உபாதையிலிருந்து மீண்ட கேதர் ஜாதவ் இந்திய உலகக் கிண்ண அணியில் இடம்பெறுவாரா?

86

தோள்பட்டை காயத்தினால் அவதிப்பட்டு வந்த இந்திய அணியின் சகலதுறை வீரர் கேதர் ஜாதவ், தற்போது முழு உடல்தகுதியுடன் இருப்பதால் உலகக் கிண்ணத்துக்கான இந்திய அணியில் இணைந்து கொள்வார் என இந்திய கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 30 ஆம் திகதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆரம்பமாகவுள்ளது. இம்முறை உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி எதிர்வரும் 22 ஆம் திகதி இங்கிலாந்து நோக்கி பயணமாகவுள்ளது.

>> கரீபியன் ப்ரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் இடம்பெற்ற இர்பான் பதான்

இந்த நிலையில், உலகக் கிண்ண இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கேதர் ஜாதவ், இம்முறை ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியுடனான லீக் ஆட்டத்தில் விளையாடிய போது தோள்பட்டையில் உபாதைக்கு உள்ளானார். அதனால், அந்த தொடரின் கடைசி சில போட்டிகளில் அவர் விளையாடவில்லை. அவருக்கு காயம் எப்படி குணமாகிறது என்பதைப் பொறுத்து, உலகக் கிண்ண அணியில் அவருக்குப் பதில் யாரை தேர்வு செய்வது என்பது முடிவு செய்யப்படும் என்று BCCI தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், கேதர் ஜாதவுக்குப் பதிலாக அம்பத்தி ராயுடு, ரிஷாப் பண்ட் ஆகிய வீரர்களை பரிசீலிக்கலாம் என முன்னாள் வீரர்கள் கருத்துத் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், அவர் உடல் நிலையை கவனித்து வந்த இந்திய கிரிக்கெட் அணியின் உடற்கூற்று நிபுணர் (Physio Therapist) பேட்ரிக் பர்ஹர்ட், அவருக்கு தொடர்ந்து பயிற்சிகள் அளித்து வந்தார். இதையடுத்து கடந்த வியாழக்கிழமை அவருக்கு உடல் தகுதி பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் காயம் குணமாகி விட்டது உறுதியானது. இதையடுத்து 22 ஆம் திகதி இங்கிலாந்து செல்லும் இந்திய அணியுடன் கேதர் ஜாதவ்வும் பயணமாகவுள்ளதாக BCCI வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இது தொடர்பில் எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இம்முறை உலகக் கிண்ணத்தில் இடம்பெற்றுள்ள 34 வயதான கேதர் ஜாதவ், 59 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1174 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் இரண்டு சதங்களும் ஐந்து அரைச் சதங்களும் அடங்கும்.

இந்திய அணிக்காக அண்மைக்காலமாக சிறப்பாக செயற்பட்டிருந்த அவர், அடிக்கடி காயங்களுக்கு முகங்கொடுக்கின்ற வீரர்களில் ஒருவராகவும் இருந்து வந்தார். கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் முதல் போட்டியிலேயே காயம் அடைந்து வெளியேறினார். பின்னர் குணமடைந்து ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார். அதன்பிறகு மீண்டும் காயமடைந்தார். பின்னர் காயத்தில் இருந்து மீண்டு வந்து இந்த வருட ஐ.பி.எல் தொடரில் பங்கேற்றார். எனினும், கடந்த 5 ஆம் திகதி பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது மீண்டும் காயம் அடைந்தார்.

>> ICC உலகக் கிண்ணத்துக்கான பாடல் மற்றும் பரிசுத் தொகை வெளியீடு

இதேவேளை, இம்முறை உலகக் கிண்ணத்தில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்ட கேதர் ஜாதவ்வின் உபாதை தற்போது குணமடைந்துள்ளதால் எதிர்வரும் 25 ஆம் திகதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள பயிற்சி ஆட்டத்தில் கேதருக்கு வாய்ப்பளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<