5ஆவது இடத்திற்கான போட்டியிலும் இலங்கை இளம் கரப்பந்து வீரர்கள் தோல்வி

267
3rd-Asian-mens-u23-volleyball-championship-2019

மியன்மாரில் நடைபெற்று வரும் 23 வயதுக்கு உட்பட்ட ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் சீனாவுக்கு எதிரான 5-8 ஆவது இடங்களை தீர்மானிக்கும் போட்டியில் இலங்கை அணி 3-1 என தோல்வியை சந்தித்தது.  

நீ பீ டோ நகரில் நடைபெற்று வரும் இந்த சுற்றுத் தொடரில் இன்று (10) நடந்த போட்டியில் சீன அணிக்கு இலங்கை ஆரம்ப சுற்றில் கடும் சவால் கொடுத்தது. இதனால் இரு அணிகளினதும் புள்ளி சரிசமமாக சென்றது. எனினும் இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் சீன அணியால் முதல் சுற்றை கைப்பற்ற முடிந்தது. இந்த சுற்றில் 23-25 என சீனா வென்றது.

இரண்டாவது சுற்றிலும் இதே நிலை நீடித்தபோதும் இலங்கை அணி செய்த சில தவறுகள் சீனாவுக்கு சாதகமாக அமைய அந்த சுற்றும் 21-25 புள்ளிகள் என சீனா வசமானது.    

எனினும் தீர்க்கமான மூன்றாவது சுற்றில் சீனாவுக்கு தனது திறமையை நிரூபித்த இலங்கை இளம் வீரர்கள் 23-25 என அந்த சுற்றை கைப்பற்றினர். இதனால் நான்காவது சுற்றில் கடும் போட்டி நிலவியபோதும் சீன அணி 23-25 என இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் அதனை கைப்பற்றி போட்டியை வென்றது. 

இளையோர் ஆசிய சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி ஆரம்பத்தில் சிறப்பாக செயற்பட்டு சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியபோதும் அந்த சுற்றில் பாகிஸ்தான், சீன தாய்பே மற்றும் ஜப்பான் அணிகளிடம் தோற்ற நிலையில் தற்போது சீனாவிடமும் தோல்வியை சந்தித்தது. 

இதனால் இலங்கை அணிக்கு இம்முறை ஆசிய சம்பியன்ஷிப் போட்டியில் 7 அல்லது 8 ஆவது இடத்தை பிடிக்க முடியுமாகியுள்ளது. இதற்கான இறுதிப் போட்டி நாளை (11) நடைபெறவுள்ளது.

மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க