டயலொக் ரக்பி லீக் போட்டிகளில் இது வரை எந்த வெற்றியையும் பெற்றுக்கொள்ளாத CH & FC அணியானது 2ஆவது சுற்றில் இராணுவ அணியிடமும் 43-08 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியடைந்தது.

பியகம மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் CH & FC அணிக்கு எதிராக 7 ட்ரைகள் வைக்கப்பட்டது. இது CH & FC அணிக்கு ஒன்றும் புதுமையானது அல்ல. இராணுவ அணியின் மைதானம் என்பதால் இராணுவ அணி இலகுவாக வென்றது. முதல் சுற்றில் இரண்டு அணிகளுக்கும் இடையில் ஒரு போட்டித்தன்மை காணப்பட்ட பொழுதும், இப்போட்டியில் இராணுவ அணி இலகுவாக வென்றது.

CH & FC அணியானது பல புது வீரர்களுடன் போட்டியை ஆரம்பித்தது. யோஷித ராஜபக்ஷ, அவரின் சகோதரர் ரோஹித ராஜபக்ஷ்வுடன் இப்போட்டியில் விளையாடினார். முதலில் இரு அணிகளும் சிறந்த போட்டியை வெளிக்காட்டியது. எனினும் CH & FC அணியானது தனது வழமையான மோசமான விளையாட்டை அதன் பின்னர் விளையாடத் தொடங்கியது. 7ஆவது நிமிடத்தில் இராணுவ அணியின் நாலக மதுரங்க போட்டியின் முதல் ட்ரையை வைத்தார். (CH & FC அணி 00 – இராணுவ அணி 05)

10 நிமிடங்கள் கழித்து இராணுவ அணியின் மனோஜ் பண்டார மற்றுமொரு ட்ரை வைத்து உதையையும் அவரே வெற்றிகரமாக உதைத்தார். போட்டியின் 24ஆவது நிமிடத்தில் CH & FC அணியானது பெனால்டி மூலம் 3 புள்ளிகளை பெற்றுக்கொண்டது. ரோகித ராஜபக்ஷ இலகுவான உதையின் மூலம் 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (CH & FC அணி 03 – இராணுவ அணி 12)

இராணுவ அணியானது முதல் பாதியில் மேலும் 3 ட்ரைகளை வைத்து போனஸ் புள்ளியை பெற்றுக்கொண்டது. CH & FC அணியானது முதற் பாதியின் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய பொழுதும் இறுதி சில நிமிடங்களுக்கு மோசமான விளையாட்டை வெளிப்படுத்தியது. இராணுவ அணி சார்பாக வைக்கப்பட்ட 3 ட்ரைகளில் முதல் ட்ரையை இராணுவ அணியின் தலைவர் மனோஜ் டி சில்வா வைத்தார். அடுத்த இரு ட்ரைகளையும் உபுல் அபேரத்ன மற்றும் சமீர விக்ரமநாயக ஆகியோர் வைத்தனர்.

முதற் பாதி : CH & FC அணி 03 – இராணுவ அணி 31

இரண்டாவது பாதி ஆரம்பித்த உடனே CH & FC அணியானது ட்ரை வைத்து அசத்தியது. யோஷித ராஜபக்ஷ CH & FC அணி சார்பாக முதல் ட்ரை வைத்தார். அவரது சகோதரர் உதையை தவறவிட்ட பொழுதும், CH & FC அணி இரண்டாம் பாதியை சிறப்பாக ஆரம்பித்தது. (CH & FC அணி 08 – இராணுவ அணி 31)

CH & FC அணியானது இராணுவ அணிக்கு அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்த்த பொழுதும், மறுபடியும் இராணுவ அணியே போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. 2ஆம் பாதியில் முதல் 25 நிமிடங்களுக்கு இரு அணியும் விட்டுக்கொடுக்காமல் விளையாடிய பொழுதும் இறுதி நிமிடங்களில் CH & FC அணி தமது பலத்தை இழந்தது. அஷான் பண்டார இராணுவ அணியின் 6ஆவது ட்ரையை வைத்தார். சமத் பெர்னாண்டோ உதையை தவறவிடவில்லை. அஷான் பண்டாரவிற்கு இப்போட்டி சிறப்பாக அமைந்தது. அவர் 11 புள்ளிகளை தமது அணிக்கு பெற்றுக்கொடுத்தார். (CH & FC அணி 08 – இராணுவ அணி 38)

இராணுவ அணியானது 70ஆவது நிமிடத்தில் அரவிந்த கருணாரத்ன மூலம் மேலும் ஒரு ட்ரை வைத்தது. CH & FC அணியின் நிஸ்மி நிலார் 73ஆவது நிமிடத்தில் ஆபத்தான முறையில் இராணுவ வீரரை தடுத்ததற்காக மஞ்சள் அட்டை காட்டப்பட்டு நடுவரால் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். எனினும் இராணுவ அணியால் போட்டி நிறைவடைய முன்னர் மேலதிக புள்ளிகளை பெற முடியவில்லை.

முழு நேரம் : CH & FC அணி 08 – இராணுவ அணி 43

ThePapare.com போட்டியின் சிறந்த வீரர் – அஷான் பண்டார (இராணுவ அணி)

புள்ளிகள் பெற்றோர்

இராணுவ அணி – அஷான் பண்டார 1T 3C, மனோஜ் டி சில்வா 1T, அரவிந்த  கருணாரத்ன 1T, சமத் பெர்னாண்டோ 2C, நாளக மதுரங்க 1T, மனோஜ் பண்டார 1T, உபுல் அபேரத்ன 1T

CH & FC அணி – யோஷித ராஜபக்ஷ 1T, ரோகித ராஜபக்ஷ 1P