சீன அணியை வீழ்த்திய இலங்கை எழுவர் ரக்பி அணி

115
Asia 7s 3rd leg 1st day

அணிக்கு 7 பேர் கொண்ட ஆசிய ரக்பி போட்டிகளின் 3ஆம் கட்ட போட்டிகளில், சீன அணியுடனான குழு மட்ட போட்டியில் தனுஷ்க ரஞ்சனின் உதவியுடன் இலங்கை அணி 28-07 என்ற புள்ளிகள் அடிப்படையில்  தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

கொழும்பு ரேஸ் கோஸ் மைதானத்தில் இம்முறை ஆசிய ரக்பி போட்டிகளின் 3ஆம் கட்ட போட்டிகள் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதுவே இறுதிக் கட்ட போட்டியென்பதும் குறிப்பிடத்தக்கது. பிரம்மாண்டமான இப்போட்டித் தொடரின் முதல் நாளன்று மழையின் குறுக்கீடு அதிகமாகவே காணப்பட்டது. எனினும் போட்டிகள் அனைத்தும் உரிய நேரத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியானது தமது குழு மட்ட போட்டிகளில் இரண்டாவது போட்டியில் சீன அணியுடன் பலப் பரீட்சை நடாத்தியது. முதல் போட்டியில் கொரிய அணியுடன் தோல்வியுற்ற இலங்கை அணியானது, சீன அணியுடனான முக்கியமான போட்டியில் களம் கண்டது. கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை சிறப்பான ஆட்டத்திற்கு சற்று தடையாக அமைந்தது.

இலங்கை அணியானது தனுஷ்க ரஞ்சன் மூலமாக சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. சீன வீரர்களின் தடையை உடைத்து  தனுஷ்க ரஞ்சன், சுமார் 60 மீட்டர் தூரம் வரை ஓடிச் சென்று சிறப்பான ட்ரையை இலங்கை அணி சார்பாக வைத்தார். ரத்வத்த கொன்வெர்சனை பூர்த்தி செய்ய, இலங்கை அணி 7-0  என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை அடைந்தது. இரண்டு அணிகளும் புள்ளிகளைப் பெற முயற்சித்தாலும், காலநிலை மற்றும் மைதானத்தின் தன்மை இரண்டு அணிகளையும் புள்ளிகள் பெறுவதில் இருந்து தடுத்தது.

முதல் பாதியின் இறுதி நிமிடத்தில், மீண்டும் ஒரு முறை ரஞ்சன் இலங்கை அணி சார்பாக ட்ரை வைத்து இலங்கையின் முன்னிலையை அதிகரித்தார். முதல் ட்ரை போன்றே அமைந்த இந்த ட்ரையின் மூலம் இலங்கை அணி வலுவான நிலையில் இரண்டாம் பாதிக்குள் நுழைந்தது. ரத்வத்த மீண்டும் ஒரு முறை கொன்வெர்சனை சிறப்பாக பூர்த்தி செய்தார்.

முதல் பாதி: இலங்கை 14 – 00 சீனா

இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் சீன அணியானது இலங்கை அணிக்கு அழுத்தம் கொடுத்தது. சீன அணி, இலங்கை அணிக்கு அச்சுறுத்தலாகக் காணப்பட்ட பொழுதும் இலங்கை அணி சிறப்பாக சீன அணியை கட்டுப்பாட்டிற்குள் வைத்தது. சீன அணி வீரரான ச்சோங் மாவின் ட்ரை வைக்கும் முயற்சியை ரத்வத்த முறியடிக்க, பந்தை பெற்றுக்கொண்ட ரிச்சர்ட் தர்மபால 70 மீட்டர் தூரம் மின்னல் வேகத்தில் கடந்து ட்ரை கோட்டை அடைந்தார். மீண்டும் ஒரு முறை ரத்வத்த இலகுவான கொன்வெர்சனை பூர்த்தி செய்தார். (இலங்கை 21 – 00 சீனா)

ஆசிய 7’s ரக்பி தொடரில் பிளேட் கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை

இறுதியாக சீன அணியானது இலங்கை அணியின் தடையை உடைத்து தனது முதலாவது புள்ளியை பெற்றுக்கொண்டது. ச்சங் ஷோன் கம்பத்தின் அடியில் ட்ரை வைத்து சீன அணிக்கு முதல் புள்ளியைப் பெற்றுக்கொடுத்தார். எனினும் இலங்கை அணி 14 புள்ளிகள் முன்னிலையில் காணப்பட்டதால், சீன அணியின் வெற்றி சந்தேகமாகவே காணப்பட்டது.

தனது வெற்றியை உறுதி செய்யும் வகையில், இலங்கை அணியின் ரீசா றபாய்தீன் இறுதி ட்ரை வைத்தார். கொன்வெர்சனையும் அவரே உதைய, இலங்கை அணி வெற்றியை உறுதி செய்தது.

முழு நேரம்: இலங்கை 28 – 07 சீனா


இலங்கை எதிர் கொரியா

தனது முதலாவது போட்டியில் கொரிய அணியை எதிர்த்த இலங்கை அணியானது 21-28 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியுற்றது.

ஏற்கனவே கூறியது போன்று சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு அணிகளும் சிறிது தடுமாறின. இருந்தாலும் மைதானத்தின் தன்மைக்கு உடனடியாக தம்மை செம்மைப்படுத்திக்கொண்ட கொரிய அணியானது, இலங்கை அணியின் சிறிய தவறுகளை பயன்படுத்தி 3ஆவது நிமிடத்தில் முதல் புள்ளியை பெற்றுக்கொண்டது. ஹியூன் சு கிம் ட்ரை கொரிய அணி சார்பாக முதல் ட்ரை வைத்தார். (இலங்கை 00 – 07 கொரியா)

இதனால் தளர்வடையாத இலங்கை அணியானது ட்ரை ஒன்றை வைத்து தக்க பதிலடி கொடுத்தது. பலம் மிக்க ஜேசன் திஸாநாயக்க கொரிய வீரர்களைத் தாண்டிச் சென்று கம்பத்தின் அடியே ட்ரை வைத்து  அசத்தினார். ரத்வத்த கொன்வர்சனை சிறப்பாக பூர்த்தி செய்தார். (இலங்கை 07 – 07 கொரியா)

தொடர்ந்து இலங்கை அணி தனது திறமையை வெளிக்காட்டாத நிலையில், இலங்கை  அணியின் பலவீனமான தடையை பயன்படுத்திக்கொண்ட கொரிய அணியின் ஜே பொக் லீ, கொரிய அணி சார்பாக இரண்டாவது ட்ரை வைத்தார். இலங்கை அணி தொடர்ந்து திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தாதனால், முதல் பாதி நிறைவடைய முன்னர் கொரிய அணியானது மீண்டும் ஒரு ட்ரை வைத்தது.

முதல் பாதி: இலங்கை 07 – 21 கொரியா

இரண்டாம் பாதியானது இலங்கை அணிக்கு சார்பாகவே ஆரம்பித்தது. இரண்டாம் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணியானது, இப்பாதியில் முதலாவது புள்ளியைப் பெற்றுக்கொண்டது. “ரொக்கெட்” ஸ்ரீநாத் சூரியபண்டார கொரிய தடையை தாண்டி அசத்தலான ட்ரை வைத்தார். அவரே கொன்வெர்சனை பூர்த்தி செய்ய இலங்கை அணி புள்ளிகள் வித்தியாசத்தை 7 ஆகக் குறைத்தது. தொடர்ந்து இலங்கை அணியானது தனுஷ்க ரஞ்சன் மூலமாக மற்றுமொரு ட்ரை வைத்து புள்ளிகளை சமநிலை செய்தது. (இலங்கை 21 – 21 கொரியா)

சிறப்பான ஆட்டத்தினால் ரசிகர்களுக்கு இலங்கை அணியானது நம்பிக்கை கொடுத்த பொழுதும், கொரிய அணியானது இறுதி நிமிடத்தில் இலங்கை அணி ரசிகர்களின் கனவை தகர்த்தது . ஜியோன் மின் கிம் தனது வேகத்தையும் திறனையும் பயன்படுத்தி இறுதி நிமிடத்தில் ட்ரை வைத்து கொரிய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இலங்கை அணியினால் மேலதிகமாக எந்த ஒரு புள்ளியையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தோல்வியைத் தழுவியது.

முழு நேரம்: இலங்கை 21- 28 கொரியா