கோஹ்லியுடன் பாபர் அசாமை ஒப்பிட வேண்டாம் – வசீம் அக்ரம்

Asia Cup 2022

643

பாபர் அசாமை விராட் கோஹ்லியுடன் ஒப்பிடுவதற்கு பாபர் அசாமுக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வசீம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், விராட் கோஹ்லி எல்லா காலத்திலும் சிறந்த வீரர்களில் ஒருவர். எனவே, பாபர் அசாமை அவருடன் ஒப்பிடுவது மிகவும் விரைவானது என்று அவர் கூறியுள்ளார்.

அதுமாத்திரமின்றி, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் மட்டும் அவர் போர்முக்கு திரும்பி பெரிய அளவில் ஓட்டங்களைக் குவித்து விடக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

15ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்  எதிவரும் 27ஆம் திகதி முதல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளதுடன், இதில் பங்கேற்கவுள்ள அனைத்து அணிகளும் டுபாயை வந்தடைந்துள்ளன.

இந்த நிலையில், அண்மைக்காலமாக தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்ற இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லியும், இம்முறை ஆசியக் கிண்ணத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

விராட் கோலி சர்வேதச கிரிக்கெட் அரங்கில் சதமடித்து 2 ஆண்டுகள் கடந்துள்ளது. அவர் சமீபத்தில் விளையாடி தொடர்களில் கூட பெரியதாக ஓட்டங்களை எடுக்கவில்லை. இதனால், அவருக்கு ஓய்வு வழங்கிய இந்திய அணி நிர்வாகம், அவரைத் தற்போது ஆசியக் கிண்ண அணியில் இணைத்துள்ளது.

இந்தநிலையில், விராட் கோஹ்லி குறித்து பேசியுள்ள பாகிஸ்தானின் முன்னாள் தலைவர் வசீம் அக்ரம், விராட் கோஹ்லி எல்லா காலத்திலும் சிறந்த வீரர்களில் ஒருவராக இருப்பதாகவும், பாபர் அசாமை அவருடன் ஒப்பிடுவது இன்னும் சற்று முன்கூட்டியே இருப்பதாகவும் தான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

இம்முறை ஆசியக் கிண்ணத்துக்கான அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளரான Star Sports தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதில் விராட் கோஹ்லியுடன் பாபர் அசாம் ஒப்பிடப்படுவது குறித்து வசீம் அக்ரமிடம் வினவிய போது அவர் பதிலளிக்கையில், இது இன்னும் சற்று முன்னதாகவே உள்ளது. ஒப்பீடுகள் இயல்பானவை. நாங்கள் விளையாடியபோது மக்கள் இன்சமாம், ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கரை ஒப்பிட்டுப் பேசுவார்கள். அதற்கு முன் சுனில் கவாஸ்கர் ஜாவேத் மியான்தத், குண்டப்பா விஸ்வநாத் மற்றும் சஹீர் அப்பாஸ் போன்றவர்களை ஒப்பிட்டு பேசினார்கள்.

பாபர் மிகவும் நேர்த்தியான கிரிக்கெட் வீரராக இருக்கிறார். ஏனென்றால் அவர் சரியான நுட்பத்தைப் பெற்றுள்ளார். அந்த வகையில் தற்சமயத்தில் நல்ல டெக்னிக் கொண்டுள்ள பாபர் அசாம் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் அவர் சிறப்பாக செயல்பட பசியுடன் உள்ளார். இளம் தலைவராக இருக்கும் அவர் விரைவாக கற்றுக் கொண்டு வருகிறார். இருப்பினும் இந்த ஆரம்ப கட்டத்திலேயே அவரை விராட் கோஹ்லியுடன் ஒப்பிடுவது சரியானதாக இருக்காது.

விராட் கோஹ்லி இருக்கும் இடத்தை நோக்கி பாபர் அசாம் பயணித்து வருகிறார். ஆனால் அதற்காக இப்போதே அவரை ஒப்பிடுவது சரியானதல்ல. இருப்பினும் நவீன கிரிக்கெட்டில் சிறந்த வீரராக வருவதற்கு அவர் பயணித்து வருகிறார் என்று கூறினார்.

அதேபோல, form இன்றி தவித்தாலும் விராட் கோஹ்லி உலகத்தரம் வாய்ந்தவர் என்பதால் அவரை விமர்சிக்க தேவையில்லை என்று ஆதரவு கொடுக்கும் வசீம் அக்ரம் இம்முறை ஆசியக் கிண்ணத்தில் போர்முக்கு திரும்புவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதே சமயம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் போர்முக்கு திரும்பி விடக்கூடாது என்று இந்த நேர்காணலில் வசீம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

முதலில் விராட் கோஹ்லி மீது இந்திய ரசிகர்கள் வைக்கும் விமர்சனம் தேவையற்றது என்று நான் சொல்ல விரும்புகிறேன். இந்த சகாப்தத்தில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த வரலாற்றில் அவர் மிகச்சிறந்த வீரர். நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் அவர் தற்போதைய இந்திய அணியில் மிகச்சிறந்த களத்தடுப்பு வீரராக உள்ளார்.

க்ளாஸ் எப்போதும் உலகத்தரம் வாய்ந்த வீரரிடம் இருக்கும் என்பதற்கு விராட் கோஹ்லி எடுத்துக்காட்டாவார். அவர் போர்முக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது. இருப்பினும் பாகிஸ்தானுக்கு எதிராக வந்துவிடக்கூடாது என்று நம்புகிறேன்’ எனக்கூறினார்.

இதேவேளை, இம்முறை ஆசியக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணியின் அதிரடி வேகப்பந்துவீச்சாளர் சஹீன் அப்ரிடி இல்லாதது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டியிருந்தார்.

இதனிடையே, சஹீன் அப்ரிடியை உலகின் முதல் மூன்று பந்துவீச்சாளர்களில் ஒருவராக இணைத்துப் பேசிய வசீம் அக்ரம், அவர் அணியில் இல்லாதது பாகிஸ்தானுக்கு நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்றார்.

புதிய பந்து காரணமாக அவர் அணியில் மிக முக்கியமானவர். இந்த வடிவத்தில் நீங்கள் ஆரம்ப விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் எதிரணியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அதைத் தான் முதலில் செய்ய வேண்டும். அவர் அனைத்து வடிவங்களிலும் ஸ்டம்புகளை நோக்கி பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்துவார்.

அவர் ஓய்வு எடுக்காதபோது விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அவருக்கு வயது 22. அவருக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் குணமடைய சிறிது காலம் எடுக்கும். அது மீண்டும் வரக்கூடும் என்று நீங்கள் எப்போதும் பயப்படுகிறீர்கள். அவர் உலகின் முதல் மூன்று பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருப்பதால் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு என்றார்.

இதேவேளை, தனது கருத்துப்படி இம்முறை ஆசியக் கிண்ணம் மிகச் சிறந்த தொடராக இருக்கும். முன்பு இந்தியா பாகிஸ்தான், இலங்கை என்று இருந்தது ஆனால் தற்போது ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் உட்பட அனைத்து அணிகளும் ஆபத்தானவை’ என்றும் வசீம் அக்ரம் கூறியுள்ளார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<