ஜிம்பாப்வே, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவு

1332
zim v wi

ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில், தொடரில் தொடர்ந்திருப்பதற்கு கட்டாயம் வெற்றி பெறவேண்டிய நிலையில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி இறுதிவரை போராடி போட்டியை சமநிலைப்படுத்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி எதிர்பார்க்காத வகையில் அதிர்ச்சி அளித்தது.  

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 257 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் ப்ரைன் சாரி (15) மற்றும் சம்மு சிபாபா (25) முதல் விக்கெட்டுக்காக 38 ஓட்டங்களை தமக்கிடையே இணைப்பாட்டமாகப் பகிர்ந்து கொண்டு சிறந்த ஆரம்பத்தினை ஜிம்பாப்வே அணிக்காக பெற்றுக்கொடுத்தனர். சம்மு சிபாபா 25 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை துரதிர்ஷ்டமாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

மூன்றாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த கிரேக் எர்வின் மற்றும் சிக்கந்தர் ராசா தங்களுக்கிடையே 144 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். கிரேக் எர்வின் 6 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 92 ஓட்டங்களையும், சிக்கந்தர் ராசா 7 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 77 ஓட்டங்களையும் பெற்றனர். எனினும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றனர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாகப் பந்து வீச்சில், கார்லோஸ் பரத்வைட் 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தான் வீசிய சிறந்த பந்து வீச்சாகப் பதிவு செய்து கொண்டார். ஷென்னோன் கப்ரியல் மற்றும் ஜேசன் ஹோல்டர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்த, ஆஷ்லி நர்ஸ் 55 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.

258 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பாட்டத்தை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக களமிறங்கிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஜொன்சன் சார்ல்ஸ் மற்றும் கிரேக் பரத்வைட் முதல் விக்கெட்டுக்காக 33 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த வேளை ஜொன்சன் சார்ல்ஸ் 19 ஓட்டங்களுக்கு டொனல்ட் திரிபனோவின் பந்து வீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்து சென்றார்.

இரண்டாம் விக்கெட்டுக்காக எவின் லுவிஸ் அதிரடியாக 17 பந்துகளில் 18 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டலும் ஜிம்பாப்வே அணித்தலைவர் கிராம் கிரிமரின் பந்து வீச்சில் சம்மு சிபாபாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் துடுப்பாடிக்கொண்டிருந்த கிரேக் பரத்வைட்டுடன் மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்த ஷாய் ஹோப் இருவரும் நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 162 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றதோடு மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

சிறப்பாக துடுப்பாடிய ஷாய் ஹோப் தனது முதலாவது கன்னி சதத்தினை பெற்றுக்கொண்டார். எனினும் 120 பந்துகளில் 101 (4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை துரதிர்ஷ்டமாக கிரிஸ்ஸின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

வெற்றி பெறும் வாய்ப்புக்கு மிக அருகில் வந்திருந்த நிலையில் கிரேக் பரத்வைட்  துரதிர்ஷ்டமாக 78 ஓட்டங்களைப் பெற்றிந்த போது வில்லியம்சின் பந்து வீச்சில் எர்வினிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்கள் ஜிம்பாப்வே அணியின் அதிரடி களத்தடுப்பில் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர்.

இறுதி ஓவரின் போது, மேற்கிந்தியத் தீவுகள் அணி 255 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 6 பந்துகளுக்கு 4 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. ஜிம்பாப்வே அணி மிகச் சிறப்பாகப் பந்து வீசியும், களத்தடுப்பில் மாற்றங்களை செய்தும் குறிப்பிட்ட ஓவரில் வெறும் 3 ஓட்டங்களைக் கொடுத்து, அதிரடியாக மூன்று விக்கெட்டுக்கைளை வீழ்த்தி போட்டியை சமநிலைப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டதால் போட்டி சமநிலையில் முடிவுற்றது. ஜிம்பாப்வே அணி சார்பாகப் பந்து வீச்சில் டொனல்ட் திரிபனோ மற்றும் சோன் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்ட நாயகன் : ஷாய் ஹோப்

புள்ளிகள் : ஜிம்பாப்வே அணி 02 மேற்கிந்தியத் தீவுகள் அணி 02

போட்டியின் சுருக்கம் :

ஜிம்பாப்வே அணி – 257(50) – கிரேக் எர்வின் 92(100), சிகந்தர் ராசா 77(81), சம்மு சிபாபா 25(33), ப்ரைன் சாரி 15(41), டொனல்ட் திரிபனோ 14(9), கார்லோஸ் பரத்வைட் 48/4(10), ஷன்னொன் கப்ரியல் 45/2(10), ஜேசன் ஹோல்டர் 47/2(10), ஆஷ்லி நர்ஸ் 55/1(10)   

மேற்கிந்திய தீவுகள் அணி – 257/8(50) – ஷாய் ஹோப் 101(120), கிரேக் பிரத்வ்ஹிட் 78(117), ஜோன்சன் சார்ல்ஸ்19(21),  ஏவின் லுவிஸ் 18(17), டொனல்ட் திரிபனோ 26/2(6), சோன் வில்லியம்ஸ் 52/2(10), கிராம் கிரிமர் 44/1(10)

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான நான்காவது போட்டி நவம்பர் மாதம் 21ஆம் திகதி புலவாயோவில் நடைபெறவுள்ளது.

புள்ளிகள் அட்டவணை

அணி போட்டி வெற்றி தோல்வி சமநிலை புள்ளிகள் ஓட்ட விகிதம்
மேற்கிந்திய தீவுகள் 2 1 1 7 +0.620
இலங்கை 2 1 1 5 +0.485
ஜிம்பாப்வே 2 0 1 1 2 -1.420