டெஸ்ட் தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்

100

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) டெஸ்ட் அணிகளுக்காக வெளியிட்டிருக்கும் புதிய தரவரிசையில் இலங்கை அணி ஐந்தாம் இடத்திற்கு முன்னேற்றம் கண்டிருக்கின்றது. 

சர்வதேச கிரிக்கெட் வாரியமானது டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 அணிகளுக்கான புதிய தரவரிசைகளை இன்று (1) வெளியிட்டிருந்தது. இதில் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் முன்னர், ஆறாம் இடத்தில் காணப்பட்ட இலங்கை அணி 91 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியிருக்கின்றது.

அடுத்த வருடத்திற்கு பிற்போடப்படும் தி ஹன்ட்ரட்

இங்கிலாந்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவிருந்த தி ஹன்ட்ரட் கிரிக்கெட்………….

தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய தரவரிசைகள் 2019ஆம் ஆண்டின் மே மாதத்தில் விளையாடப்பட்ட கிரிக்கெட் போட்டிகளின் 100 சதவீத முடிவுகளின் அடிப்படையிலும், அதற்கு முன்னர் இரண்டு ஆண்டுகளுக்கு விளையாடப்பட்ட கிரிக்கெட் போட்டிகளின் 50 சதவீத முடிவுகளின் அடிப்படையிலும் தயாரிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி இவ்வாறு புதிய தரவரிசை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட குறிப்பிட்ட காலப்பகுதிகளில் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பதிவுகளைக் காட்டியதே ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியமைக்கு காரணமாகும். 

இதேநேரம், புதிதாக வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 116 புள்ளிகளுடன் முதல் இடம் பெற்றிருப்பதோடு, ஏற்கனவே முதலிடத்தில் காணப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி 2016ஆம் ஆண்டின் ஒக்டோபருக்குப் பின்னர் முதல்தடவையாக 114 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டிருக்கின்றது. அதேவேளை டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் 115 புள்ளிகளுடன் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றது.  

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நடைபெறுமா?

இலங்கைக்கு ஜூலை மாதத்தின் கடைசிப் பகுதியில் சுற்றுப்பயணம் ………

இங்கிலாந்து அணி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் 105 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் இருக்க அண்மையில் பல டெஸ்ட் தொடர் தோல்விகளை சந்தித்த தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி 90 புள்ளிகளுடன் 6ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டிருக்கின்றது. இதேநேரம், ஆசிய அணிகளில் ஒன்றான பாகிஸ்தான் 86 புள்ளிகளுடன் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் 7ஆம் இடத்தில் காணப்படுகின்றது.

மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் புதிய டெஸ்ட் தரவரிசையில் முறையே 8ஆம், 9ஆம், 10ஆம் இடங்களை தக்கவைத்திருக்கின்றன.  

ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் 2019ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி 127 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் காணப்படுவதோடு, இந்திய கிரிக்கெட் அணி 119 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றது. இதில், நியூசிலாந்து மூன்றாம் இடத்திலும், தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகள் முறையே நான்காம், ஐந்தாம் இடங்களிலும் காணப்படுகின்றன. 

இலங்கை கிரிக்கெட் அணி புதிய ஒருநாள் அணிகள் தரவரிசையில் 85 புள்ளிகளுடன் 8ஆம் இடத்தில் காணப்படுகின்றது. 

T20 அணிகளுக்கான தரவரிசையினை நோக்கும் போது, கடந்த 27 மாதங்கள் T20 அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி நான்காம் இடத்திற்கு பின்தள்ளப்பட, அவுஸ்திரேலியா டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை போன்று T20 தரவரிசையிலும் முதலிடத்திற்கு முன்னேறியிருக்கின்றது. T20 தரவரிசையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 278 புள்ளிகளுடன் காணப்பட, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 260 புள்ளிகளுடன் இருக்கின்றது. 

T20 அணிகளுக்கான தரவரிசையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 268 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தினைப் பெற்றிருக்க இந்தியா, 266 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் காணப்படுகின்றது. தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி T20 அணிகளுக்கான தரவரிசையில் 258 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் இருக்க, இலங்கை அணி 230 புள்ளிகளுடன் ஏழாம் இடத்தினைப் பெற்றிருக்கின்றது.

அதேநேரம், T20 உலகக் கிண்ண நடப்புச் சம்பியன்களாக இருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி T20 அணிகளுக்கான தரவரிசையில் 229 புள்ளிகளுடன் 9ஆம் இடத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை 

நிலை நாடு புள்ளிகள்
1 அவுஸ்திரேலியா 116 (+8)
2 நியூசிலாந்து 115 (+5)
3 இந்தியா 114 (-2)
4 இங்கிலாந்து 105 (-)
5 இலங்கை 91 (-)
6 தென்னாபிரிக்கா 90 (-8)
7 பாகிஸ்தான் 86 (+1)
8 மேற்கிந்திய தீவுகள் 79 (-2)
9 பங்களாதேஷ் 55 (-5)
10 ஜிம்பாப்வே 18 (+1)

ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை

நிலை நாடுகள் புள்ளிகள்
1 இங்கிலாந்து 127 (+3)
2 இந்தியா 119 (+1)
3 நியூசிலாந்து 116 (+1)
4 தென்னாபிரிக்கா 108 (-6)
5 அவுஸ்திரேலியா 107 (-2)
6 பாகிஸ்தான் 102 (+4)
7 பங்களாதேஷ் 88 (+1)
8 இலங்கை 85 (+2)
9 மேற்கிந்திய தீவுகள் 76 (-2)
10 ஆப்கானிஸ்தான் 55 (-2)

T20 அணிகளுக்கான தரவரிசை

நிலை நாடுகள் புள்ளிகள்
1 அவுஸ்திரேலியா 278 (+9)
2 இங்கிலாந்து 268 (+1)
3 இந்தியா 266 (+2)
4 பாகிஸ்தான் 260 (-10)
5 தென்னாபிரிக்கா 258 (-1)
6 நியூசிலாந்து 242 (-3)
7 இலங்கை 230 (-2)
8 பங்களாதேஷ் 229 (+2)
9 மேற்கிந்திய தீவுகள் 229 (+3)
10 ஆப்கானிஸ்தான் 228 (-5)

குறிப்பு – -, + ஆகிய குறிகள் மூலம் அணிகள் இறுதியாக வெளியிடப்பட்ட குறிப்பிட்ட வகைப் போட்டிகளுக்கான தரவரிசைகளில் இருந்து இழந்த, பெற்றுக் கொண்ட புள்ளிகள் குறித்துக் காட்டப்பட்டிருக்கின்றது. 

>>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<<