மட்டு நகரில், சுவாரஷ்யங்களுக்கு பஞ்சமின்றி நடைபெற்று வரும் ஹேர்பேர்ட் கிண்ண கூடைப்பந்து தொடரின் நேற்றைய (29) இரண்டாம் நாளில் குழு மட்டத்திலான அனைத்து போட்டிகளும் நிறைவுற்றுள்ளதுடன் நேற்றைய (29) நாளின் குழு மட்டப்போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியிருந்த பொலிஸ் அணி, இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை இராணுவப்படை ஆகிய அணிகள் வெற்றிகளை தமதாக்கியுள்ளன.

பொலிஸ் விளையாட்டுக்கழகம் எதிர் மட்டக்களப்பு (நீல அணியினர்)

குழு B அணிகளான இவையிரண்டிற்கும் குழு மட்டத்தில் இறுதிப் போட்டியாக நடைபெற்றிருந்த இந்தப் போட்டியில் புள்ளிகள் பெறும் வாயிலை பொலிஸ் அணி திறந்து வைத்திருந்தது.

எனினும் தொடர்ந்து சாமர்த்தியமான முறையில் செயற்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட அணியினர், 05:04 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றனர். இருப்பினும் மறுபடியும் மெதுவான முறையில் புள்ளிகளை சேர்க்கத் தொடங்கியிருந்த பொலிஸ் அணி வீரர்கள் எதிரணியின் புள்ளிகளை சமப்படுத்திய நிலையில் முதல் கால்பகுதி 12:12 என்ற புள்ளிகள் அடிப்படையில் நிறைவடைந்தது.

போட்டியின் இரண்டாம் கால்பகுதியில் அசாதாரண ஆட்டத்தினை வெளிக்காட்டியிருந்த மட்டக்களப்பு அணியினர் இக்கால்பகுதியில் மொத்தமாக 23 புள்ளிகளை குவித்திருந்தனர். இதனால், போட்டியின் முதல் அரைப்பகுதி நிறைவடையும் போது மட்டக்களப்பு நீல அணி 35:31 என பொலிஸ் அணியைவிட 4  புள்ளிகளால் முந்தியிருந்தது.

மூன்றாம் கால்பகுதியில் புள்ளிகளில் பின்தங்கியிருந்த பொலிஸ் அணி, அனுபவம் வாய்ந்த வீரர்களை சரியான தருணத்தில் பரிமாற்றம் செய்து புள்ளிகளை சரியான முறைமையில் சேர்க்கத் தொடங்கியிருந்தது. இந்த பகுதியிலும் இரு அணிகளும் சமபுள்ளிகளுடன் நீண்ட நேரத்திற்கு தொடர்ந்திருந்தனர். எனினும் மூன்றாம் கால்பகுதி நிறைவடையும் தருணத்தில், 45:44 என்ற புள்ளிகள் கணக்கில் பொலிஸ் அணி முன்னிலை அடைந்தது.

நான்காம் கால்பகுதி விறுவிறுப்பான முறையில் அமையும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தும், தொடர்ந்தும் பிரகாசித்த பொலிஸ் அணி வீரர்களின் அபார ஆட்டத்தினால் புள்ளிகள் அதி விரைவாக சேர்க்கப்பட்டிருந்தது. இதனால் இக்கால்பகுதியில் 23 புள்ளிகளைப் பெற்ற பொலிஸ் அணி 69:58 என்ற புள்ளிகள் அடிப்படையில் போட்டியின் வெற்றியாளர்களாக மாறியதுடன் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகும் அணிகளில் ஒன்றாகவும் ஆகியிருந்தது.


இலங்கை விமானப்படை எதிர் முத்துவல் விளையாட்டுக் கழகம்

குழு B இற்கான இறுதி ஆட்டமாக அமைந்திருந்த இப்போட்டியில், முதற் கால்பகுதியை தமது அதி விரைவான ஆட்டத்தின் காரணமாக விமானப்படை அணி தமதாக்கியிருந்தது. போட்டியின் முதற் கால்பகுதி விமானப்படை அணியின் ஆதிக்கத்துடன் 25:12 என நிறைவுற்றிருந்தது.

போட்டியின் அரைப்பகுதிக்கு முன்னர் உள்ள நேரத்தில் புள்ளிகள் சேர்க்க பல முயற்சிகளை முத்துவல் விளையாட்டுக் கழகம் எடுத்திருந்தது. அவற்றில் சில முயற்சிகள் மட்டுமே கூடியிருந்தது. இந்த கால்பகுதியில் விமானப்படை முன்னர் காட்டியிருந்த வேகத்தினை தொடர்ந்திருக்கவில்லை. தொடர்ந்து  கிடைத்த வாய்ப்புக்களை சிறப்பாக பயன்படுத்திய காரணத்தினால், முதலாம் அரைப்பகுதி 40:23 என்ற புள்ளிகள் கணக்கில் விமானப்படைக்கு சார்பாக நிறைவடைந்திருந்தது.

போட்டியின் மூன்றாம் கால்பகுதியில் இரு அணிகளும் தலா 15 புள்ளிகள் வீதம் பெற்றிருந்தன. எனினும், மூன்றாம் கால்பகுதியிலும் விமானப்படை அணி 50:38 என தமது முன்னிலையைத் தொடர்ந்தது.

போட்டியின் இறுதி கால்பகுதியில் 4 புள்ளிகளை மாத்திரமே முத்துவல் கழகத்தினால் பெற முடிந்தது. இதனால், இறுதி கால்பகுதியிலும் அபாரம் காட்டியிருந்த விமானப்படை அணியினர் 71:42 என்ற புள்ளிகள் கணக்கில் போட்டியை கைப்பற்றிக்கொண்டனர்.


 இலங்கை இராணுவப்படை எதிர் மட்டக்களப்பு (சிவப்பு அணியினர்)

குழு A இற்கான இந்தப்போட்டியில், சவால் மிக்க இராணுவப்படை அணியினர் முதல் நிமிடங்களில் புள்ளிகள் சேர்க்க தடுமாறியிருந்தனர். எனினும், மட்டக்களப்பு அணியினர் போட்டியை அதிரடியாக ஆரம்பித்து, 6-0 என்னும் முன்னிலையோடு காணப்பட்டிருந்தனர்.

மந்தமான முறையில் புள்ளிகள் சேர்த்திருந்த இராணுவப்படை அணியினர் ப்ரீ த்ரோக்கள் (Free Throws) மூலம் போட்டியின் முதற் கால்பகுதியில் மட்டக்களப்பு அணியினரை நெருங்கியிருந்தனர். எனினும், மட்டக்களப்பு சிவப்பு அணியே 10:9 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் கால்பகுதியில் முன்னிலை அடைந்திருந்தது.

எனினும் இரண்டாம் கால்பகுதியில் அதி சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்திய இராணுவப்படை அணியானது 23 புள்ளிகளை சேர்த்திருந்ததன் காரணமாக அவ்வணியின் முன்னிலையுடன் 32:22 என்கிற அடிப்படையில் முதலாம் அரைப்பகுதி நிறைவடைந்தது.

மூன்றாம் கால்பகுதியில், மட்டக்களப்பு அணியினரின் அபாரம் வெளிக்காட்டப்பட்டிருந்தது. இக்கால்பகுதியில் அவ்வணி 25 புள்ளிகளை பெற்றுக்கொண்டதுன் இராணுவப்படை அணியினரை 47:51 என நெருங்கியும் இருந்தது.

இறுதி கால்பகுதியில் மிதமிஞ்சிய ஆட்டத்தினை வெளிக்காட்டிய இராணுவப்படை அணியினர் 28 புள்ளிகளைக் குவித்து 79:57 என்ற புள்ளிகள் அடிப்படையில் போட்டியின் வெற்றியாளர்களாக மாறினர்.

நடைபெற்று முடிந்திருக்கும் குழு நிலைப் போட்டிகளின் அடிப்படையில் A குழுவில் இருந்து இலங்கை இராணுவப்படை மற்றும் யாழ்ப்பாண கூடைப்பந்தாட்ட கழகமும், B குழுவில் இருந்து இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை பொலிஸ் விளையாட்டுக் கழகமும் ஹேர்பேர்ட் கிண்ண அரையிறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளன.

இந்த தொடரில், பெரிதும் சாதிக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்த மட்டக்களப்பு அணிகள் இம்முறை போட்டிகளில் வெற்றிபெறாததற்கான காரணத்தினை இரு அணிகளினதும் பயிற்றுவிப்பாளர்களில், ஒருவரான E.R. ஹேமச்சந்திரவிடம் ThePapare.com சார்பில் கேட்கப்பட்டிருந்தது.

அதற்கு பதில் தந்த அவர், ”நடைபெற்று முடிந்த போட்டிகளில் பங்குபற்றியது அனுபவம் குறைந்த இளம் வீரர்களைக் கொண்ட அணியென்றும், எதிர்வரும் தொடர்களில் இத்தொடரின் மூலம் கிடைத்த அனுபவங்களை சரிவர உபயோகப்படுத்தி சாதிக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.” அத்தோடு, இத்தொடரில் பங்கேற்கும் விமானப்படை, பொலிஸ் ஆகிய அணிகளில் மட்டக்களப்பு மாவட்ட வீரர்கள் சிறப்பாக செயற்படுவதனையும் அவர் பாராட்டியிருந்தார்.