இலங்கை அணியுடனான போட்டியில் பதிலடி கொடுப்போம் – குல்படீன் நம்பிக்கை

199
Gulbadin Naib
Image Courtesy - Getty Images

அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயற்பட்ட காரணத்தால் தமது அணிக்கு எதிர்பார்த்தளவு ஓட்டத்தை குவிக்க முடியாது போனதாகத் தெரிவித்த ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் குல்படீன் நயிப், இலங்கை அணியுடனான அடுத்த போட்டியில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் கிடைத்தால் நிச்சயம் நாங்கள் பதிலடி கொடுப்போம் என நம்பிக்கை வெளியிட்டார்.

ஆப்கானிஸ்தான் – அவுஸ்திரேலிய அணிகள் மோதிய உலகக் கிண்ணத் தொடரின் நான்காம் லீக் போட்டியில் அவுஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ஆப்கானிஸ்தான் இந்தப் போட்டியில் ஓரளவு துடுப்பாட்டம், பந்துவீச்சில் திறமைகளை வெளிப்படுத்தினாலும், அனுபவம் குறைந்த அந்த அணி விளையாடிய விதம் பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக இருந்தது.

இலகு வெற்றியுடன் உலகக் கிண்ண பயணத்தை தொடங்கியிருக்கும் அவுஸ்திரேலியா

கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் லீக் மோதல்களில் ஒன்றாக அமைந்த…

இந்த நிலையில், அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியின் பிறகு நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் குல்படீன் நயிப் தோல்வி குறித்து கருத்து வெளியிடுகையில்,

”அவுஸ்திரேலியா என்பது சம்பியன் அணியாகும். அவுஸ்திரேலியா போன்ற பலம் மிக்க அணிகளுடன் விளையாடுகின்ற போது சிறிய தவறுகளையேனும் விடக்கூடாது. எனவே எஞ்சியுள்ள எட்டு போட்டிகளும் மிகவும் கடினமாக இருக்கும். அனைத்து அணிகளும் எமக்கு சவாலாக இருக்கும் என நம்புகிறேன். எனவே இன்றைய போட்டியில் விட்ட தவறுகளை திருத்திக் கொண்டு அடுத்துவரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

இந்தப் போட்டியில் நாங்கள் நல்லதொரு ஆரம்பத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. முதலிரண்டு ஓவர்களில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுக்களை பறிகொடுத்தோம். எனினும், ரஹ்மத் ஷாஹ் மற்றும் மொஹமட் நபி ஆகிய இருவரும் மத்திய வரிசையில் சற்று நிதானமாக விளையாடி நம்பிக்கை கொடுத்திருந்தனர்.

எனினும். அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் அதற்கு இடமளிக்கவில்லை. அதேபோல இவ்வாறான ஆடுகளங்களில் 200 ஓட்டங்கள் என்பது மிகவும் குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும். உண்மையில் 250 அல்லது 275 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டால் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம். ஆனால் அந்த இலக்கை எம்மால் பெற்றுக் கொள்ள முடியாமல் போனது.

அதேபோல எமது வேகப் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். குறிப்பாக ஹமீத் ஹசன் சிறப்பாக பந்துவீசியிருந்தார். எனினும், எதிர்வரும் காலங்களில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் வழங்கினால் நிச்சயம் அது சுழல் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

Australia’s Warner stars in Afghan World Cup romp

This clip will only be available in Sri Lanka for viewing up to 3 days from the date of…

எனினும், இவ்வாறான ஆடுகளங்களில் சுழல் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட ரஷீத் கான் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகிய இருவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

இம்முறை உலகக் கிண்ணத் தொடரில், பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளைக் காட்டிலும், அவுஸ்திரேலியா போன்ற பலம் மிக்க அணியின் வேகப் பந்துவீச்சை சிறப்பாக சமாளித்து, துடுப்பாட்டத்தில் ஓரளவு ஓட்டங்களை எடுத்த ஆப்கானிஸ்தான் அணி, எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கை அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<