சிட்டி கால்பந்து லீக் ஜனாதிபதிக் கிண்ண இறுதிப்போட்டியில் கொழும்பு கால்பந்து கழகம் மற்றும் ஜாவா லேன் விளையாட்டுக் கழக அணிகள் மோதிக் கொண்டதுடன், இப்போட்டியில் கொழும்பு விளையாட்டுக் கழகம் வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

அரையிறுதிச் சுற்றில் கொழும்பு கால்பந்து கழகமானது ரினொன் கழகத்தையும், ஜாவா லேன் அணியானது மொரகஸ்முல்ல விளையாட்டுக் கழகத்தையும் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தன.

போட்டி ஆரம்பித்து 10 நிமிடங்களிற்குள் ஜாவா லேன் அணி தனது முதலாவது கோலினை நவீன் ஜூட் ஊடாக பெற்றுக் கொண்டது. அசத்தலான ஓட்டத்துடன் முன்னேறிய மொஹமட் அப்துல்லா பந்தினை லாவகமாக நவீன் ஜூடிற்கு வழங்க, அவர் தலையினால் மோதி கோலினை பெற்று கொண்டார்.

முதல் பாதியின் இறுதியில் இரண்டு அணிகளுக்கும் கோல் வாய்ப்புக்கள் கிடைத்த போதிலும் அவை தவறவிடப்பட்டன. முக்கியமாக ஸர்வான் ஜோஹார், எதிரணியின் தடுப்பு வீரர்களுக்கும் கோல் காப்பாளருக்கும் பலத்த அழுத்தத்தை வழங்கியிருந்தார்.

முதல் பாதி : கொழும்பு கால்பந்து கழகம் ௦௦ – ஜாவா லேன் 01

இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் கொழும்பு கால்பந்து கழகத்தின் ஸர்வான் ஜோஹார் கோல் ஒன்றினை பெற்று கோல் வித்தியாசத்தை சமனாக்கினார். எதிரணியின் கோலினை போன்றே நிறான் கனிஷ்கவிடம் இருந்து டில்ஷான் கௌஷல்ய பந்தினை பெற்று ஸர்வானிற்கு கடத்த, அவர் அவ்வாய்ப்பினை கோலாக மாற்றினார்.

இரண்டாம் பாதியில் இரண்டு அணிகளும் சிறப்பான விளையாட்டுப்பாணியை வெளிக்காட்டாத போதிலும், போட்டி விறுவிறுப்பாக இடம்பெற்றது. போட்டியின் இறுதி நிமிடங்களில் ஜாவா லேன் அணிக்கு சில வாய்ப்புக்கள் கிடைத்த போதிலும், அவ்வணியின் வீரர்கள் அவற்றை தவறிவிட்டனர்,

முழுநேரம் : கொழும்பு கால்பந்து கழகம் 01 – ஜாவா லேன் 01

போட்டி சமநிலையில் நிறைவுற்றதன் காரணமாக வெற்றியாளரை தீர்மானிக்கும் நோக்கில் பெனால்டி உதை நடத்தப்பட்டது. கொழும்பு கால்பந்து கழகம் சார்பில் மாலக பெரேரா, லக்மால் பெரேரா, மொஹமட் அலீம் மற்றும் இறுதியாக ஸர்வான் ஜோஹார் ஆகியோர் உதைகளை வெற்றிகரமாக உதைத்தனர்.

இதேவேளை ஜாவா லேன் சார்பாக ஒலயாமி, மாமோஸ் யாபோ மற்றும் மொஹமட் ஷஸ்னி ஆகிய மூவரே வெற்றிகரமாக உதைக்க கொழும்பு கால்பந்து கழகம் வெற்றியை பெற்றுக் கொண்டது.

பெனால்டி உதைகள் : கொழும்பு கால்பந்து கழகம் 1 (4) – ஜாவா லேன் 1(3)

ThePapare.com ஆட்ட நாயகன்: ஸர்வான் ஜோஹார்

இவ்வெற்றி தொடர்பாக மொஹமட் ரூமி கருத்து தெரிவிக்கையில்,

“இது ஒரு சிறந்த போட்டியாக அமைந்திருந்தது. போட்டியின் ஆரம்பத்தில் எதிரணி முன்னிலை பெற்ற போதிலும், நாம் வெற்றியடைவோம் எனும் நம்பிக்கை இருந்தது. எம்மால் தவறவிடப்பட்ட முயற்சிகளை வெற்றிகரமாக கோல்களாக மாற்றியிருந்தால் இப்போட்டியை இலகுவாக வெற்றி பெற்றிருக்கலாம்.

ஸர்வான் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டி வருகின்றார். அவரது விளையாட்டு நுட்பங்கள் மற்றும் உடற்தகுதி அபாரமானதாக காணப்படுகின்றது. இதனால் இலங்கை தேசிய அணியும் நன்மையடையும் என எதிர்பார்க்கின்றேன். எதிரணியும் சம்பியன்ஸ் லீக் தொடரின் பின்னர் முன்னேற்றம் அடைந்துள்ளது”, என்றார்.

கோல் பெற்றுக் கொண்டோர்

ஜாவா லேன் விளையாட்டுக் கழகம்: நவீன் ஜூட்: 9′

கொழும்பு கால்பந்து கழகம்: ஸர்வான் ஜோஹார் 53′