ஸ்வீடன் அணிக்கு ஏமாற்றம் அளித்த இப்ராஹிமோவிக்

334
Image Courtesy - Getty Images
 

ஸ்வீடன் முன்கள வீரர் ஸ்லாடன் இப்ராஹிமோவிக் (Zlatan Ibrahimović) இந்த ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் விளையாடமாட்டார் என அந்நாட்டு கால்பந்து சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மென்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னாள் முன்கள வீரரான இப்ராஹிமோவிக் தான் சர்வதேச போட்டிகளில் பெற்ற ஓய்வில் இருந்து விலகி ரஷ்யா செல்லும் ஸ்வீடன் உலகக் கிண்ண குழாமில் அங்கம் வகிப்பார் என்று ஊகங்கள் இருந்து வந்தன.

எனினும் தான் மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்புவதில்லை என்று அவர் தீர்மானித்துள்ளார்.   

ஸ்வீடன் அணி முகாமையாளர் லார்ஸ் ரிச்ட் கூறியதாவது, நான் ஸ்லாடனுடன் செவ்வாயன்று (24) பேசினேன். தேசிய அணி பற்றிய தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை என்று அவர் என்னிடத்தில் கூறினார் – அவர் மறுத்துவிட்டார்.  

ரொனால்டோவின் கோலின்றி ரியல் மெட்ரிட் முதல்கட்ட அரையிறுதியில் வெற்றி

முந்திய தேசிய அணி ஒன்று கூடல்களிலும் ஸ்லாடன் இப்ராஹிமோவிக் விடயத்தில் இதே நிலைமை தான் இருந்தது. தேசிய அணி பயிற்றுவிப்பாளர் ஜன்னே அண்டர்சன் எதிர்வரும் மே மாதம் 15 இல் அறிவிக்கும் உலகக் கிண்ண குழாமில் அவர் கருத்தில் கொள்ளப்படமாட்டார்.

ஸ்வீடன் ஆடவர் கால்பந்து அணியின் உத்தியோகபூர்வ இன்ஸ்டக்ராம் (Instagram) பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பிலும், ”ஒரு இறுதி முடிவு: ஸ்லாடன் உலகக் கிண்ணத்தில் விளையாடமாட்டார்” என்று தேசிய தேர்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

36 வயதான இப்ராஹிமோவிக் அண்மையில் மென்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து விடைபெற்று அமெரிக்காவில் தனது கால்பந்து வாழ்வை தொடரும் நோக்கில் எல்.ஏ. கெலக்சி அணியில் இணைந்து கொண்டார்.

ஸ்வீடன் அணிக்காக 116 போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். எனினும் இந்த பருவத்தில் மீண்டும் ஸ்வீடன் அணிக்கு திரும்புவது பற்றி அவர் பல சந்தர்ப்பங்களிலும் சூசகமாக கூறி இருந்தார்.

இம்மாத ஆரம்பத்தில் கூட அவர் பதிவிட்ட ட்வீட்டில் (Tweet), இந்த பருவத்தில் ரஷ்யாவில் தான் இடம்பெறுவதற்கு வானளவு வாய்ப்பு உள்ளதென தான் நம்புவதாக கூறியிருந்தார்.

பின்னர் தொலைக்காட்சி பேட்டி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், ”ஆம், நான் உலகக் கிண்ணம் செல்வேன்” என்று உறுதியாகக் கூறியிருந்தார்.

2002 மற்றும் 2006 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிகளில் ஸ்வீடன் அணியில் இடம்பிடித்திருந்த இப்ராஹிமோவிக் தேசிய அணிக்காக 62 கோல்களை பெற்றிருப்பதோடு. அஜக்ஸ், ஜுவான்டஸ் மற்றும் இன்டர் மிலான் கழகங்களுக்காகவும் விளையாடியுள்ளார்.  

மென்செஸ்டர் யுனைடெட் அணிக்காக தனது இறுதிப் பருவத்தில் முழங்கால் காயத்தால் அவதியுற்றபோதும் கடந்த மாதம் எல்.ஏ. கெலக்சி அணிக்காக தனது முதல் போட்டியில் விளையாடியபோது இரண்டு கோல்களைப் பெற்று அந்த அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தார்.    

சலாஹ்வின் அபாரத்தால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை அதிகரித்த லிவர்பூல்

எனினும் இப்ராஹிமோவிக் இன்றியே ஸ்வீடன் அணி இத்தாலியுடனான பிளே ஓப் போட்டியில் அந்த அணியை வீழ்த்தி 2018 உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றது. இது அந்த அணி 2006 இற்கு பின் விளையாடும் முதல் உலகக் கிண்ணமாக உள்ளது. ஸ்வீடன் அணி 2010 மற்றும் 2014 உலகக் கிண்ண போட்டிகளுக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை உலகக் கிண்ணத்தில் குழு F இல் விளையாடும் ஸ்வீடன் அணி தனது முதல் போட்டியில் ஜுன் 18 ஆம் திகதி தென் கொரியாவை எதிர்கொள்ளவிருப்பதோடு அதனைத் தொடர்ந்து ஜெர்மனி மற்றும் மெக்சிகோ அணிகளுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.