இலங்கையுடனான டெஸ்ட் போட்டிகளில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக கூறும் அல்-ஜெசீரா

1827

இரகசியமான முறையில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட அல்-ஜெசிரா செய்திச் சேவையின் ஆவணப் படம் ஒன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட்ட நிர்ணய சதிகள் இடம்பெற்றதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருப்பதாக கூறப்படுகின்றது.

ஞாயிற்றுக்கிழமை (27) ஒளிபரப்பு செய்யப்படவிருக்கும் இந்த ஆவணப்படத்தில், காலி மைதானத்தின் உதவி முகாமையாளரும், பராமரிப்பாளருமான (Curator) தரங்க இந்திக்க குறித்த போட்டிகளின் முடிவுகளை தங்களுக்கு சாதகமாக ஆக்க துடுப்பாட்ட ஆடுகளத்தை (Pitch) மாற்றி ஆட்ட நிர்ணயக்காரர்களுடன் இணைந்து செயற்பட்டதை அவரது வாயினாலேயே கூறியது பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

லெக்-ஸ்பின் பிரச்சினைக்கு தீர்வு தருவாரா ஹதுருசிங்க?

அதாவது, 2016 ஆம் ஆண்டு இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஒன்றும் 2017 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி ஒன்றும் காலி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த போட்டிகளில் ஆடுகளத்தின் தன்மையை மாற்றி ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுவதை இந்திக்க ஒப்புக் கொண்டதே அல் ஜெசிராவின் இந்த ஆவணப் படத்தில் இருப்பதாக  குறிப்பிடப்படுகின்றது.

இந்திக்க, இந்த ஆவணப்படத்தில் இலங்கையின் இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியின் போது ஆடுகளத்தை துடுப்பாட்ட வீரர்களுக்கு ஏற்றவாறு தயார் செய்ததனை ஒப்புக் கொண்டதும்,  அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் ஆடுகளத்தை பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக மாற்றியதை ஒப்புக் கொண்டதும் தெளிவாக பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த குற்றச் செயலில் எந்தவித கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்பும் இல்லை எனக் கூறப்படுகின்றது.

குறித்த போட்டிகளில் முதல் இன்னிங்சில் ஆடிய இந்திய அணி 600 ஓட்டங்களைப் பெற்றிருந்ததுடன், அவுஸ்திரேலிய அணியினர் இரண்டு இன்னிங்சுகளிலும் வெறும் 85 ஓவர்களைக் கூட தாண்டாமல் 18 விக்கெட்டுக்களை இலங்கையின் சுழல் வீரர்களிடம் பறிகொடுத்து 229 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியிருந்தனர். அத்துடன், அவுஸ்திரேலிய அணியின் போட்டி இரண்டரை நாட்களுக்குள்ளும் முடிவடைந்திருந்தது.

மேலும் இந்த ஆவணப்படத்தில், இலங்கையின் முதல்தர கிரிக்கெட் வீரர் தரிந்து மெண்டிஸ் மற்றும் இந்தியாவின் தொழில்முறை கிரிக்கெட் வீரர் ரொபின் மொர்ரிஸ் ஆகியோர் இந்திக்கவுடன் இணைந்து காலியில் இந்த நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆடுகளத்தின் தன்மையை மாற்றி மீண்டும் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட திட்டம் போட்டதும் பதிவாகி உள்ளதாக  கூறப்படுகிறது.

இங்கிலாந்து அணியின் இலங்கை சுற்றுப் பயணத்தில் ஆட்ட நிர்ணயம் இடம்பெறும் எனக் கூறப்பட்டிருக்கின்றதால்  இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) இந்த விடயம் தொடர்பில் அவதானமாக இருப்பதாக தெரிவித்திருந்ததோடு, ஐ.சி.சி. இற்கும் முழு ஆதரவை வழங்கி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றது.

ஆட்டநிர்ணய குற்றச்சாட்டை மறுக்கும் ரவீன் விக்ரமரட்ன

மறுமுனையில் இந்த ஆவணப்படம் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றில் கருத்து வெளியிட்டிருக்கும் ஐ.சி.சி. இந்த ஆவணப்படத்தில் குறிப்பிட்டுக் காட்டப்படும் குற்றச்சாட்டுக்களை வைத்து சுயாதீன விசாரணை ஒன்றை ஏற்கனவே ஆரம்பித்து விட்டதாக கூறியிருக்கின்றது.

இந்த ஆவணப் படத்தில் ஆடுகளத்தை மாற்றியமைக்கும் இந்த சட்டவிரோத வேலைகளைச் செய்வதற்காக டெஸ்ட் போட்டியொன்றுக்கு 37,000 அமெரிக்க டொலர்களை (இலங்கை நாணயப்படி 58 இலட்ச ரூபாய்) ஆட்ட நிர்ணயக்காரர்கள் மைதான பராமரிப்பாளருக்கு  கொடுப்பதாக கூறியதும் இந்த நிர்ணயத்தில் கிடைக்கும் தவறான பணத்தில் 30 சதவீதத்தை ஆட்ட நிர்ணயத்தை ஒழுங்கு செய்தவர்களுக்கு தர வேண்டும் எனக் கூறியதும் பதிவாகி இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் சபை 2017 ஆம் ஆண்டு ஏற்கனவே உள்ளூர் போட்டி ஒன்றில் இடம்பெற்ற ஆட்ட நிர்ணய சதியை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதியான ரோஹினி மாரசிங்கவை நேற்று நியமித்த நிலையிலையே இந்த புதிய சர்ச்சை கிளம்பியிருக்கின்றது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க