இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன், பெல்ஜியமின் லக்ஸம்பர்க்கில் நடைபெற்ற ‘சி.ஏ.எஸ்’ சர்வதேச மெய்வல்லுனர் (CAS Meeting International) போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
உலக மெய்வல்லுனர் கண்ட போட்டித் தொடரின் சாலஞ்சர் போட்டியாக நேற்று முன்தினம் (26) நடைபெற்ற இப்போட்டியை நிறைவு செய்ய 10.25 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார். அதேபோல, இந்தப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற தகுதிகாண் சுற்றை 0.31 செக்கன்களில் ஓடி முடித்தார்.
இதனடையே, இப்போட்டியை 10.19 செக்கன்களில் நிறைவு செய்து போலந்தின் டொமினிக் கோப்பெக் முதலிடத்தைப் பிடிக்க, அவுஸ்திரேலியாவின் ஜேகப் டெஸ்பர்ட் 10.32 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
- ஜேர்மனியின் அன்ஹால்ட் மெய்வல்லுனரில் முதலிடம் பிடித்தார் யுபுன்
- ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்கான இலங்கை அணியில் யுபுன்
- தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனரில் பங்குபற்றும் சப்ரின், வக்ஷான்
இத்தாலியில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற யுபுன், இறுதியாக உலக தடகள கண்ட போட்டித் தொடரின் வெண்கலப் பிரிவு போட்டியாக பெல்ஜியத்தில் கடந்த 19ஆம் திகதி நடைபெற்ற ‘நைட் ஆஃப் அத்லெடிக்ஸ்’ மெய்வல்லுனர் (KBC Night of Athletics) போட்டியில், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.03 செக்கன்களில் ஓடிமுடித்து முதலிடத்தைப் பிடித்தார்.
அதுமாத்திரமின்றி, இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இத்தாலியில் நடைபெற்ற ‘ஜூசெப்பே தொமசோனி’ மெய்வல்லுனர் போட்டி மற்றும் கடந்த மாதம் ஜெர்மனியில் நடைபெற்ற ‘அன்ஹால்ட்’ மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றரில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியிருந்தார்.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<