டயமண்ட் லீக் பதக்கத்தை மயிரிழையில் தவறவிட்ட யுபுன் அபேகோன்

156

இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற டயமண்ட் லீக் மெய்வல்லுனர் தொடரில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை வீரர் யுபுன் அபேகோன் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

போட்டியை அவர் 10.16 செக்கன்களில் நிறைவுசெய்தாலும், 0.001 மில்லி செக்கன்களால் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். 

உலக மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்வருடத்துக்கான டயமண்ட் லீக் மெய்வல்லுனர் தொடரின் 3ஆவது அத்தியாயம் இத்தாலியின் தலைநகரம் ரோமில் உள்ள ப்ளோரன்ஸில் நடைபெற்றது.

காற்றின் வேகத்தினால் இலங்கை சாதனையை தவறவிட்டார் யுபுன்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகளாக அமைந்த இத்தாலி டயமண்ட் லீக்கில் உலகின் முன்னணி மெய்வல்லுனர் பலர் களமிறங்கியிருந்தனர்.  

இதில் இத்தாலியில் அண்மைக்காலமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றவரும், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கை மற்றும் தெற்காசிய சாதனைகளை முறியடித்தவருமான யுபுன் அபேகோன் முதல்தடவையாக டயமண்ட் லீக் மெய்வல்லுனர் தொடரில் பங்குகொண்டார்.

இதன்மூலம் டயமண்ட் லீக் மெய்வல்லுனர் போட்டிகள் வரலாற்றில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட முதல் இலங்கையர் என்ற பெருமையை அவர் பெற்றுக்கொண்டார்.

அதுமாத்திரமின்றி, உலகின் முன்னணி வீரர்களுடன் போட்டியிட்ட அவர், 10.16 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்டார்.

இலங்கைக்கு ஒரு தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்த சந்தோஷத்தைப் பெற்றுக்கொடுத்த அவர், இந்தப் போட்டியின் மூலம் 5 புள்ளிகளைப் பெற்று உலக மெய்வல்லுனர் புள்ளிகள் பட்டியலில் 1210 புள்ளிகளுடன் 50ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

பெண்களுக்கான 10.000 மீட்டர் உலக சாதனையை முறியடித்த கிடே

எனவே, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவதற்கான இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள எதிர்வரும் 29ஆம் திகதி வரை உலக மெய்வல்லுனர் தரவரிசையில் முதல் 52 இடங்களில் உள்ள வீரர்களுக்கு டோக்கியோ ஒலிம்பிக் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, குறித்த போட்டியில் உலகின் முன்னணி குறுந்தூர ஓட்ட வீரர்களான அமெரிக்காவின் மைக்கல் ரொஜர்ஸ் மற்றும் ஐவரிகோஸ்ட்டின் ஆர்தர் கிஸ்ஸி ஆகிய வீரர்களை யுபுன் அபேகோன் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, குறித்த போட்டியில் முதலிடத்தை தென்னாபிரிக்காவின் அகானி சிம்பினி (10.08 செக்) பெற்றுக்கொள்ள, இரண்டாவது இடத்தை பிரித்தானியாவின் சிசிந்து உஜாஹ்வும் (10.10 செக்.), லைபீரியாவின் இம்மானுவெல் மடாடியும் (10.16 செக்.) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க…