ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் சாதனையுடன் வென்ற பாகிஸ்தான்

129

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக புலவாயோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணியின், பக்ஹர் சமான் மற்றும் இமாம் உல் ஹக் ஜோடி ஒருநாள் போட்டிகளில் முதல் விக்கெட்டுக்கான அதிகூடிய இணைப்பாட்ட சாதனையை பூர்த்தி செய்து, அணியின் மிகப்பெரிய வெற்றிக்கு வித்திட்டனர்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று, பாகிஸ்தான் அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் ஜிம்பாப்வே அணி ஆறுதல் வெற்றியை நோக்கிய இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி மீண்டும் அபார வெற்றிபெற்று, தொடரின் வைட் வொஷ் நோக்கி நகர்ந்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி பல சாதனைகள் அடங்கலாக ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து, தங்களது அதிகூடிய ஒருநாள் ஓட்ட எண்ணிக்கையாக 399 ஓட்டங்களை குவித்தது. இதில் ஆரம்ப விக்கெட்டுக்காக ஜயசூரிய மற்றும் உபுல் தரங்க ஆகியோர் 2006 ஆம் ஆண்டு பெற்ற இணைப்பாட்ட உலக சாதனையை முறியடித்து இமாம் உல் ஹக் மற்றும் பக்ஹர் சமான் 304 ஓட்டங்களை ஆரம்ப விக்கெட்டுக்காக பெற்றனர்.

இலங்கையின் 12 வருட உலக சாதனையை முறியடித்த பாகிஸ்தான்

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இன்று (20)…

பாகிஸ்தான் அணிக்காக தனது எட்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடும், இமாம் உல் ஹக் மூன்றாவது சதத்தை பூர்த்திசெய்து 113 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, வெலிங்டன் மசகட்சாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். எனினும் தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய பக்ஹர் சமான் 115 பந்துகளில் 150 ஓட்டங்களைக் கடந்ததுடன், தனது முதலாவது இரட்டைச் சதத்தையும் பெற்று அசத்தியிருந்தார். பாகிஸ்தான் அணிக்காக முதலாவது ஒருநாள் இரட்டை சதத்தை பெற்றுக்கொண்ட இவர், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 210 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா 264 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், பக்ஹர் சமான் இந்த வரிசையில் 210 ஓட்டங்களுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

இதேவேளை இந்த போட்டியில் பக்ஹர் சமானுடன் இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்த அஷிப் அலி 22 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகளை விளாசி தனது கன்னி அரைச்சதத்தை (50) இன்று பதிவுசெய்தார். ஜிம்பாப்வே அணி சார்பில் வெலிங்டன் மசகட்சா மாத்திரம் 78 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.

இந்தநிலையில், பாரிய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி, ஆரம்பம் முதல் தடுமாறியது. முதல் மூன்று போட்டிகளை போன்று, இந்த போட்டியிலும் ஆதிக்கம் செலுத்திய பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் ஜிம்பாப்வே துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுகளை ஆரம்பத்திலிருந்தே சரிக்கத் தொடங்கினர். முதல் விக்கெட்டை உஸ்மான் கான் வீழ்த்தினார். ஜிம்பாப்வே அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கமுன்ஹுகமுவே 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஜிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட வீரர்கள் வழமை போன்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணித் தலைவர் ஹெமில்டன் மசகட்சா 22 ஓட்டங்கள், முசகண்டா 10 ஓட்டங்கள், முர்ரே 5 ஓட்டங்கள் மற்றும் பீட்டர் மூர் 20 ஓட்டங்கள் என வரிசையாக விக்கெட்டுகளை பறிகொடுக்க, ஜிம்பாப்வே அணி 67 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

தொடர்ந்து சிகும்புரா மற்றும் ட்ரைபனோ ஆகியோர் ஜிம்பாப்வே அணிக்கு நம்பிக்கையளித்தாலும், அவர்களின் விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட ஜிம்பாப்வே அணி 42.4 ஓவர்களில் 155 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 244 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி தொடரை 4-0 என கைப்பற்றியது. இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி சார்பில் அதிகபட்சமாக ட்ரைபனோ 44 ஓட்டங்களையும், சிகும்புரா 37 ஓட்டங்களையும் அதிகட்சமாக பெற்றுக்கொண்டனர் என்பதுடன், பாகிஸ்தான் அணி சார்பில் சதாப் கான் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், உஸ்மான் கான் மற்றும் பஹீம் அஷ்ரப் தலா 2 விக்கெட்டுகளையும் பகிர்ந்துகொண்டனர்.

வருடத்தின் முதலாவது ஒருநாள் தொடரை வென்ற பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணியின் இந்த வெற்றியானது ஒருநாள் போட்டிகளில் பெற்ற இரண்டாவது மிகப்பெரிய வெற்றியாக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 255 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியே மிகப்பெரிய வெற்றியாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் – 399/1 (50) – பக்ஹர் சமான் 210*(156), 113(122), (வெலிங்டன் மசகட்சா 1/78

ஜிம்பாப்வே – 155 (42.4) – ட்ரைபனோ 44(71), சிகும்பரா 37(69), சதாப் கான் 4/28

முடிவு – பாகிஸ்தான் அணி 244 ஓட்டங்களால் வெற்றி

  • போட்டியின் ஆட்டநாயகன் – பக்ஹர் சமான்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<