அடுத்த ஆட்டத்திலாவது இலங்கைக்கு முதல் வெற்றியை சுவைக்கலாமா?

887

இலங்கை அணிக்கு எதிரான மழையால் பாதிக்கப்பட்ட மூன்று ஒருநாள் போட்டிகளில், இரண்டு போட்டிகளை இங்கிலாந்து அணி வெற்றிக்கொண்டுள்ள நிலையில், நான்காவது போட்டி நாளை (20) கண்டி – பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஒருநாள் தொடரை பொருத்தவரையில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் மழைக் குறுக்கிட்டதுடன், அதில் இரண்டு போட்டிகளில் மாத்திரமே முடிவு எட்டப்பட்டது. ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டு நடத்தப்பட்ட இந்த இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி இலகுவான வெற்றிகளை பெற்று தொடரில் 2-0 என முன்னிலைப்பெற்றுள்ளது.

துடுப்பாட்ட வீரர்களின் கவனக் குறைவால் இலங்கை அணிக்கு மீண்டும் தோல்வி

இலங்கை அணிக்கு எதிராக கண்டி – பல்லேகலை..

தற்போது தொடரின் வெற்றியை நோக்கி பயணித்துள்ள இங்கிலாந்து அணிக்கு நாளைய போட்டியின் வெற்றி மாத்திரமே தேவைப்படுகிறது. மறுபக்கம், தென்னாபிரிக்க தொடர் மற்றும் ஆசியக் கிண்ணப் போட்டிகளில் தோல்வியடைந்த இலங்கை அணி மற்றுமொரு தொடர் தோல்வியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தம்புள்ளையிலிருந்து வெற்றியின்றி பல்லேகலைக்கு திரும்பிய இலங்கை அணி, அங்கு நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தது. ஒருவகையில் 21 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட இந்தப் போட்டி இலங்கை அணிக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், மீண்டும் துடுப்பாட்ட வீரர்களின் தவறுகளால் இலங்கை அணி தோல்வியடைந்தது.

பல்லேகலை மைதானத்தில் 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி, கடந்த போட்டியுடன் தங்களுடைய 11வது தோல்வியினை சந்தித்துள்ளதுடன், இங்கிலாந்து அணிக்கு எதிராக தங்களுடைய இரண்டாவது தோல்வியையும் (3 போட்டிகள்) சந்தித்துள்ளது.

இலங்கை அணியின் போட்டி முடிவுகள் (பல்லேகலை)

  • போட்டி – 21
  • வெற்றி – 10
  • தோல்வி – 11

இலங்கைஇங்கிலாந்து போட்டி முடிவுகள் (பல்லேகலை)

  • போட்டி – 3
  • இங்கிலாந்து – 2
  • இலங்கை – 1

பல மாற்றங்கள், உத்திகள் என அனைத்திலும் இலங்கை அணி மாற்றம் கொண்டு வந்தாலும், மீண்டும், மீண்டும் துடுப்பாட்டத்தில் விடப்பட்டும் தவறுகளால் இலங்கை அணி பெரும் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. இறுதியாக, நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் உபுல் தரங்க மற்றும் உபாதைக்குள்ளாகிய குசல் பெரேரா ஆகியோருக்கு பதிலாக சதீர சமர விக்ரம மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டனர்.

முக்கியமாக குழாத்தின் மேலதிக வீரர்கள் பட்டியலில் இருந்த, குசால் மெண்டிஸிற்கு திடீரென வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக ஏமாற்றமளித்து வரும் இவர் மீண்டும் கொடுக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்த தவறியமை அணியின் துடுப்பாட்டத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

அதுமாத்திரமின்றி, நிரோஷன் டிக்வெல்ல மூன்றாவது ஒருநாள் போட்டியின் பின்னர் கூறியது போன்று, “ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் மத்திய வரிசை வீரர்கள் ஒன்றிணைந்து ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க தவறி வருகின்றமை அணி அதிக ஓட்டங்களைப் பெறுவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளதுஎன்பதும் இலங்கை அணியின் பின்னடைவுக்கு மற்றுமொரு காரணமாகும்.

இலங்கை அணி இவ்வாறான சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இங்கிலாந்து அணி தங்களை மேலும் பலமிக்க அணியாக வலுப்படுத்திக் கொண்டுள்ளது. இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளும் விதம், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களின் நுணுக்கம் என்பவை அவர்களின் வெற்றிகளுக்கு மிக முக்கிய காரணமாகியுள்ளது.

அதுமாத்திரமின்றி, இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கனின் துடுப்பாட்டம் இலங்கை அணிக்கு கடும் சவாலைக் கொடுத்து வருகின்றது. கடந்த மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் மாத்திரமே 92 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த அவர், இரண்டு போட்டிகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடியிருந்தார்.  இதன் மூலம் 164.0 என்ற சராசரியில் 164 ஓட்டங்களை குவித்து, தொடரின் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மத்திய வரிசை துடுப்பாட்டம் அணிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது – டிக்வெல்ல

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள்..

சர்வதேச தரவரிசையில் பலம் மிக்க அணிக்கும், ஒருநாள் போட்டிகளில் கடந்த இரண்டு வருடங்களாக மோசமான சாதனையைக் கொண்ட அணிக்குமான இந்த மோதலின் முடிவுகள் பலமான அணியான இங்கிலாந்து பக்கமே சார்ந்துள்ளது.  இவ்வாறான நிலையில் ஒரு வெற்றியாவது அணிக்கு நம்பிக்கை அளிக்கும் என்ற எண்ணத்துடன் இருக்கும் இலங்கை அணிக்கு அடுத்த போட்டியாவது மகிழ்ச்சியளிக்குமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எது எவ்வாறாயினும் நாளை நடைபெறவுள்ள நான்காவது ஒருநாள் போட்டி இலங்கை அணிக்கு மிக முக்கிய போட்டியாக அமையுவுள்ளது.  இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை தோல்வியை தவிர்க்க வேண்டிய சூழ்நிலையில் நாளை இலங்கை அணி களமிறங்கவுள்ளது. எனினும் பல்லேகலை மைதானத்தின் காலநிலை நாளைய போட்டிக்கு எவ்வாறு அமையப் போகின்றது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மைதானக் காலநிலை (பல்லேகலை)

நாளைய போட்டி மழையால் பாதிக்கப்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் இல்லை.  எனினும் போட்டியின் இரண்டாம் பாதியில் மழைக் குறுக்கிட குறைந்த வாய்ப்புகள் காணப்படுகின்றன. எவ்வாறாயினும் பகல் போட்டி என்பதால் நாளைய போட்டியில் முடிவை எட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் டி-20 அணியில் ஆமிர் நீக்கம்: அறிமுக வீரர் வக்காஸுக்கு வாய்ப்பு

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி-20…

அணி விபரம்

இலங்கை அணியை பொருத்தவரையில் நாளைய தினம் இரண்டு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலதிக வீரர்கள் பட்டியலில் இருந்து இணைக்கப்பட்டுள்ள குசல் மெண்டிஸிற்கு பதிலாக உபுல் தரங்கவும், நுவான் பிரதீப்புக்கு பதிலாக துஷ்மந்த சமீரவும் அணியில் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் இங்கிலாந்து அணி சார்பில் எவ்வித மாற்றங்களும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

நான்காவது போட்டிக்கான இலங்கை உத்தேச பதினொருவர்

உபுல் தரங்க, நிரோஷன் டிக்வெல்ல, தனன்ஜய டி சில்வா, தினேஷ் சந்திமால் (தலைவர்), தனன்ஜய டி சில்வா, தசுன் ஷானக, திசர பெரேரா, அகில தனன்ஜய, அமில அபோன்சோ, துஷ்மந்த சமீர, லசித் மாலிங்க

நான்காவது போட்டிக்கான இங்கிலாந்து உத்தேச பதினொருவர்

ஜேசன் ரோய், ஜொனி பெயார்ஸ்டோவ், ஜோ ரூட், இயன் மோர்கன் (தலைவர்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயின் அலி, ஆடில் ரஷீட், ஒல்லி ஸ்டோன், கிரிஸ் வோகஸ், லியாம் டவ்ஸன்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<