இரண்டாவது‌ ‌முறை‌ ‌ரியல்‌ ‌மட்ரிட்டிலிருந்து‌ ‌விலகினார்‌ ‌சிடேன்‌ ‌ ‌

96
Getty

ரியல் மட்ரிட் அணியின் முகாமையாளரான சினேடின் சிடேன், தனது முகாமைத்துவ பணியிலிருந்து ராஜினாமா செய்வதாக  ரியல் மட்ரிட் அணி இன்றைய தினம் (27) அறிவித்தது. 

2019/20 பருவகால லாலிகா வெற்றியாளர்களான ரியல் மட்ரிட், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த பருவகால லாலிகா தொடரின் இறுதி லீக் வாரத்தில், தமது கிண்ணத்தை இரண்டு புள்ளிகளால் அட்லெடிகோ மட்ரிட் அணியிடம் இழந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Video – 7 வருடஙக்ளின் பின்னர் LALIGA கிண்ணத்தை கைப்பற்றியது அட்லெடிகோ மட்ரிட் | FOOTBALL ULAGAM

சிடேனின் இந்த முடிவுக்கு தாங்கள்  மதிப்பளிப்பதாக ரியல் மட்ரிட் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தற்போது 48 வயதான பிரான்ஸ் அணியின் முன்னாள் முன்கள வீரரான சிடேன், 2001 இலிருந்து 2006 வரை ரியல் மட்ரிட் அணிக்கு வீரராக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு ரியல் மட்ரிட் அணியை முதன் முறையாக முகாமைத்துவம் செய்ய தொடங்கிய சிடேன், 2018 வரை அவ்வணிக்கு முகாமையாளராக இருந்தார்.  

அவரது முகாமைத்துவ காலப்பகுதியில் 2016 இலிருந்து தொடர்ச்சியாக 3 தடவைகள் ரியல் மட்ரிட் அணி சம்பியன்ஸ் லீக் வெற்றியாளர்களாகினர். அத்தோடு 2017ஆம் ஆண்டு, 5 வருடத்திற்கு பின்னர் லாலிகா தொடரின் வெற்றியாளர்களாக ரியல் மட்ரிட் தெரிவு செய்யப்பட்டது. அத்துடன் 2017 மற்றும் 2018 இல் உலகின் சிறந்த கழக முகாமையாளர் என்ற விருதையும் சிடேன் வென்றார். 

இலங்கை தேசிய அணியில் இரண்டு மாற்றங்கள்

இந்த நிலையில் 2018 மே மாதம் மட்ரிட்டின் முகாமையாளர் பதவியிலிருந்து விலகிய சிடேன், 10 மாதங்களின் பின்னர் ரியல் மட்ரிட் அணியின் முகாமையாளராக மீண்டும் இரண்டாவது தடவையாக 2019 மார்ச் இல் பொறுப்பேற்றார். இந்த முறை அவரின் முகாமையின் கீழ் 2019/20 லாலிகா கிண்ணத்தை ரியல் மட்ரிட் அணி சுவீகரித்தது.  

எனினும், இந்த பருவகாலத்தில் (2020/21),  கோபா டெல் ரே கிண்ணத்தில், மூன்றாம் நிலை அணியான அல்கொயனோ அணியிடம் தோற்று வெளியேறிய பின், சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலும் அரையிறுதிப் போட்டியில் செல்சி அணியிடம் தோற்று தொடரிலிருந்து வெளியேறினர் மட்ரிட். 

அதன் பின் கடந்த வாரம் அட்லெடிகோ மட்ரிட் அணியிடமும் தமது லாலிகா கிண்ணத்தை இழந்த பின்னர், 2009/10 பருவக்காலத்திற்கு பின்னர் முதல் தடவையாக ஒரு பருவகாலத்தில் எந்த கிண்ணத்தையும் வெல்லத்தவறியது ரியல் மட்ரிட்.  

சிடேனின் இந்த முடிவுக்கு பின்னர் அறிக்கை வெளியிட்ட ரியல் மட்ரிட் நிர்வாகம், “சிடேன் ரியல் மட்ரிட்டின் மிகப்பெரிய சொத்து. அவர் வீரராகவும் முகாமையாளராகவும் இக்கழகத்திற்கு ஆற்றிய சேவை அளப்பரியது. ரியல் மட்ரிட் அணியின் ரசிகர்களின் மனதில் அவருக்கும் எப்போதும் ஒரு இடமுண்டு” எனத் தெரிவித்தனர்.  

தென் கொரியா, லெபனானுடன் Defensive முறையில் ஆடவுள்ள இலங்கை அணி

ரியல் மட்ரிட் அணி, மூன்று தடவை சம்பியன்ஸ் கிண்ணத் தொடரையும்,  இரண்டு தடவை லாலிகா கிண்ணத்தையும், இரண்டு தடவை ஸ்பானிஷ் சுபர் கோப்பையையும், இரண்டு தடவை பிபா கழக உலகக் கிண்ணத் தொடரையும், இரண்டு தடவை ஐரோப்பிய சுபர் கோப்பையையும் வெல்வதற்கு உறுதுணையாக இருந்த சினேடின் சிடேன், தற்போது ரியல் மட்ரிட்டிலிருந்து விலகுவது அவ்வணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்குமென்பதில் எந்த ஐயமும் இல்லை. 

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<