35 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறாத ஜிம்பாப்வே

676

ஐக்கிய அரபு இராச்சியத்திடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த ஜிம்பாப்வே அணி அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்துள்ளது. இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அல்லது அயர்லாந்து அணிக்கு உலகக் கிண்ணத்திற்கு முன்னேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று (23) உலகக் கிண்ண தகுதிகாண்சுப்பர் 6′ சுற்றின் கடைசிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் வெற்றி பெறும் அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்று விடும். ஏற்கனவே இந்த தகுதிச் சுற்றுப் போட்டியில் பெரும் பரபரப்புக்கு மத்தியில் இரண்டு முறை உலக சம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி 2019 உலகக் கிண்ணத்திற்கு தனது இடத்தை உறுதி செய்து கொண்டது.   

மழையின் உதவியோடு மேற்கிந்திய தீவுகள் உலகக் கிண்ணத்திற்கு தகுதி

ஸ்கொட்லாந்துக்கு எதிரான போட்டியில் மழை குறுக்கிட்டதால் வெற்றியை சுவீகரித்துக் …

ஜிம்பாப்வே அணி தனது சொந்த மண்ணில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண தகுதிகாண் சுப்பர் 6 சுற்றின் வாழ்வா சாவா என்ற போட்டியிலேயே வியாழக்கிழமை (22) ஐக்கிய அரபு இராச்சியத்தை எதிர்கொண்டது.  

ஐக்கிய அரபு இராச்சியம் அதுவரை தனது சுப்பர் 6 சுற்றின் எந்த போட்டியிலும் வெற்றி பெறாமல் ஏற்கனவே உலகக் கிண்ண வாய்ப்பை இழந்த நிலையிலேயே இந்த போட்டியில் களமிறங்கியது.

ஹராரேயில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஐக்கிய அரபு இராச்சியம் மத்திய வரிசை வீரர்களின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் 47.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 235 ஓட்டங்களை பெற்றது. ரமீஸ் ஷஹ்சாத் 59 ஓட்டங்களைப் பெற்றதோடு குலாம் ஷப்பார் 40 ஓட்டங்களை பெற்றார்.

ஜிம்பாப்வே அணி சார்பில் சிகன்தர் ராசா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.  

எனினும் மழை காரணமாக போட்டி நீண்ட நேரம் தாமதித்ததால் ஜிம்பாப்வே அணிக்கு டக்வர்த் லுவிஸ் முறைப்படி 40 ஓவர்களுக்கு 230 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும், அந்த அணி 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

வெறும் 58 ஓட்டங்களுக்கு சுருண்ட இங்கிலாந்து

நியூஸிலாந்துக்கு எதிராக இன்று (22) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் …

இந்த தகுதிகாண் சுற்றில் ICC இணை அங்கத்துவ நாடொன்று முழு அங்கத்துவ நாட்டை வீழ்த்தும் மூன்றாவது தடவையாக இது அமைந்தது. இதற்கு முன் ஸ்கொட்லாந்து அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியதோடு, ஹொங்கொங் அணியினாலும் ஆப்கானை தோற்கடிக்க முடிந்தது.  

மறுபுறம் இந்த தோல்வியின் மூலம் 1983ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக 35 ஆண்டுகள் உலகக் கிண்ண போட்டிகளில் ஆடிவரும் ஜிம்பாப்வே அணி அடுத்த உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறவில்லை.

அயர்லாந்தா? ஆப்கானிஸ்தானா?

2019ஆம் ஆண்டு மே தொடக்கம் ஜூலை மாதம் வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவிருக்கும் 12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கை 14 இல் இருந்து 10 ஆக குறைக்கப்பட்டதால் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து நாடுகளுக்கும் உலகக் கிண்ணத்தில் ஆட முடியாத நிலை முதல் முறை ஏற்பட்டது.

இதுவரை ஒன்பது அணிகள் உலகக் கிண்ணத்தில் ஆட தகுதி பெற்றிருக்கும் நிலையில் 10ஆவது அணியை தீர்மானிக்கும் போட்டி இன்று அதே ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளது.  

மாகாணங்களுக்கு இடையிலான போட்டியில் மெதிவ்ஸ், அசேல, திசர

இலங்கையின் பிரதான உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் …

இதில் புதிதாக டெஸ்ட் வரம் பெற்ற அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சுப்பர் 6 புள்ளிப்பட்டியலில் அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தற்போது தலா 4 புள்ளிகளுடன் முறையே 4, 5 ஆவது இடங்களில் உள்ளன.

எனவே, இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி 10ஆவது அணியாக உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற்று விடும். எனினும் வழமைக்கு மாறான நிகழ்வுகள் ஏற்பட்டால் ஜிம்பாப்வே அணிக்கு உலகக் கிண்ணத்திற்கு முன்னேற அசாதாரண வாய்ப்பு ஒன்று உள்ளது. அதாவது ஆப்கான் மற்றும் அயர்லாந்து இடையிலான போட்டி குறைந்த ஓட்டங்கள் கொண்ட சமநிலையில் முடிவுற்றால் ஜிம்பாப்வேக்கு முன்னேற்றம் காண வாய்ப்பு ஒன்று உள்ளது.   

இன்றைய போட்டி மழையால் கைவிடப்படும் சூழல் ஏற்பட்டால் நிகர ஓட்ட வேகத்தின் அடிப்படையில் அயர்லாந்து அணிக்கு தொடர்ச்சியாக நான்காவது முறையாக உலகக் கிண்ணத்திற்கு முன்னேற முடியும். மறுபுறம் ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது தடவையாக உலகக் கிண்ணத்தில் ஆட போராடவுள்ளது.

சுப்பர் 6′ புள்ளிப் பட்டியல்

அணி போட்டி வெற்றி தோல்வி சமன் புள்ளி
மேற்கிந்திய தீவுகள்   05   04   01 00  08
ஜிம்பாப்வே   05   02   02 01  05
ஸ்கொட்லாந்து   05   02   02 01  05
அயர்லாந்து   04   02   02 00  04
ஆப்கானிஸ்தான்   04   02   02 00  04
ஐக்கிய அரபு இராச்சியம்   05   01   04 00  02