சம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்புள்ள இரு அணிகளான ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் மற்றும் கொழும்பு கால்பந்து கழக அணிகள் மோதிக்கொண்ட தீர்க்கமான போட்டி அடைமழையின் காரணமாக முதல் பாதியுடன் நிறுத்தப்பட்டது. சூப்பர் 8 சுற்றின் 6 ஆம் வாரத்திற்கான இப்போட்டி களனி கால்பந்து மைதானத்தில் இடம்பெற்றதுடன் முதல் பாதியின் நிறைவில் ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 1-0 என முன்னிலையில் காணப்பட்டது. போட்டியின் தொடர்ச்சி பிறிதொரு தினத்தில் இடம்பெறவுள்ளது.

கடந்த வாரம் நிறைவடைந்த போட்டிகளில் இவ்விரண்டு அணிகளுமே வெற்றிகளை சுவீகரித்திருந்த நிலையில் இப்போட்டிக்கு பிரவேசித்திருந்தன. ப்ளூ ஸ்டார் அணியானது சொலிட் விளையாட்டுக் கழகத்தை 2-0 என்ற கோல்கள் அடிப்படையில் தோற்கடித்திருந்ததுடன், கொழும்பு கால்பந்து கழகம் கடற்படை கழகத்துடனான போட்டியில் 3-1 என்ற  கோல்கள் அடிப்படையில் வெற்றியீட்டியிருந்தது.

இந்நிலையில் பலரும் எதிர்பார்த்திருந்ததை போன்றே ஆரம்பம் முதலே போட்டி விறுவிறுப்பாகவும் ஆக்ரோஷமானதாகவும் காணப்பட்டது. இதன் பலனாக போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே விதிமுறையை மீறிய ஆட்டம் காரணமாக இதோவு ஹமீடிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

போட்டியின் முதலாவது கோல் வாய்ப்பு கொழும்பு கால்பந்து கழகத்துக்கு கிடைத்த போதிலும் மொஹமட் ரமீஸின் முயற்சியை எதிரணி சிறப்பாக தடுத்து பந்தினை வெளியேற்றியது.

எவ்வாறாயினும் 13ஆவது நிமிடத்தில் போட்டியின் முதலாவது கோலினை ப்ளூ ஸ்டார் அணி பெற்றுக்கொண்டது. ஆடுகளத்தின் வலப்பக்கத்தில் இருந்து அபொஞ்சா ஜிபோலா பந்தினை கடத்த, அதனை கோலாக மாற்றினார் மொஹமட் பர்ஸீன்.

அதனை தொடர்ந்து புத்துணர்ச்சியுடன் தாக்குதல் ஆட்டத்தை வெளிக்காட்டிய ப்ளூ ஸ்டார் அணியானது E.B. சன்ன, ஜிபோலா மற்றும் பர்ஸீனின் கூட்டணி மூலம் எதிரணியின் தடுப்பு வீரர்களுக்கு பலத்த அழுத்தத்தை வழங்கியது. அவ்வாறானதொரு முயற்சியின் போது இதோவு ஹமீடின் உதை இலக்கை நோக்கி அமைந்த போதிலும், சிறப்பாக செயற்பட்ட கோல் காப்பாளர் பந்தினை லாவகமாக தடுத்தார்..

சில நிமிடங்கள் கடந்த பின்னர் ரசிகர்களின் உற்சாகப்படுத்தலை தொடர்ந்து தனது வழமையான ஆட்டத்திற்கு திரும்பிய கொழும்பு கால்பந்து கழகம் அஃபீஸ், மொஹிதீன் மற்றும் ஸர்வான் ஆகியோரின் உதவியுடன் தாக்குதல் நகர்வுகளை மேற்கொண்டது.

எனினும் முதற்பாதியின் இறுதி நிமிடங்களில் அடைமழை பெய்யத் தொடங்கியதன் காரணமாக இரு அணிகளின் வீரர்களும் பந்தினை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க தவறினர்.

முதல் பாதி : ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 1-0 கொழும்பு கால்பந்து கழகம்

இடைவேளையின் பின்னரும் மழை தொடர்ந்து பெய்த காரணத்தினால் ஆடுகளம் போட்டியை தொடர்வதற்கு உகந்த நிலையில் காணப்படவில்லை. இதனை கவனத்திற் கொண்ட அதிகாரிகள் போட்டியை ஒத்திவைக்க தீர்மானித்ததுடன், போட்டியானது ஆரம்பம் முதல் இடம்பெறுமா அல்லது இரண்டாம் பாதியின் ஆட்டம் மட்டும் தொடருமா என்பது நாளை முடிவு செய்யப்படவுள்ளது.

கோல் பெற்றவர்கள்

ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் – மொஹமட் பர்ஸீன் 13’