இலங்கை கிரிக்கட் வாரிய தலைவர் பதினொருவர் அணியின் தலைவராக திரிமான்ன

2160

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணியுடன் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதினொருவர் அணி விளையாடவுள்ளது. இந்த அணி சார்பாக விளையாடவுள்ள 14 பேர் அடங்கிய வீரர்கள் குழாத்தினை இலங்கை தேசிய அணியின் தேர்வாளர்கள் இன்று (20) வெளியிட்டுள்ளனர்.

கொழும்பு கிரிக்கெட் கழக (CCC) மைதானத்தில், 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில்  இடம்பெறவுள்ள இந்தப் பயிற்சிப் போட்டியில் இலங்கை தரப்பிற்கு தலைவராக லஹிரு திரிமான்ன செயற்படவுள்ளார்.

அறிவிக்கப்பட்டிருக்கும் அணியானது, எட்டு துடுப்பாட்ட வீரர்களையும், நான்கு முன்வரிசை வேகப்பந்து வீச்சாளர்களையும், இரண்டு சுழல் வீரர்களையும் கொண்டுள்ளது. இறுதியாக 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கை அணிக்காக இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்த திரிமான்ன, தனக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பின் மூலம் மீண்டும் தேசிய அணியில் பிரவேசிக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் செயற்படவுள்ளார்.

இலங்கை அணியின் 2011 உலகக் கிண்ண தோல்வி ஒரு ஆட்ட நிர்ணயமா?

இலங்கை அணியின் 2011 உலகக் கிண்ண தோல்வி ஒரு ஆட்ட நிர்ணயமா?

ஆட்ட நிர்ணயம் தொடர்பான புதிய குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில் இந்தியாவுக்கு எதிராக …

அதோடு, இக்குழாத்தில் இணைக்கப்பட்டிருக்கும் இளம் வீரர்களில் ஒருவரான சந்துன் வீரக்கொடி, தனுஷ்க குணத்திலக்கவுடன் இணைந்து பயிற்சிப் போட்டியின்போது அணியின் ஆரம்பத் துடுப்பாட்டத்திற்கு வலுச்சேர்க்கவுள்ளார்.

தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரில், ஆறு இன்னிங்சுகளில் ஆடி வெறும் 117 ஓட்டங்களினை மாத்திரம் குவித்த காரணத்தினால், இலங்கை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட கெளசால் சில்வாவிற்கும் இக்குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதோடு, கடந்த அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயற்பட்ட தனன்ஞய டி சில்வாவும் இந்த அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

இறுதியாக இந்திய அணி இலங்கைக்கு மேற்கொண்டிருந்த டெஸ்ட் சுற்றுப் பயணத்தின்போது, அவ்வணிக்கெதிராக 13 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்த சுழல் வீரர் தரிந்து கெளசாலும் இந்திய அணிக்கெதிரான பயிற்சிப் போட்டியில் விளையாட பெயரிடப்பட்டுள்ளார்.

கெளசால், இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரின் மூன்றாம் போட்டியின் பின்னர் முறையற்ற “துஸ்ரா” பந்து வீச்சுப் பாணியினை வெளிப்படுத்துகின்றார் என குற்றம் சாட்டப்பட்டார். எனவே, அவருக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியத்தினால், கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீச தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஐ.சி.சி இனால் நடாத்தப்பட்ட பந்துவீச்சுப்பாணி சோதனைகளின் போது அவர் வீசிய 18 “ துஸ்ரா” சுழல் பந்துகளில் 9 பந்துகள் பந்து வீச்சு விதிமுறைக்கு அமைவான 15 பாகை கோணத்தினை மீறி முழங்கை மடக்கி வீசப்பட்டிருந்ததே தடைக்கு காரணமாக அமைந்திருந்தது.

இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் பதினொருவர் அணி 

தனுஷ்க குணதிலக்க, கெளசால் சில்வா, லஹிரு திரிமான்ன (அணித் தலைவர்), தனன்ஞய டி சில்வா, ரொஷேன் சில்வா, அஷன் பிரியன்ஞன், சந்துன் வீரக்கொடி, கித்ருவான் விதானகே, கசுன் ராஜித, லஹிரு கமகே, விக்கும் சஞ்சய, விஷ்வ பெர்னாந்து, செஹான் ஜயசூரிய, தரிந்து கெளசால்