நீரில் மூழ்கிய வீராங்கனையை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய பயிற்சியாளர்

211
 

ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெற்ற FINA உலக நீர்நிலை சம்பியன்ஷிப் போட்டியில் நீச்சல் தடாகத்தில் மயக்கமடைந்து உயிருக்குப் போராடிய அமெரிக்க வீராங்கனை அனிதா அல்வாரேஸ் என்பவரை அவரது பயிற்சியாளரே மீட்டு உயிரைக் காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹங்கேரி, புடாபெஸ்டில் 19-வது FINA உலக நீர்நிலை சம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகின்றது.

இதில் கலைநயமிக்க நீச்சலில் நான்கு தடவைகள் ஒலிம்பிக் பதக்கம் வென்ற அனிதா அல்வாரெஸ் பெண்களுக்கான தனிநபர் இறுதிப் போட்டியில் பங்குபற்றியுள்ளார்.

போட்டியின்போதே அவர் திடீரென மயக்கமடைந்து நீரில் முழ்கி நீச்சல் தடாகத்தின் அடிப்பகுதியில் விழுந்தார். அதிஷ்டவசமாக, அவரது பயிற்சியாளர் ஆண்ட்ரியா ஃபுயென்டெஸ் உடனடியாக நீச்சல் தடாகத்தில் குதித்து அனிதா அல்வாரெஸை மீட்டு உயிருடன் காப்பாற்றினார்.

பின்னர் உடனடியாக மருத்துவக் குழுவினர் வந்ததையடுத்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. எனவே அனிதா சுயநினைவு திரும்பினார்

தற்போது அனிதா அல்வாரெஸ் குணமடைந்து வருவதாகவும், அவருக்கு பெரிய அளவு பாதிப்பில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

அவர் மயக்கமடைந்ததற்கு எந்த காரணமும் இல்லை, ஆனால் கலைநயமிக்க நீச்சல் போட்டியில் பங்குபற்றுகின்ற வீரர்கள் நீருக்கடியில் நீண்ட நேரம் தங்கள் மூச்சை கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும். இதன் காரணமாக அவர் மயங்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், உயிர்காப்பாளர்கள் உடனடியாக அவருக்கு முதலுதவி செய்யாததால், தானே நீச்சல் தடாகத்தில் குதிக்க வேண்டியிருந்தது என்று பயிற்சியாளர் ஃபுயென்டெஸ் சம்பவத்தைத் தொடர்ந்து கூறினார்.

அனிதாவை மேலே இழுத்து வந்தபோது அவர் மூச்சு விடவில்லை என்பதால் தான் மிகவும் பயந்ததாக அவர் கூறினார். ஆனால் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார், சிறப்பாக செயல்படுகிறார் என்று அவர் கூறினார்.

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு நீந்தி மாற்றுத்திறனாளி சிறுமி சாதனை

இந்த எதிர்பாரா திடுக்கிடும் சம்பவத்தையடுத்து அல்வாரெஸ் வியாழக்கிழமை ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (24)  குழுநிலை போட்டியில் பங்குபற்றும் நம்பிக்கையில் இருப்பதாகவும் ஃபியூன்டெஸ் மேலும் தெரிவித்தார்.

25 வயதான அனிதா அல்வாரெஸ் போட்டியின் போது மயங்கி விழுந்தது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு பார்சிலோனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச் சுற்றில், அவர் இதேபோல் சுயநினைவை இழந்த நிலையில் காப்பாற்றப்பட்டார்.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<