இலங்கைக்கு எதிரான தொடரில் சச்சின் மகன் அர்ஜூனுக்கு வாய்ப்பு

663

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், இலங்கைக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் முதற்தடவையாக இடம்பிடித்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 4 நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று (07) அறிவிக்கப்பட்டது.

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள் பட்டியலில் கோஹ்லி

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் …

சச்சின் டெண்டுல்கரின் மகன், அர்ஜூன் டெண்டுல்கரும் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். அர்ஜூன் நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம்பிடிக்க போராடி வந்தார். இந்நிலையிலேயே, அவர் தற்போது இலங்கைக்கு எதிரான 4 நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்குமான இந்திய இளையோர் அணியில் இடம்பிடித்துள்ளார்.

18 வயதான அர்ஜூன் டெண்டுல்கர், இடதுகை வேகப்பந்து வீச்சாளராகவும், சகலதுறை வீரராகவும் விளையாடி வருகின்றார். கடந்த சில ஆண்டுகளாக 14 மற்றும் 16 ஆகிய வயதுப் பிரிவுகளில் மும்பை அணிக்காக விளையாடிய அவர், கடந்த வருடம் நடைபெற்ற குச் பிஹார் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

எனினும், துடுப்பாட்டத்தில் பெரிதும் சோபிக்காத அவர், அவ்வணிக்காக விளையாடிய 5 இன்னிங்ஸ்களிலும் 18.80 என்ற சராசரியுடன் 94 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டார்.

அத்துடன், இவ்வருடம் ஜனவரி மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற குளோபல் டி-20 போட்டியில் விளையாடியிருந்த அர்ஜூன், 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தினார்.

மிகப் பெரிய ஓட்டத்தை நோக்கி ஆடும் இலங்கை அணி தடுமாற்றத்தில்

ட்ரினாடில் நடைபெற்று வருகின்ற இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு …

இதுஇவ்வாறிருக்க, சச்சினின் மிக நெருங்கிய நண்பரும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான சப்ரோடோ பெனேர்ஜீயிடம் சிறுவயது முதல் பயிற்சிகளைப் பெற்றுவருகின்ற அர்ஜூன் டெண்டுல்கர், சமீபத்தில் இந்திய வீரர்களுக்காக தரம்சாலாவில் நடைபெற்ற விசேட பயிற்சி முகாமிலும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை, இந்திய கிரிக்கெட் அணி வலைப்பயிற்சியில் ஈடுபடும் போது அர்ஜூன் டெண்டுல்கரும் பந்துவீச்சு பயிற்சிகளில் ஈடுபடுவதை அடிக்கடி காணமுடியும்.

இதில் கடந்த வருடம் மும்பை மைதானத்தில் நடைபெற்ற இந்திய –  நியூசிலாந்து அணிகளுடனான போட்டி மற்றும் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான பயிற்சிப் போட்டிகளில் வலைப் பந்துவீச்சாளராக அவர் செயல்பட்டிருந்தார். இதில் அர்ஜுனின் பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் விக்கெட் காப்பாளர் ஜொனி பெயாஸ்டோ உபாதைக்குள்ளாகியிருந்தமை முக்கிய விடயமாகும்.

இதேவேளை, தனது மகன் இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு தேர்வாகியிருப்பது தொடர்பில் சச்சின் டெண்டுல்கர் கருத்து வெளியிடுகையில்,

”இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு அர்ஜூன் தேர்வாகியிருப்பதை இட்டு நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். இது அவரது வாழ்க்கையின் முக்கிய மைல்கல்லாக அமையவுள்ளது. நானும், எனது மனைவி அஞ்சலியும் எப்போதும் அர்ஜுனின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுத்து அதற்கு பக்கபலமாக இருந்தோம். எனவே, அவருடைய எதிர்காலம் சிறப்பாக அமைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்” என தெரிவித்தார்.

எனவே, தந்தையைப் போலவே மகனும் இந்திய அணிக்காக சாதிப்பாரா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான 4 நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளின் அணித் தலைவராக டெல்லியைச் சேர்ந்த 18 வயதுடைய விக்கெட் காப்பாளரான அனுஜ் ராவத் செயற்படவுள்ளார். கடந்த 2017-2018 பருவகாலத்தில் ரஞ்சி கிண்ணத்தில் டெல்லி அணிக்காக விளையாடி சதம் மற்றும் இரண்டு அரைச்சதங்களையும் அவர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இந்திய 19 வயதுக்குட்பட்ட ஒரு நாள் அணியின் தலைவராக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய விக்கெட் காப்பாளரான ஆர்யன் ஜுயல் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பருவகாலத்தின் விஜய் ஹசாரே கிண்ணத்திற்காக இரண்டு ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ணப் போட்டிகளில் சம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியின் அங்கத்தவராகவும் இடம்பெற்றிருந்தார்.

கிரிக்கெட் காணொளிகளைப் பார்வையிட

இதேவேளை, ராகுல் டிராவிட் இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இணைந்துகொள்ளவுள்ளதால், இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக டபிள்யூ.வி ராமன் செயல்படவுள்ளார்.

முன்னதாக இவ்வருட முற்பகுதியில் நியூசிலாந்தில் நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ணத்தை ராகுல் டிராவிட்டின் பயிற்றுவிப்பின் கீழ் இந்திய அணி கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நான்கு நாள் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விபரம்:

அனுஜ் ராவத் (அணித் தலைவர், விக்கெட் காப்பாளர்), அதர்வா தைடே, தேவ்தத் படிக்கல், ஆர்யன் ஜுயல்,( உதவி தலைவர். விக்கெட் காப்பாளர்), யாஷ் ராதோட், ஆயுஷ் பதோனி, சமீர் சௌத்ரி, சித்தார்த் தேசாய், ஹர்ஷ் தியாகி, வை.டி மங்வானி, அர்ஜூன் டெண்டுல்கர், நேஹல் வதேரா, ஆகாஷ் பாண்டே, மோஹித் ஜங்கரா, பவன் ஷா

ஒரு நாள் தொடருக்ககான இந்திய அணி விபரம்:

ஆர்யன் ஜுயல்,(தலைவர், விக்கெட் காப்பாளர்), அனுஜ் ராவத் (உதவித் தலைவர், விக்கெட் காப்பாளர்), தேவ்தத் படிக்கல், அதர்வா தைடே, யாஷ் ராதோட், ஆயுஷ் பதோனி, சமீர் சௌத்ரி, சித்தார்த் தேசாய், ஹர்ஷ் தியாகி, வை.டி மங்வானி, அஜய் தேவ்காட், ஒய்.ஜெய்ஸ்வால், மோஹித் ஜங்ரா, ஆகாஷ் பாண்டே, பவன் ஷா

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…