பாடசாலை கிரிக்கெட் செயற்திட்டம் மஹேலவினால் வெளியீடு

341

பாடசாலை கிரிக்கெட்டை ஊக்குவிப்பது தொடர்பான தேசிய மூன்றாண்டு திட்டம் வெளியிடப்பட்டது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்து பாடசாலை வீரர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வெற்றிபெறத் தேவையான பலத்தையும், அனுபவத்தையும் பெற்றுக்கொடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இதன்படி, இலங்கையின் முன்னாள் வீரர்களான சிதத் வெத்தமுனி, ரொஜர் விஜேசூரிய, மஹேல ஜயவர்தன, ரொஷான் மஹானாம, முத்தையா முரளிதரன், ஜயந்த செனவிரத்ன, கால்டன் பேர்னார்ட் உள்ளிட்டோரால் தயாரிக்கப்பட்ட 3 ஆண்டு செயற்திட்டம் நேற்று முன்தினம் (29) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

பாடசாலை மட்ட கிரிக்கெட்டில் நிலவி வருகின்ற குறைபாடுகளை நீக்கி பாடசாலை கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கு அமைய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களைக் கொண்ட விசேட குழுவொன்று கடந்த செப்டெம்பர் மாதம் நியமிக்கப்பட்டது. இதற்கு முன்னர் இது தொடர்பில் பல தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதுடன், இதன் போது பாடசாலை கிரிக்கெட்டில் உள்ள குறைபாடுகள் மற்றும் அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்வது தொடர்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இறுதியாக கடந்த செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பிறகு 15 அம்சங்களைக் கொண்ட முன்மொழிவு ஒன்றும் கல்வி அமைச்சரிடம் சமர்பிக்கப்பட்டன.

இலங்கை அணியிலிருந்து நீக்கப்பட்ட மாலிங்கவின் அதிரடி அறிவிப்பு

இதனையடுத்து இலங்கையின் முன்னாள் வீரர்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்களை உள்ளடக்கிய இறுதி அறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சிதத் வெத்தமுனி, ரொஜர் விஜேசூரிய, மஹேல ஜயவர்தன, முத்தையா முரளிதரன், ரொஷான் மஹானாம, ஜயந்த செனவிரத்ன, கால்டன் பேர்னார்ட் உள்ளிட்ட முன்னாள் வீரர்களுடன், பாடசாலை கிரிக்கெட் சங்க உறுப்பினர்களை உள்ளடக்கிய விசேட ஆலோசனைக் குழுவொன்று கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டது.

இதன்படி, இவ்விசேட ஆலோசனைக் குழுவினால் தயாரிக்கப்பட்ட இறுதி செயற்திட்டம் நேற்று முன்தினம் (29) கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், இதன்போது இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான மஹேல ஜயவர்தன, முன்னாள் டெஸ்ட் அணி வீரரும், ஐ.சி.சி இன் முன்னாள் போட்டி மத்தியஸ்தருமான ரொஷான் மஹானாம மற்றும் சிதத் வெத்தமுனி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்விசேட நிகழ்வின் போது பாடசாலை கிரிக்கெட்டில் பல வருடங்களாக நிலவி வருகின்ற குறைபாடுகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது, பாடசாலை கிரிக்கெட்டில் மேற்கொள்ள வேண்டிய உடனடி அபிவிருத்திகள், பாடசாலை கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பு மற்றும் புதிய முறையிலான போட்டித் தொடர்கள் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய குறுங்கால மற்றும் நீண்டகால விசேட செயற்திட்டமொன்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமிடம் கையளிக்கப்பட்டது.

இது தொடர்பில் மஹேல ஜயவர்தன தனது உரையில் கருத்து தெரிவிக்கையில், ”இலங்கை மக்களின் உயிர்நாடி கிரிக்கெட் என்பது போல இலங்கையில் பாடசாலை கிரிக்கெட் என்பது எல்லாவற்றுக்கும் அடித்தளம் என அனைவரும் அறிவர். இலங்கை அணி தற்போது எதிர்நோக்கியுள்ள பின்னடைவுக்கு பாடசாலை கிரிக்கெட்டை குறை கூறுவதை நான் முற்றாக மறுக்கிறேன். இதற்கு அதனைவிட பல பிரச்சினைகள் உள்ளன. அதேபோன்று பெரும்பாலான பாடசாலை வீரர்களுக்கு பெற்றோர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மைதானத்தின் ஒவ்வொரு திசைகளிலிருந்து அணித் தலைவருக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் பல்வேறு ஆலோசனைகளை வழங்குகின்றனர். இதனால் வீரர்களுக்கு சுயமாக சிந்திக்க முடியாமல் போகின்றது. அவர் யார் சொல்வதைக் கேட்பது என்பது குறித்து தடுமாற்றத்தில் விளையாடுவார். ஆனால் நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருகின்ற கிரிக்கெட்டில் வீரர்கள் சுயமாக சிந்தித்து விளையாடவேண்டும். அதிலும் வெற்றி பெறுவது மாத்திரம் முக்கியம் கிடையாது. சிறந்ததொரு வீரரை உருவாக்குவதுதான் அடிப்படை குறிக்கோளாக இருக்கவேண்டும்.

கிரிக்கெட் விளையாட்டு வர்த்தக பொருளாகிவிட்டது. அந்த வர்த்தகப் பொருளின் நன்மையான பக்கத்துக்கு வீரர்களை கொண்டு செல்வதற்கே நாம் பார்க்கவேண்டும். அவ்வாறில்லாமல் தீமையான பக்கத்துக்கு கொண்டு செல்லக்கூடாது. ஏன் இவ்வாறு நமக்கு நேர்ந்துள்ளது. நாம் வெற்றிபெறும் காலத்தில் சிறப்பாக விளையாடும் போது எமது திட்டங்களை செயற்படுத்த தவறிவிட்டனர். எல்லா நாளும் அனைத்து விடயங்களும் இயல்பாக நடக்கும் என்று நாம் நினைத்தோம். சங்கக்காரவும், முரளிதரனும், ஜயசூரியவும் ஒவ்வொரு நாளும் உருவாகமாட்டார்கள். அதற்கான அடித்தளத்தை நாம் தயார்படுத்த வேண்டும். அதற்கு முதலீடு செய்யவேண்டும். அதனூடாகத்தான் எமக்குத் தேவையான பலனை பெறமுடியும்” என்றார்.

இதேநேரம் புத்திசாதூரியத்துடன் விளையாடும் ஒருவரையே நாம் சகலதுறை வீரர் என்கிறோம். எதிர்காலத்தில் நாம் திறமையான வீரர்களை உருவாக்குவது மட்டுமல்லாது புத்திசாதூரியத்துடன் திறமையை வெளிப்படுத்தும் வீரர்களையும் உருவாக்க வேண்டும். பயிற்சியாளர்கள் ஒருவர் வீரரொருவரை ஊட்டி வளர்க்க வேண்டுமா அல்லது அந்த வீரர் தானாகவே உண்ணுவதற்கு பழகவேண்டுமா என்பது தொடர்பாகவும் சிந்திக்க வேண்டும். பாடசாலை மாணவர்களுக்கு நாம் பயிற்சியளிக்கும் போது அம்மாணவர்கள் எந்தத்துறையில் சாதிக்கக் கூடியவர்கள் என்பதை உணர்ந்து கொள்வதற்கு நாம் இடமளிக்க வேண்டும்.

பங்களாதேஷ் தொடருக்கான உத்தேச இலங்கை குழாம் அறிவிப்பு

இந்நிலையில், முன்னாள் டெஸ்ட் அணி வீரரும், ஐ.சி.சி இன் முன்னாள் போட்டி நடுவருமான ரொஷான் மஹானாம கருத்து வெளியிடுகையில், ”நமது இலங்கை கிரிக்கெட் சபையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரியொருவர் ரொஷான் மஹானாமவுக்கு எந்தவொரு பொறுப்பையும் கொடுக்க முடியாது என கூறியிருந்தார். ஏனென்றால் அவர் அவற்றை பின்பற்றுவதில்லையாம். அந்த அதிகாரிக்கு நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். ஆம். நான் 2 தடவைகள் பதவிகளை துறந்தேன். பொறுப்புக்களை நிறைவேற்ற முடியாமல் நான் விலகினேனா அல்லது அதை நியாயமாக செய்ய முடியாமல் விலகினேனா என்பதை அந்த நபர் கூறினால் நான் மகிழ்ச்சியடைவேன். அதேநேரம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இளையோர் உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்காக 19 வயதுக்கு உட்ப்பட்ட இலங்கை அணி நியூசிலாந்து பயணமாகவுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையைச் சேர்ந்த மூவர் அந்த அணியுடன் பயணமாகவுள்ளனர். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதைவிட மேலுமொரு வீரரோ அல்லது பயிற்சியாளரோ அந்த அணியுடன் பயணித்தால் அது நன்றாக இருக்கும். மேலும், இறுதி 6 மாதங்களில் ஐ.சி.சி இன் ஊழல் ஒழிப்பு அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ஆகவே பிரச்சினை இல்லையென்றால் அவர்கள் ஏன் இலங்கைக்கு வருகின்றார்கள் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்” என்றார்.

இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்றமடையச் செய்யும் நோக்கில் பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து தீர்மானங்களையும் எந்தவொரு வேறுபாடின்றி நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில் விராஜ் காரியவசம் இதன்போது தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

”கடந்த காலங்களில் இலங்கை கிரிக்கெட் பின்னடைவை சந்தித்து வருகின்றதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறானதொரு நிலைமை எதிர்காலத்திலும் ஏற்படாமல் இருப்பதற்கு பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கான சிறந்த அடித்தளமாக பாடசாலைகளிலிருந்து சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதாகும். இதனால் பாடசாலை மட்டத்தில்தான் வீரர்களாக உருவெடுத்து தமது திறமையை வெளிப்படுத்தி தேசிய அணியில் இடம்பெறமுடியும். மீண்டும் ஒருதடவை உலகக் கிண்ணத்தை வெற்றிகொள்ளும் சந்தர்ப்பம் உருவாக்கும் வரைக்கும் அதற்கான பின்புலத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமை பாடசாலைகளுக்கே உள்ளது.

நாம் இதை எந்தவொரு பிரிவினையுமின்றி பாடசாலைகளில் ஆரம்பிக்க வேண்டும். இதற்காக எந்தவொரு தனிப்பட்ட கொள்கையும் பின்பற்றவில்லை. அதேபோன்று தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையாகவும் இது அமையாது. இங்கு கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்வதே பிரதான குறிக்கோளாகும். எனவே, இக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள குறுங்கால மற்றும் நீண்டகால செயற்திட்டங்களை மிகவும் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து பாடசாலை மட்ட கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதுடன், அவற்றை எதிர்வரும் 2018ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தவும் எதிர்பார்த்துள்ளோம். இதற்காக அரசாங்கமாகவும், அமைச்சாகவும் அனைத்து வசதிகளையும் எப்படியாவது பெற்றுக்கொடுக்கப்படும்” எனவும் அவர் தெரிவித்தார்.