இலங்கையின் வலைப்பந்தாட்டத்துக்கு தர்ஜினியின் உயரம் மட்டும் போதுமா?

1219

இலங்கையின் வலைப்பந்தாட்ட அரங்கில் தர்ஜினி சிவலிங்கம், மெலெனி விஜேசிங்க மற்றும் எழிலேந்தினி சேதுகாவலர் உள்ளிட்டவர்களின் பெயர்கள் கடந்த சில வாரங்களாக அதிகம் பேசப்பட்டன.  

6 அடியை விட அதிகமான உயரத்தைக் கொண்ட இந்த மூன்று பேரும் தான் இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் பிரதான கோல்போடும் (Shooter) வீராங்கனைகளாக செயற்பட்டு வருகின்றனர்.

நட்பு ரீதியிலான அழைப்பு வலைப்பந்து சுற்றுத் தொடரின் சம்பியனாக இலங்கை

இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு இன்று (30) சுகததாஸ விளையாட்டு…

சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டிகளுக்காக இலங்கை தேசிய அணிக்கு பயிற்சியை வழங்கும் நோக்கில் இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச நட்பு ரீதியிலான அழைப்பு வலைப்பந்தாட்டத் தொடர் கடந்த மே மாதம் 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்றது. இதில் இலங்கை தேசிய அணி, சிங்கப்பூர் தேசிய அணி, இலங்கை அபிவிருத்தி அணி மற்றும் இங்கிலாந்தின் கழக அணியான பிஸ்டார் ஆகிய அணிகள் பங்குகொண்டன.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இலங்கை வலைப்பந்தாட்ட அணி சிங்கப்பூர் வலைப்பந்தாட்ட அணியை 72-70 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி சம்பியன் பட்டத்தினை வென்றது. இதில் இலங்கை அணி, போட்டியின் முதல் ஆட்டத்தில் சிங்கப்பூர் அணியை 65-45 எனவும், இலங்கை அபிவிருத்தி அணியை 74-24 எனவும், இறுதியாக பிஸ்டார் கழகத்தை 97-13 எனவும் தோல்வியடைச் செய்து இந்த தொடரில் எந்தவொரு தோல்வியையும் சந்திக்காத அணியாக இறுதிப் போட்க்கு முன்னேறி, சம்பியன் பட்டத்தையும் தனதாக்கிக் கொண்டது.

இதேநேரம், குறித்த போட்டித் தொடரின் 2ஆவது, 3ஆவது ஆட்டங்கள் இலங்கை அணியின் வியூகத்தை அமைப்பதற்காக வீராங்கனைகளைத் தெரிவு செய்வதற்கான போட்டிகளாகவே இடம்பெற்றிருந்தன. ஆனாலும், கயான்ஜலி அமரவங்ச, கயனி திஸாநாயக்க, சதுரங்கி ஜயசூரிய மற்றும் தர்ஜினி சிவலிங்கம் உள்ளிட்ட பிரபல வீராங்கனைகள் குறித்த இரண்டு ஆட்டங்களிலும் அதிக நேரங்கள் விளையாடவில்லை.

வலைப்பந்தாட்ட உலகில் அதி சிறந்த கோல்போடும் வீராங்கனை என்ற பெருமைக்குரியவரும், ஆசியாவிலேயே அதி உயரமான (208 cm) வலைப்பந்தாட்ட வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கம், சுமார் 3 வருடங்களுக்குப் பிறகு தேசிய வலைப்பந்தாட்ட குழாமில் மீண்டும் இடம்பெற்றிருந்தார்.

கடந்த 2014இல் தர்ஜினி சிவலிங்கம், தேசிய வலைப்பந்தாட்ட அணியிலிருந்து நீங்கினார். இதனையடுத்து நீண்ட இடைவெளியின் பின்னர், இப்போட்டித் தொடரில் அவர் மீண்டும் களமிறங்கினார். அதிலும் குறிப்பாக, புதிய பயிற்றுவிப்பாளர் திலகா ஜினதாசவின் பயிற்றுவிப்பின் கீழ் தர்ஜினி களமிறங்கிய முதல் சர்வதேச போட்டியாகவும் இது அமைந்தது.

2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு ஆசிய வலைப்பந்து சம்பியன் கிண்ணத்தை பெற்றுக்கொடுக்க பெரும் தூணாக இருந்த 6 அடி 10 அங்குலம் உயரத்தைக் கொண்ட தர்ஜினி, 2009 மற்றும் 2011 ஆம் ஆண்டு ஆசியாவின் சிறந்த கோல்போடும் வீராங்கனையாகவும் தெரிவானார். அதனைத்தொடர்ந்து தேசிய வலைப்பந்து அணியின் இணை தலைவியாக செயற்பட்ட தர்ஜினி, முன்னதாக 4 தடவைகள் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

இறுதியாக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் அபாரமாக விளையாடி இலங்கை அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் செல்வதற்கு முக்கிய காரணமாகவும் அவர் இருந்தார்.

2005 முதல் இன்று வரை (அதாவது தேசிய அணிக்காக விளையாடிய 2018 வரையான காலப்பகுதி) இலங்கை வலைப்பந்தாட்ட அரங்கில் முன்னணி வீராங்கனையாக வலம்வந்து கொண்டிருக்கின்ற தர்ஜினி சிவலிங்கத்தின் மீள் வருகையானது இலங்கை அணிக்கு வரப்பிராசதம் என்றே சொல்லலாம்.

யாழ் வீராங்கனை எழிலேந்தினியின் கன்னிப் போட்டியில் இலங்கைக்கு வெற்றி

நான்கு அணிகள் பங்கு கொள்ளும் நட்பு ரீதியிலான வலைப்பந்து அழைப்பு சுற்றுத் தொடரில் இன்று…

அதிலும் குறிப்பாக, இலங்கை அணிக்காக தர்ஜினி விளையாடிய ஒவ்வொரு போட்டியையும் நீங்கள் எடுத்துப் பார்த்தால், இலங்கை அணியின் வியூகம் என்ன என்பதை உங்களுக்கு நன்றாக தெரிந்துகொள்ள முடியும். அதில் கோல் வலையத்தில் (goal circle) அவருக்கு பந்தை பரிமாற்றுவதான் சக வீராங்கனைகளின் செயற்பாடாக இருக்கும்.

அதுமாத்திரமின்றி தர்ஜினி, பந்தை எடுத்துக்கொண்டு நகர்வதற்கான காலம், பந்தை சரியான முறையில் பரிமாற்றம் செய்வது மற்றும் கோல் போடுதல் உள்ளிட்ட விடயங்களில் அதிக முன்னேற்றம் கண்டுள்ளார். அத்துடன், பந்தை சரியான முறையில் போடுகின்ற முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான அவருக்கு எந்தவொரு கஷ்டமும் இல்லாமல் கோல் வளையத்துக்குள் சென்று கோலொன்றைப் பெறுவதற்கான போதுமான உயரத்தையும் அவர் கொண்டுள்ளார். இதனால் அணியின் தற்காப்பு வீராங்கனைகளுக்கு பெரிதாக செய்வதற்கு எதுவும் இருக்காது.

அண்மையில் நிறைவுக்குவந்த சர்வதேச அழைப்பு வலைப்பந்தாட்ட போட்டித் தொடரில் தர்ஜினியின் கோல்போடும் புள்ளிவிபரங்களை (2 போட்டிகளில் மாத்திரம்) எடுத்துக்கொண்டால் அவர் செலுத்திய 133 சொட்களில் 128ஐ கோல்களாக மாற்றியுள்ளார். எனவே அது 96 சதவீத பெறுதியை காட்டி நிற்கின்றது. ஆனால் அவருடைய வலைப்பந்தாட்ட வாழ்க்கை குறித்து நன்கு அறிந்தவர்களுக்கு இதுவொன்றும் ஆச்சிரியப்படுவதற்கான விடயமாக இருக்காது.

இதேநேரம், குறித்த போட்டித் தொடரின் முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணி கோல் போடுவதற்காக 71 முயற்சிகளை எடுத்திருந்ததுடன், இதில் 61 கோல்கள் தர்ஜினியாலும், ஏனைய 10 கோல்களும் கோல் தடுப்பு வீராங்கனையாக விளையாடிய ஹசிதா மெண்டிஸினாலும் போடப்பட்டன. அதேபோல, இறுதி ஆட்டத்தில் கோல் போடுவதற்காக 75 முயற்சிகளை இலங்கை எடுத்திருந்ததுடன், இதில் 72 கோல்கள் தர்ஜினியால் பெற்றுக்கொள்ளப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

தேசிய விளையாட்டு விழா பளுதூக்கலில் வடக்கு மாணவி ஆஷிகா தேசிய சாதனை

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும்…

அதுமாத்திரமின்றி, நீங்கள் இலங்கை மற்றும் சிங்கப்பூர் அணிகளுக்கிடையிலான போட்டியை நன்றாக அவதானித்துப் பார்த்தால் கோல் வலையத்திற்குள் இலங்கை வீராங்கனைகளைவிட சிங்கப்பூர் வீராங்ககைளே அதிகம் இருந்ததை காணமுடிந்தது. இதனால், இலங்கை அணியின் கள வியூகங்களை சிங்கப்பூர் அணியின் மத்திய வரிசை வீராங்கனைகள் நன்கு தெரிந்துகொண்டு விளையாடியுள்ளனர். எனவே மேற்குறிப்பிட்ட புள்ளிவிபரங்கள் போட்டியை பார்த்தவருக்கு ஆச்சரியப்படும் வகையில் இருந்திருக்காது என்பது உண்மை.

அதிலும் குறிப்பாக, போட்டியின்போது எதிரணியின் கோல் வலையத்திற்குள் செல்கின்ற எந்தவொரு இலங்கை வீராங்கனையும் தர்ஜினியின் கைகளுக்கு பந்தை செலுத்துவதற்கு தான் முயற்சி செய்வார்கள். இதனால் கோல் தாக்கு (Goal Attack) வீராங்கனைகள் கோல் போடுகின்ற இலகுவான வாய்ப்புக்கள் பலவற்றை தவறிவிட்டிருந்ததையும் நன்கு அவதானிக்க முடிந்தது.

மறுபுறத்தில் இந்த புள்ளிவிபரங்கள் தர்ஜினியுடன் கோல் வலையத்தினுள் விளையாடுகின்ற ஹசிதா மெண்டிஸின் திறமைகளை வெளிக்காட்டுவதில்லை. அதிலும் தர்ஜினி இல்லாத நேரங்களில் அவரின் சொட்கள் சரியான முறையில் இருந்தாலும், அவரால் சிறப்பாக கோல்களைப் பெற்றுகொள்ள முடியாமல் போனது. அத்துடன், அவர் மைதானம் முழுவதும் பந்தை நகர்ந்துசென்று கோல் வலையத்தினுள் கொண்டுவருவதையும் இங்கு அவதானிக்கலாம்.

இதன்படி, தனக்கு கிடைக்கின்ற எந்தவொரு எதிர்தரப்பு வீராங்கனையையும் இலகுவில் வெற்றிகொள்கின்ற திறமை தர்ஜினி சிவலிங்கத்திடம் காணப்படுகின்றதை இந்த புள்ளிவிபரங்கள் வாயிலாக நன்கு அறிந்துகொள்ளலாம். எனவே, எதிர்வரும் காலங்களில் இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு புதிய வீராங்கனைகளை இணைத்துக்கொள்ளும் போது நிச்சயம் வீராங்கனைகளின் உயரத்துக்குத் தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இதேவேளை, மெலெனி விஜேசிங்க மற்றும் எழிலேந்தினி சேதுகாவலர் ஆகிய வீராங்கனைகள் இப்போட்டித் தொடரின் ஏனைய இரு கோல்போடும் வீராங்கனைகளாக இருந்தனர்.

தர்ஜினியைப் போல எழிலேந்தினியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவராவார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் யாழ். துரையப்பா மைதானத்தில் உள்ளூர் சங்கங்களுக்கிடையிலான வலைப்பந்தாட்ட போட்டித் தொடர் நடைபெற்றது. இதில் எழிலேந்தினியும் யாழ் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருந்தார். அதில் வெளிப்படுத்திய திறமைகளை அடிப்படையாக வைத்தே அவருக்கு தேசிய வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சி குழாத்துடன் இணைவதற்கான வாய்ப்பு கிட்டியது.

இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு தேவையாக இருந்த 6அடி உயரமும் 5 அங்குலத்தையும் கொண்ட வீராங்கனையான 23 வயதுடைய எழிலேந்தினி, கடந்த மாதம் நடைபெற்ற சர்வதேச அழைப்பு வலைப்பந்தாட்டப் போட்டியில் முதற்தடவையாக தேசிய அணிக்காக களமிறங்கினார்.

தர்ஜினியின் உயரத்தை ஒத்த வீராங்கனையான எழிலேந்தினி, இப்போட்டித் தொடரில் தர்ஜினியின் அளவுக்கு இல்லாவிட்டாலும், எதிர்பார்த்தளவு திறமையான விளையாட்டை வெளிப்படுத்தியிருந்தார். எனவே, இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் அவரையும் தேசிய அணியுடன் இணைத்துக்கொள்வதற்கு அவதானம் செலுத்தியுள்ளதால், எதிர்வரும் காலங்களில் தர்ஜினியைப் போன்று விளையாடுவதற்கான நுணுக்கங்களை விரைவில் அவர் கற்றுக்கொள்ள வேண்டும்.

இதேநேரம், தனது உயரத்தினால் வெளிச்சத்திற்கு வந்து இலங்கை அபிவிருத்தி அணிக்காக விளையாடிய மற்றுமொரு வீராங்கனை தான் மெலெனி விஜேசிங்க. 16 வயதுடைய இவர், 6 அடி உயரமும் 3 அங்குலத்தையும் கொண்டவர். எனவே, எதிர்வரும் இரண்டு வருடங்களில் அவர் இன்னும் உயரத்தை தொடுவார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

இதில் தேசிய அணியில் விளையாடி வருகின்ற வீராங்கனைகள் தர்ஜினிக்கு பந்தை பரிமாற்றம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தாலும், மெலெனியின் அணியில் விளையாடிய வீராங்கனைகள் அவ்வாறு பந்தை பரிமாற்றம் செய்வதில் தடுமாற்றத்தை சந்தித்து இருந்தனர். அங்கு அவர்கள் பந்தை சரியான முறையில் பரிமாற்றம் செய்வதற்கோ அல்லது எதிரணி வீராங்கனைகளிடம் இருந்து பந்தை பெற்றுக்கொள்வதற்கோ கிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டதை அவதானிக்க முடிந்தது.

எனவே, மெலெனிக்கு சரியான முறையில் பந்தை பரிமாற்றம் செய்யத் தவறும் நேரங்களில் எல்லாம் ஏனைய வீராங்கனைகள் தடுமாற்றத்துடன் விளையாடுவதையும் இத் தொடர் முழுவதும் காணமுடிந்தது.

இவ்வாறான குறைபாடுகளையெல்லாம் உன்னிப்பாக அவதானித்து இந்த மூன்று கோல்போடும் வீராங்கனைகளுக்கும் பந்தை உரிய முறையில் வழங்கினால் இலங்கை தரப்புக்கு இன்னும் இன்னும் கோல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கூடைப்பந்து தொடரின் சம்பியனாக யாழ். வேம்படி மகளிர்

15 வயதின் கீழ்ப்பட்ட பிரிவு “C” மகளிர் பாடசாலைகளுக்கு இடையிலான இந்தப் பருவகாலத்திற்கான நாடளாவிய…

இதன்படி, கடந்த காலங்களை எடுத்துக்கொண்டால் தர்ஜினி சிவலிங்கத்துக்கு பந்தை உரிய முறையில் பரிமாற்றம் செய்துதான் இலங்கை அணி பல வெற்றிகளைப் பதிவுசெய்திருந்தது. எனவே, நாம் அதே நுட்பத்தை இலங்கை கனிஷ்ட அணியிலும் பின்பற்ற வேண்டுமா? ஹசிதா மெண்டிஸ், துலங்கி வன்னிதிலக்க போன்ற வீராங்கனைகளை சரியான முறையில் வழிநடத்தி இன்னும் இன்னும் வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள இலங்கை வலைப்பந்தாட்ட அதிகாரிகள் அவதானம் செலுத்துவார்களா? அல்லது வீராங்கனைகளின் உயரத்துக்கு மாத்திரம் முன்னுரிமை கொடுப்பதா? என்பது உள்ளிட்ட விடயங்களுக்கு சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டிகளின் போது நல்ல பதில் கிடைக்கும்.

ஆசியாவில் சிங்கப்பூர் அணி மிகவும் மதிநுட்பத்துடன் விளையாடுகின்ற வலைப்பந்தாட்ட அணியாகும். இதனால் அண்மைக்காலமாக இலங்கை அணிக்கெதிராக வெற்றிகளைப் பதிவுசெய்தும் வருகின்றது. எனவே, சிங்கப்பூரில் இடம்பெறவுள்ள ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் தர்ஜினி சிவலிங்கத்தின் உயரத்துக்கு எதிராக அவர்கள் இப்போது முதல் தயாராகுவார்கள் என நம்பப்படுகின்றது.

40 வயதான தர்ஜினி சிவலிங்கம், தனது விளையாட்டு வாழ்க்கையின் கடைசி காலத்தை தற்போது எட்டியுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் பெரும்பாலும் அவரது கடைசிப் போட்டித் தொடராகவும் இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

எனவே, அவருடைய ஓய்வுக்குப் பிறகு இலங்கை வலைப்பந்தாட்ட அணி எவ்வாறு மாற்றங்கள் செய்ய வேண்டும்? அவரைப் போல உயரமான வீராங்கனையொருவரை அணிக்குள் கொண்டுவருவதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம்.

ஆனால், இறுதியாக ஒன்றை மட்டும் இந்த கட்டுரையில் குறிப்பிட வேண்டும். தர்ஜினி சிவலிங்கத்தைப் போன்றொரு அதிசிறந்த வீராங்கனையை மீண்டும் தேடிப் பிடிப்பது அவ்வளவு இலகுவான விடயமல்ல என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

 மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க