இங்கிலாந்தை வீழ்த்த முடியும் என்ற தன்னம்பிக்கையோடு பந்து வீசினோம் – மாலிங்க

508

இங்கிலாந்ததை வீழ்த்த முடியும் என்ற தன்னம்பிக்கையோடு பந்து வீசியதால் வெற்றிபெற முடிந்ததாகத் தெரிவித்த லசித் மாலிங்க, எஞ்சியுள்ள போட்டிகளிலும் இதே உத்வேகத்துடன் விளையாடினால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, அஞ்செலோ மெதிவ்ஸின் அரைச் சதத்தின் உதவியுடன் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 232 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதல் தடுமாறியது. யோர்க்கர் மன்னன் லசித் மாலிங்க இங்கிலாந்து தொடக்க வீரர்கள் ஜொன்னி பேயார்ஸ்டோ (0), ஜேம்ஸ் வின்ஸ் (14) இருவரது விக்கெட்டையும் கைப்பற்றி இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். முந்தைய போட்டியில் 17 சிக்ஸ்ர்கள் அடித்து உலக சாதனை படைத்த இயென் மோர்கனும் (21) அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. ஜோ ரூட் (57), ஜோஸ் பட்லர் (10) ஆகிய அபாயகரமான துடுப்பாட்ட வீரர்களையும் மாலிங்க வீழ்த்த ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

அதன்பிறகு வந்த பின்வரிசை வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 47 ஓவர்களில் 212 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. இதன் மூலம் இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக் கிண்ண கிரிக்கெட்டில், பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான இங்கிலாந்து சிறிய இலக்கை கூட எட்ட முடியாமல் இலங்கையிடம் மீண்டும் பணிந்தது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி விக்கெட்டுகளை கைப்பற்றி பந்துவீச்சில் மிரட்டிய லசித் மாலிங்க ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்த நிலையில் போட்டியின் பிறகு லசித் மாhலிங்க அளித்த பேட்டியில்,  

”இந்த ஆடுகளத்தில் மெதுவான மற்றும் பௌன்சர் பந்துகளை நேர்த்தியாக வீசினால் அதிக பலன் கிடைக்கும் என்பது தான் எமது திட்டமாக இருந்தது. அத்துடன் இவ்வாறான போட்டிகளில் ஆதிக்கம் செலுத்துவதற்கு நம்மீது நம்பிக்கை வைப்பதும் மிகவும் முக்கியமான விடயமாக கருதப்பட்டது.

எனவே, எமது பந்து வீச்சாளர்கள் வைத்த தன்னம்பிக்கையானது இலங்கை அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததாக” அவர் தெரிவித்தார்.

இலங்கை அணிக்கு இது கட்டாயம் வெல்ல வேண்டிய போட்டியாகும். குழு நிலை போட்டிகளில் வெற்றி பெறுவது முக்கியம், ஏனெனில் அதுதான் எமக்கு உத்வேகத்தைக் கொடுக்கும்.

எனவே, இலங்கை அணி இந்தப் போட்டியிலிருந்து நிறைய விடயங்களைக் கற்றுக் கொண்டதுடன், இந்த வெற்றியானது அடுத்த கட்டத்தை நோக்கி முன்னோக்கி செல்வதற்கு நம்பிக்கை அளிக்கிறது என அவர் குறிப்பிட்டார்.

இதேநேரம், இங்கிலாந்து அணிக்காக அரைச்சதம் அடித்து போட்டியின் கடைசி வரை ஆட்டமிழக்காது அந்த அணிக்கு நம்பிக்கை கொடுத்திருந்த பென் ஸ்டோக்ஸின் அபார ஆட்டம் குறித்து மாலிங்க கருத்து தெரிவிக்கையில்,

>>மாலிங்க ஒரு வரலாற்று சாதனையாளர் – திமுத் கருணாரத்ன

”பென் ஸ்டோக்ஸ் ஒரு தரமான வீரர். அவரை வீழ்த்துவதற்கு நாங்கள் பல உக்திகளைக் கையாண்டோம். எனினும், அந்த முயற்சி கடைசி வரை சாத்தியமளிக்கவில்லை. பென் ஸ்டோக்ஸ் எவ்வளவு சிறப்பான வீரர் என்பது எங்களுக்குத் தெரியும். அவருடைய ஆட்டத்தை டி-20 கிரிக்கெட்டிலும், ஐ.பி.எல். போட்டிகளிலும் பார்த்துள்ளோம்.

அதேபோல, இந்தப் போட்டியில் அவர் அபாரமாக விளையாடினாலும், எங்கள் திட்டங்களில் தொடர்ந்து அவரை வைத்திருந்தோம். இதனால் அவர் ஒரு ஓட்டத்தைப் பெறுவதை தவிர்த்து விளையாடுவதை உறுதிசெய்து அழுத்தம் கொடுத்திருந்தார்.

இது இவ்வாறிருக்க, ஹெடிங்லியில் தனக்கு கிடைத்த ரசிகர் ஆதரவு குறித்து பேசிய மாலிங்க, இங்கு ஏராளமான இலங்கையைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அதேபோல நிறைய இந்திய மக்களும் உள்ளனர். எனவே ஐ.பி.எல் போட்டிகளில் நான் விளையாடி வருவதால், அவர்கள் என்னை விரும்புகிறார்கள். இதனால் இந்த மைதானத்தில் இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிராக வெல்லும் என்று எதிர்பார்ப்பும் அவர்களுக்கு இருந்தது என அவர் தெரிவித்தார்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<