ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் மேலும் இரண்டு வீரர்கள்

2
Image Courtesy - ESPN Cricinfo

அயர்லாந்து அணிக்கெதிரான ஆப்கானிஸ்தான் டெஸ்ட் குழாமிற்கு ஏற்கனவே 14 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அறிமுக வீரர்களாக இரண்டு பந்துவீச்சாளர்கள் மேலதிகமாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அவ்வணியின் தேர்வுக்குழு தலைவரான தௌலத் அஹமட்சாயி தெரிவித்துள்ளார்.

இந்திய நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டு ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் இருதரப்பு தொடரில் விளையாடி வருகின்றது. முதல் தொடரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆப்கானிஸ்தான் அணி 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியிருந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஒரு போட்டி மழையினால் கைவிடப்பட தொடர் 2-2 என்ற அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் (10) சமநிலையில் நிறைவுக்கு வந்திருந்தது.

இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமப்படுத்தியது அயர்லாந்து

இந்நிலையில் இவ்விருதரப்பு தொடரின் இறுதி தொடரான ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுதினம் (15) ஆரம்பமாகவுள்ளது. இதற்கான இரு அணிகளினதும் டெஸ்ட் குழாம் இருதரப்பு தொடரின் ஆரம்பத்திலேயே அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது வெற்றியின் முக்கியத்துவம் கருதி ஆப்கானிஸ்தான் அணியினுடைய டெஸ்ட் குழாமில் மேலும் இரண்டு வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் டெஸ்ட் தொடருக்கான குழாம் அறிவிக்கப்பட்டிருந்த வேளையில் உடற்தகுதி பிரச்சினை காரணமாக குழாமில் சேர்த்துக்கொள்ளப்படாமல் இருந்த 20 வயதுடைய இளம் சுழல் பந்துவீச்சாளரான ஸாஹிர் கான் தற்போது உடற்தகுதி பரிசோதனை முடிவுகளின் பின்னர் கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக குழாமில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் சர்வதேச அறிமுகம் பெற்ற இவர் அப்போட்டியில் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். 2015ஆம் ஆண்டு முதல்தர போட்டி அறிமுகம் பெற்ற இவர் இதுவரையில் 7 முதல்தர போட்டிகளில் 12 இன்னிங்சுகளில் மாத்திரம் விளையாடி 34 முதல்தர விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மேலும் இங்கிலாந்தில் நடைபெறும் டி20 லீக் தொடரான டி20 பிளாஸ்ட் (Blast) தொடரில் லான்ஷியர் அணிக்காக விளையாடியுள்ளதுடன், கடந்த வருடம் (2018) நடைபெற்றிருந்த இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். இருந்தாலும் இவர் உபாதை காரணமாக குறித்த தொடரில் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் இளையோர் அணி, இஸ்லாமாபாத் யுனைடெட், காபுல் ஈகில்ஸ், லான்ஷியர், மிஸ் ஐனக் பிராந்தியம், ராஜஸ்தான் ரோயல்ஸ் போன்ற அணிகளுக்காக இவர் விளையாடியுள்ளார்.

டெஸ்ட் குழாமில் அடுத்த வீரராக 24 வயதுடை இளம் வேகப்பந்துவீச்சாளரான ஸெயிட் ஷிர்ஸாட் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு ஓமான் அணியுடன் நடைபெற்ற டி20 சர்வதேச போட்டியில் சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்ட இவர் 4 வருடங்களின் பின்னர் தற்போது நடைபெற்ற அயர்லாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் ஒருநாள் அறிமுகம் பெற்றிருந்தார்.

இந்நிலையிலேயே தற்போது இவருக்கு டெஸ்ட் அறிமுகம் பெறுவதற்கான வாய்ப்பு அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் வழங்கப்பட்டிருக்கின்றது. 2013ஆம் ஆண்டு முதல் தர டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் பெற்ற இவர் இதுவரையில் 15 போட்டிகளில் 25 இன்னிசுகளில் 49 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடரை வென்ற இங்கிலாந்து அணிக்கு புதிய தரவரிசையில் மூன்றாமிடம்

இரு அணிகளுக்குமிடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுதினம் (15) இந்தியாவின் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாவுள்ளது. குறிப்பாக இரு அணிகளும் கடந்த வருடம் சர்வதேச கிரிக்கெட் சபையினால் டெஸ்ட் அந்தஸ்து பெற்று ஒவ்வொரு போட்டிகளில் (ஆப்கானிஸ்தான் – இந்தியா, அயர்லாந்து – பாக்கிஸ்தான்) விளையாடியுள்ளது. தற்போது இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் சந்திக்கின்றன. இதன் மூலம் இரு அணிகளில் ஒரு அணிக்கு கன்னி டெஸ்ட் வெற்றி கிடைக்கவுள்ளதுடன், ஐ.சி.சி இன் டெஸ்ட் அணிகளின் தரவரிசையிலும் இடம்பெறுவதற்கான வாய்ப்பு எட்டியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் 16 பேர் கொண்ட குழாம்

அஸ்ஹர் ஆப்ஹான் (அணித்தலைவர்), முஹம்மட் ஸஹ்ஸாட், இஹ்ஸானுல்லாஹ் ஜனட், ஜாவிட் அஹ்மதி, ரஹ்மத் ஷாஹ், நாஸிர் ஜமால், ஹஸ்மதுல்லாஹ் சஹிடி, இஹ்ராம் அலிகைல், முஹம்மட் நபி, ரஷீட் கான், வபாதர் மொமான்ட், யாமின் அஹமட்ஸாய், ஸரபுடின் அஷ்ரப், வகார் ஸலம்கைல், ஸாஹிர் கான், ஸெயிட் ஷிர்ஸாட்  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<