன் கீல்ஸ் ஹொல்டிங் அணிக்கு வழங்கினார்.

இதன்படி முதலில் களமிறங்கிய ஜோன் கீல்ஸ் ஹொல்டிங் அணியினர் 43 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 209 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். இதில் ரவீந்து கொடித்துவக்கு ஜோன் கீல்ஸ் ஹொல்டிங் அணி சார்பாக சிறப்பாக செயற்பட்டு 50 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதோடு மறுமுனையில் அஷேன் பீரிசும் 44 ஓட்டங்களினை சேர்த்திருந்தார்.

கொமர்ஷல் கிரடிட் அணியின் பந்து வீச்சில் தனோஜ் டி சில்வா, சனித டி மெல், அனுர டயஸ் மற்றும் சுரங்க சலிந்த ஆகிய வீரர்கள் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

தொடர்ந்து ஆட்டத்தின் வெற்றியிலக்கான 210 ஓட்டங்களை பெற தமது துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த கொமர்ஷல் கிரடிட் வீரர்கள் 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களினை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தனர்.

அணி தோல்வியினை தழுவிய போதிலும் போராட்டத்தை காட்டிய கொமர்ஷல் கிரடிட்டின் சனித டி மெல் 47 ஓட்டங்களினையும், அகீல் இன்ஹாம் 28 ஓட்டங்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று ஜோன் கீல்ஸ் அணியின் பந்து வீச்சு சார்பாக நுவான் துஷார 3 விக்கெட்டுக்களையும், புனித தோமியர் கல்லூரியின் முன்னாள் சுழல் வீரர் தரிந்து ரத்னாயக்க 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி தமது அணியினை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

ஜோன் கீல்ஸ் ஹொல்டிங் (B) – 209 (43) ரவிந்து கொடித்துவக்கு 50, அஷேன் பீரிஸ் 44, தனோஜ் டி சில்வா 2/37, சனித டி மெல் 2/37, அனுர டயஸ் 2/38, சுரங்க சலிந்த 2/47

கொமர்ஷல் கிரடிட் (B) – 178 (47.2) சனித டி மெல் 47, அகீல் இன்ஹாம் 28, நுவான்  துசார 3/40, தரிந்து ரத்னாயக்க 2/43